விநாச காலம் விபரீத புத்தி….!!!

 

ஒரு பக்கம் சுவாதி, நந்தினி, வினுப்பிரியா கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் பீதியூட்டிக் கொண்டிருக்க மறுபக்கம் பெரிதாக கவனம் பெறாத இரண்டு சம்பவங்கள் மேலும் கவலை அளிக்கின்றன. ஒன்று கிரிக்கெட் பந்தை எடுத்துத் தராத காரணத்தால் 25 வயது அண்ணன் 16 வயதுத் தம்பியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்ததில் தம்பி நினைவு தப்பிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்,காவல்துறை தம்பியின் உயிரிழப்புக்கு காரணமான அண்ணனை கைது செய்திருக்கிறது இது நமது தமிழ்நாட்டில் உடையார்பாளையத்தில் நிகழ்ந்த துர்சம்பவம்.

மற்றொன்று அண்டை மாநிலமான ஆந்திராவின் பஞ்சாரா ஹில்ஸில் பள்ளி மாணவர்கள் இருவருக்கிடையே நிகழ்ந்தது. தனியார் பள்ளி ஒன்றின் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அவனது அடிவயிற்றின் கீழ் பகுதியில் சரமாரியாக அடித்ததில் பாதிப்படைந்த சிறுவன் தொடர் சிகிச்சைக்குப் பின் குடல்பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஒரு வாரத்தில் ஓரிரு நாட்கள் இடைவெளியில் நடந்து முடிந்தவை.

இவை இரண்டிலும் நம்மை அச்சுறுத்தும் விஷயம் ஒன்றே! அண்ணனே சொந்த தம்பியை அடித்துக் கொல்வதும், தொடக்கப் பள்ளியைக் கூடத்தாண்டாத சிறுவன் ஒருவன் ஆத்திரத்தில் அவனை விட சிறியவன் ஒருவனை  சாகும் அளவுக்கு அடித்துத் துன்புறுத்துவதும் என்ன விதமான மனநிலை?! இங்கே குற்றவாளி யார்? அந்த இளைஞனா? சிறுவனா? அல்லது அவர்களின் வளர்ப்பு முறையா?

சாமானிய மனிதர்களுக்கு எப்போதாவது காலருகில் ஊறும் சிறு பூராணை அடித்துக் கொல்வதே உளவியல் ரீதியாகப் பெரும்பாடாக இருக்கிறது. உயிர்க்கொலை என்பது எப்பேற்பட்ட கொடூரம்! அறிந்தோ அறியாமலோ அந்த கொடூரத்தை நிகழ்த்திய பின் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் அறியாத வயது அந்தச்சிறுவனுக்கு என்று எடுத்துக் கொண்டாலும் 25 வயது இளைஞனுக்குமா அறியாத வயது! மொத்தத்தில் மனித உயிரின் நேசமதிப்பீடுகளை பற்றி கொஞ்சமும் சிந்தனை இல்லாமல் இப்படிச் செய்ய முடிவது ’விநாச காலம் விபரீத புத்தி’ என்று தான் கூறமுடியும்.

இப்படியான விபரீதங்களுக்கு முதல் காரணம் பின்விளைவுகளை பற்றிய யோசனையின்மை. அடுத்த காரணம் பொறுப்பின்மை மூன்றாவதாக சுயநலம் மட்டுமே பேணிக்கொள்ள வழிகாட்டும் வளர்ப்பு முறை. இந்தச் சம்பவங்களின் பின்புலனாக இத்தனை காரணம் இருக்கிறது. இவற்றையெல்லாம் சரி செய்து கொள்ள யார் சொல்லித் தரக்கூடும்?! பெற்றோர்களும் ஆசிரியர்களும் தானே முதல் வரிசையில் இருக்கிறார்கள்.பிறகு தானே இந்த சமூகம் வருகிறது.

பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோம்? விளையாடும் குழந்தைகள் விளையாட்டின் நடுவே சண்டையிட்டுக் கொண்டு வந்து புகார் கூறினால் எத்தனை பெற்றோர் நடுநிலைத் தன்மையில் அந்த விஷயத்தை கையாள்கிறோம்?! உண்மையைச் சொல்வதென்றால் ‘யாராவது உன்னை அடித்தால் பதிலுக்கு நீயும் அடி என்றோ’ ‘திட்டினால் நீயும் திட்டு’ என்றோ தான் இப்போதெல்லாம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள். இல்லையேல் இத்தனை வன்முறைக்கு அவசியமென்ன?

முதலில் நாம் நமது குழந்தைகளுக்கு எந்தச் செயலுக்கும் பின்னான விளைவுகளை பற்றி கற்றுக் கொடுத்தே வளர்க்க வேண்டும். ‘நீ உன் வகுப்பு ஆசிரியரை, தோழனை, நண்பர்களை அல்லது நீ இருக்கும் சூழலை வெறுக்கிறாயா? ஏன்? எதற்கு? என்று யோசித்து அதை நேர்மறையாக மாற்றிக்  கொள்ள வழி இருக்கிறதா என்று பார். அவர்கள் மேலுள்ள வெறுப்பை மாற்றவே முடியாது எனும் போது அடுத்த கட்டத்தைப் பற்றி எங்களிடம் கலந்து ஆலோசி. உடனடி வெறுப்போ,கோபமோ நிரந்தரத் தீர்வாகாது, உனக்காக நாங்கள் எப்போதும் உடனிருக்கிறோம் என்பதை மறந்து விடாதே’ எனும்படியான மனஉறுதியை நம் குழந்தைகளிடம் பதியச்செய்ய வேண்டும்.

இன்றைய தனிக்குடும்ப கலாச்சாரத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இப்படியான மனஉறுதி நிச்சயம் தேவைப்படுகிறது. பல வீடுகளில் வேலைக்குப் போகும் பெற்றோர் வீடு திரும்பும் வரை குழந்தைகள் வேலையாட்களுடன் தனித்து விடப்படும் சூழல் நிலவுவதால் தன்னிஷ்டமாய்  முடிவெடுக்கும் குழந்தைகள் பெருகி வரும் காலம் இது. அவர்களுக்குத் தேவை வேலையாள் இல்லை பொறுப்பான ஒரு கண்காணிப்பாளர். கண்காணிக்கும் வேலையை பெற்றோரை விட, நயமாக திறம்பட வேறு யாரால் செய்ய முடியும்? ஆகவே நம் குழந்தைகளின் செயல்களுக்கு பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ள நாம் மட்டுமே அவர்களின் செயல்களைக் கண்காணிக்கவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறக்கக் கூடாது.

அடுத்ததாக பொறுப்பின்மை; பொறுப்பு என்ற சொல்லை தமிழில் நாம் பல விதங்களில் பல பதங்களில் பயன்படுத்துகிறோம் .பொறுப்பு என்பது வெறும் சொல் மட்டுமே அல்ல அது ஓர் உணர்வு. உதாரணமாக மேல்மாடியில் இருந்து கொண்டு கீழ் நோக்கி குப்பையை  விட்டெறிந்தால் குப்பை  கீழே இருப்பவர்களின் தலையைப் பதம் பார்க்கும் என்று உணர்வது தான் பொறுப்பு. இந்தப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் அன்புக்குரிய சகோதரனை 25 வயது இளைஞன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றிருக்க மாட்டான்.முதலில் இந்த உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?! நமக்குள் கேட்டுக் கொண்டாக வேண்டிய கேள்வி இது. இப்படியான உணர்வு நமக்குள் இருந்திருந்து அதை நமது குழந்தைகளுக்கு வலியுறுத்தி இருந்தால் குழந்தைகள் அர்த்தமற்ற விபரீத செயல்களில் ஈடுபட வாய்ப்பே இல்லை.

யாருக்கு என்ன கஷ்டம் வந்தால் நமக்கென்ன? நாம் சவுகரியமாக  இருக்கிறோமா அது போதும் என்று மட்டுமே நினைக்கும் மனப்பான்மை சுயநலமானது. குழந்தைகளிடம், இளைஞர்களிடம் இந்த மனப்பான்மை வளர்ந்தால் அது ’வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு’. இன்றைய பெரும் விபரீதங்கள் பலவற்றிற்கு இந்த சுயநல மனப்பான்மையே அடிப்படை என்றால் பொய்யில்லை.ஆகவே கூடுமான வரையில் பெற்றோர்களும் சரி ஆசிரியர்களும் சரி தமது மாணவர்களிடையே பொறுப்புணர்வையும், பொதுநலத்தையும் வளர்த்தெடுத்தே ஆகவேண்டும்

முன்பெல்லாம் அரசுப்  பள்ளிகளில் நடுநிலைப் பள்ளி பிரிவில் ஒவ்வொரு நாளின் கடைசி வகுப்பிலும் நீதிக்கதைகள் போதிக்கப்பட்டன; இப்போதும் நீதிக்கதைகள் ’ஃலைப் ஸ்கில்’ என்ற பெயரில் பாடத்திட்டத்தில் உண்டு. ஆனால் இதை ஆசிரியர் தானே வகுப்பில் கதையாக  எடுத்துச் சொல்லி மாணவர்களுடனான சுவாரசியமான கலந்துரையாடலுடன் வகுப்பு முடிகிறதா என்றால் அது சந்தேகத்திற்கிடமானது. இந்தப் புத்தகங்களை மாணவர்கள் தாங்களே படித்துக் கொள்ள வேண்டியது தான் எனும் நிலை.

பெரும்பான்மை மாணவர்கள் நீதிக்கதைகளைப் படிப்பதாக தெரியவில்லை. அவர்கள் பாடங்களைப் படிப்பதோடு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் ஆறாம் வகுப்பிலிருந்தே ஐ,ஐ,டி நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புகள் என்று ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் நெட்ஒர்க் என்று தான் மனம் போகிறதே தவிர போதுமான வாசிப்பு பழக்கம் இல்லை என்பதே நிஜம்.

படிப்பு முக்கியம் தான் ஆனால் அதை விட முக்கியம் பண்பு. அதை நீதிக்கதைகளால் மட்டுமே போதிக்க முடியும் எனில் பள்ளிகள் அதற்காக ஒவ்வொரு நாளும் தனி வகுப்புகளை நடத்தினாலும் தவறில்லையே. ஒன்று பள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் வீட்டிலிருந்து  ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு  இரவையும் நமது  புராண, இதிகாச, பஞ்ச தந்திர, ஜாதக நீதிக்கதைகள் கதைகள் மூலம் குழந்தைகளுக்கான அருமையான  இரவாக நாம் ஏன் மாற்றக்கூடாது? இதிகாசங்களும் புராணங்களும் சிலருக்கு நம்பிக்கை தரவில்லை எனில் தவறே இல்லை காலத்திற்கு ஏற்றவாறு  புதிய நீதிக்கதைகளை நாமே ஏன் உருவாக்கக் கூடாது?!

அதற்கெல்லாம் நேரமில்லை எனில் நஷ்டம் நமக்குத் தான் எல்லோருக்கும் அவரவர் வேலை பெரிதே, ஆனால் இந்த நாட்டுக்கும் நமது வீட்டிற்கும் பொறாமை, காழ்ப்புணர்ச்சி, குரோதம், தீவிரவாதம்  போன்ற நஞ்சு ஊட்டப்படாத  மனம் கொண்ட இளம் சமுதாயத்தினர் தேவை எனில் நாம் அவர்கள் நலனுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.

தனிமை உணர்வும், நல்லது எது? கெட்டது எது? எனும் பாகுபாடு காணமுடியா குழப்பமும் குழந்தைகளை அணுகாமல் அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை ஆசிரியர்கள் அவர்களுக்குத் துணை நிற்பார்களாக!

Source……..By கார்த்திகா வாசுதேவன் in http://www.dinamani.com

Natarajan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s