“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ” சொன்னபடி வாழ்ந்த வாலி இன்று இல்லை…

வாலி கடந்து வந்த பாதை…(1931-2013)   கவிஞர் வாலி காலமானார்...! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

கவிஞர் வாலி, 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாள். பின் ஸ்ரீரங்கத்துக்கு குடி பெயர்ந்தார் வாலி. இளம் வயதில் நண்பர்களின் உதவியுடன் நேதாஜி எனும் கையெழுத்து பத்திரிகையை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. இதில் பங்கேற்ற பல இளைஞர்களில் ஒருவர் தான், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. துவக்க விழாவுக்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததாலும், வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக்கொடுக்கும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. இதன் மூலம் வாலியின் கவிதை திறன் வெளிப்பட்டது.

வாலியானது எப்படி…?

தமிழ் மேல் பற்று கொண்டிருந்த இளம் வயதில் வாலி ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவராக இருந்தார். பள்ளிப் பருவத்தில், பிரபல ஓவியர் மாலி மீது கொண்ட பற்றினால், தானும் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என விரும்பினார். இதையடுத்து நீயும் அவரைப் போல வரவேண்டும் என இவரது பள்ளி நண்பர் பாபு, இவருக்கு வாலி எனப் பெயர் வைத்தார்.

வாலிப கவிஞர்…!

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சிக்குப் பின், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பை முடித்தார். இவரை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சவுந்தர்ராஜன். 1958ம் ஆண்டு பாடலாசிரியராக சினிமாவில் கால்பதித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் முதல் இன்றைய தனுஷ், சிம்பு வரை சுமார் மூன்று தலைமுறை சினிமாவிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் சூப்பர்-டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பெருமைக்குரியவர் வாலி என்று சொல்லலாம். இவரது பாடல்வரிகளில் விஷேசம் என்னவென்றால் தூய தமிழ் வார்த்தைகள் மட்டுமல்லாது போஃக், ஹிப்-ஹாப் போன்ற பாடல்களையும் கலந்து கட்டி தனது பாடல் வரிகளில் கொடுக்கும் வல்லமை படைத்தவர். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாரும் பாடல்களை கொடுத்தவர்.

இதுக்கு மேல என்னால் முடியாது

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் உன்ன நெச்சேன் பாட்டு படிச்சேன் என்ற பாடல்… அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது.

பன்முக வாலி

பாடலாசிரியராக மட்டுமல்லாமல், அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், வாலிப வாலி… உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் 17 திரைப்படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வடை மாலை எனும் திரைப்படத்தை, மாருதிராவுடன் சேர்ந்து இயக்கியுள்ளார்.

பிடித்தது

* வெற்றிலை பாக்கு பிரியரான இவர், 15 வயதிலிருந்து தொடர்ந்த இப்பழக்கத்தை, 76 வயது வரை தொடர்ந்தார். பின் நிறுத்திவிட்டார். கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

* வெள்ளை மற்றும் சந்தன நிற ஆடையை விரும்பும் இவர், இதுவரை, வெளிநாடு எங்கும் சென்றதில்லை. இவருக்கு இஷ்ட தெய்வம், முருகன்; பிடித்த விளையாட்டு, கிரிக்கெட்.

மனம் மாறி வாலி

கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக தனது வாழ்க்கையில் ஒருமுறை தற்கொலை முடிவை எடுத்தார். அப்போது கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்துக்காக எழுதிய’  ‘மயக்கமா  கலக்கமா வாழ்க்கையில் வருத்தமா “என்ற பாடலில் ” உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு ” என்ற பாடல் வரியைக் கேட்டு வாலி மனம் மாறி, தற்கொலை முடிவை கைவிட்டார். இதன் பின் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

விருதுகள்…

வாலியின் கலைச்சேவையை பாராட்டி 2007ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர தமிழக அரசு மாநில விருதுகளை ஐந்து முறை (எங்கள் தங்கம் -1970, இவர்கள் வித்தியாசமானவர்கள் – 1979, வருஷம் பதினாறு, அபூர்வ ராகங்கள் – 1989, கேளடி கண்மணி – 1990, தசாவதாரம் – 2008) பெற்றுள்ளார்.

கடைசி பாடல்…

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்காக எழுதப்பட்டுள்ள கோடாளி மூடிச்சு போட்டு… என்று தொடங்கும் பாடல் தான் வாலி எழுதியிருக்கும் கடைசி பட பாடல். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வாலியின் பிரபலமான பாடல் வரிகள்….

புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.

வாலி அவர்கள் இன்று மண்ணுலகை விட்டு சென்றாலும் அவர் தந்த காலத்தால் அழியாத பாடல்கள் பல என்றும் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும் என்பது திண்ணம்…!!

source:::: Dinamalar …Tamil Daily &Yahoo India

natarajan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s