இங்கிவரை யாம் பெறவே…..A.P.J. Abdul Kalam ….

kalam2

 

மானுடம் சூன்யம் ஆவதற்கோ, வெற்றிடம் ஆவதற்கோ காலம் என்றும் அனுமதித்ததில்லை. நிலைகெட்டிருக்கும் சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கென்று, அவ்வப்போது அருட்தூதுவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே, எனையிந்த யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் என வள்ளலாரும் இதனை உறுதிப்படுத்துகின்றார். மகாகவி பாரதியும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தர் இந்த நாட்டில் என அழுத்தம் திருத்தமாக உரைக்கின்றார். வள்ளலார் வந்த வழியிலும், பாரதி நடந்த பாட்டையிலும் தொடர்ந்து நடந்தவர்தாம், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

காலம் காலமாக இந்திய மக்கள் புண்ணியத்தைத் தேடி இராமேசுவரத்திற்கு வந்தனர். ஆனால், வைய மக்கள் கால்கள் நோகக்கூடாதென்று, புண்ணியமே ஒரு முடிவெடுத்து 15.10.1931 அன்று, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்னும் வடிவத்தில் இந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தது.

கலாமின் குடும்பம், பற்றாக்குறையின் கைகளில் பட்டுவாடா செய்யப்பட்டதால், எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே புளியங்கொட்டைகளைப் பொறுக்கி விற்று (இரண்டாவது உலகப்போர் நடந்த காலம்) ஓரணா சம்பாதித்ததையும், பின்னர் வீட்டுக்கு வீடு தினமணி செய்தித்தாள் போட்டதையும் அவரே கீழ்வருமாறு வருணிக்கிறார். “பத்திரிகைகளில் தினமணிக்கு ஏக கிராக்கி. என் அண்ணன் சம்சுதீன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கு முன்பு அதிலுள்ள படங்களைப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வேன். யுத்தம் பற்றிய செய்திகளை எல்லாம் எனக்கு ஜலாலுதீன் சொல்லுவார். பிறகு நான் அதைப்பற்றி தினமணியின் செய்தித்தாள்களில் படித்துப் பார்ப்பேன். இராமேசுவரத்தில் இரயில்கள் நிற்பதை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். இராமேசுவரம் இருப்புப் பாதையில், ஓடும் இரயிலிலிருந்து பத்திரிகைகளைக் கட்டுக்கட்டாக வீசுவார்கள். நான் அவற்றை எல்லாம் பிடித்து வாங்கி, அண்ணன் சம்சுதீனிடம் சேர்ப்பேன். அண்ணனிடம் வாங்கியதுதான் என் முதற் சம்பளம்’ என்பதாகச் சுய சரிதையில் விவரித்துள்ளார். பழமையை மறவாதவர்கள், என்றும் தம் நிலையில் தாழ மாட்டார்கள் என்பதற்குக் கலாம் அவர்களின் வாழ்க்கை, ஓர் உரைகல்.

கலாம் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், உயராய்வுக்கு (எம்.ஐ.டி.) வருகின்றபோது அவருக்குச் சோதனைகள் காத்திருந்தன. வெற்றிப்படிகளில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில், மலர்களைக் காட்டிலும் முட்களே அதிகமாக இருந்தன. எம்.ஐ.டி.யில் முதுநிலை ஆய்வுத் திட்டம் ஒன்றைப் பெற்று, அதற்குக் கிடைத்த உதவித் தொகையில்தான், அவருடைய எதிர்காலம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் அவருடைய ஆய்வின் வளர்ச்சியைப் பார்வையிட்ட பேராசிரியர், “கலாம், உன்னுடைய அறிக்கை எனக்கு நிறைவைத் தரவில்லை. நாளை காலைக்குள் ஒரு விமானத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடத்தை வரைந்து தராவிட்டால், உன்னுடைய உதவித்தொகை நிறுத்தப்படும்’ என்ற ஏவுகணையை ஏவிவிட்டுப் போய்விட்டார்.

எல்லையில்லாத மன நெருக்கடிக்கு ஆளானாலும் ஒரு பழைய கவிதையைத் தேடிப்பிடித்துப் படித்தார். “உனது எல்லா நாட்களிலும் தயாராய் இரு. எவரையும் சம உணர்வோடு சந்தி. நீ பட்டறைக் கல்லானால், அடி தாங்கு. நீ சுத்தியானால் அடி’ எனும் கவிதை நாடி நரம்புகளை அக்கினியாய் முறுக்கேற்றியது. மறுநாள் அப்பணியைச் செவ்வனே முடித்துத் தந்து, மேற்பார்வையாளரின் பாராட்டையும் பெற்றார். எது அவரைக் காயப்படுத்தியதோ, அதுவே அவரைச் சகாயப்படுத்தவும் செய்தது.

1958-இல் விமானப் படையில் விமானியாகப் பணியாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் டேராடூனுக்கு நேர்முகத்திற்குச் (இண்டர்வியூ) செல்லுகிறார். தெருவரைக்கும் வந்த நல் வாய்ப்பு, வாசற்படியை மிதித்தவுடன் கதவைச் சாத்திக் கொண்டது. எட்டு இடங்களுக்கு இவர் ஒன்பதாவதாக இடம் பெற்றதுதான் காரணம்

என்றாலும், சோர்வடையாமல் ரிஷிகேசத்திலுள்ள சிவானந்தர் ஆசிரமத்திற்குள் நுழைகிறார். அங்கு அவர் பெற்ற அனுபவத்தை, “கங்கையில் நீராடி ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அதிர்வலைகளின் வலுவான தாக்கத்தை உணர்ந்தேன். கருணை பொங்கும் முகத்தோடும், ஊடுருவிப் பார்க்கும் விழிகளோடும் புத்தரைப் போலக் காட்சியளித்த சுவாமி சிவானந்தரிடம் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய முஸ்லிம் பெயர், அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் வாயைத் திறப்பதற்கு முன்பே, என் துயரத்தின் மூலக் காரணம் பற்றி வினவினார்’ என விவரிப்பதிலிருந்து, கோபுரங்களுக்கு வேற்றுமைகள் தெரிவதில்லை என்ற உண்மையை அறியலாம்.

கலாம் 1981-இல் பத்மவிபூஷண் விருது பெற்று, இராமேசுவரத்திற்குள் நுழைகிறார். மசூதி தெருவில் ஜலாலுதீன் அவரை வரவேற்று நிற்கிறார். பள்ளி வாழ்க்கையில் கற்பித்த பட்சி லட்சுமண சாஸ்திரிகள் கலாமின் நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்குகிறார் தொடர்ந்து அருட்தந்தை சாலமன் புனித சிலுவையை ஏந்தி ஆசீர்வதிக்கின்றார். மேலும், கலாம் தம்முடைய வெற்றிக்குக் காரணமானவர்களாக மூன்றுபேரை அடிக்கடி சொல்லுவார். (1) விக்ரம் சாராபாய், (2) சதீஷ் தவன், (3) பிரம்ம பிரகாஷ். 40 பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டயங்களையும், பாராட்டுக்களையும் பெற்றபோதெல்லாம், தம்மைச் செதுக்கிய சிற்பிகளை அவர் மறந்ததே இல்லை

ஆலமரத்தின் கிளைகள் வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டே போனாலும், அதன் விழுதுகள் பூமியை நோக்கித்தான் பயணிக்கும். அதுபோல கலாம் அவர்கள் ஏவுகணை உலகத்திலும், ராக்கெட் உலகத்திலும் விண்ணளவு புகழ் பெற்றாலும், அவருடைய இதயம் அடித்தளத்து மக்களை நோக்கித்தான் கசித்து கொண்டிருந்தது. 2020-இல் குடிதண்ணீர் பஞ்சமில்லாத தேசத்தை உருவாக்க வேண்டுமென்று, தண்ணீரைத் தேசியமயமாக்க வேண்டும் என்றார்.

கலாம் வாழ்க்கையில் மகத்தான மாறுதலை ஏற்படுத்தியது, சுவாமிஜி பிரமுக் அவர்களுடைய தரிசனம் ஆகும். (பாப்ஸ் சுவாமிநாராயண் சம்பிரதாய ஆசிரமத்தின் குருநாதர்). நிவேதிதாவின் தரிசனம் மகாகவி பாரதியிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அந்த மாற்றத்தை பிரமுக் சுவாமிஜியின் தரிசனம், கலாமிற்குத் தந்தது எனலாம். அக்குருஜியே தம் வாழ்க்கையின் முடிந்த முடிவான குருஜி எனக் கலாம் எழுதுகின்றார். அக்குருநாதரைக் கலாம் 14 ஆண்டு கால இடைவெளியில் எட்டுமுறை சந்தித்து ஆத்ம விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார். கலாம் எழுதிய கடைசி நூல்: ‘The Transcendence : My Spiritual Experiences with Pramuk Swamiji’  என்பதாகும். பாரத ரத்னா கலாம் தம் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் எழுதப்பட்ட நூல் இது.

27.07.2015 அன்று ஷில்லாங் நிர்வாகவியல் உயராய்வு மையத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு பூகம்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிம்பொனிக் சக்கரவர்த்தி பீத்தோவன் எப்படித் தம்முடைய பியானோவில் தலை வைத்தபடி மறைந்தாரோ, அப்படித்தான் கலாம் மாணவர்கள் மத்தியில் தலை சாய்த்தார். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போட்ட ஒரு மாமனிதரின் மறைவை, உலகத்தின் அத்தனைச் செய்தித்தாள்களும் கண்ணீரால் அச்சிட்டன. தமக்கென்று ஒரு தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லாதவரின் மரணத்திற்கு அத்தனைத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் அழுது தீர்த்தன. அவரால் அனுதினமும் மீட்டப்பட்ட வீணை, விதவை ஆயிற்று. பெருந்தலைவர்களின் மறைவுக்கு டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்கள், முதல்முறையாக இராமேசுவரத்தை நோக்கி பயணித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, “தம்முடைய அறிவியல் சாதனைகளின் மூலம் இந்தியாவை மிக உயரமான இடத்திற்கு அழைத்துச் சென்றவர் கலாம். அவரது மறைவு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்’ என்றார்.

அவருடைய மறைவைக் கண்ணீரில் மட்டும் கரைத்துவிடாமல், நிலைத்து நிற்கக் கூடிய ஓர் அஞ்சலியைச் செலுத்தியது, தமிழக அரசு. அவருடைய பிறந்த நாளாகிய அக்டோபர் 15-ஆம் தேதியை இளைஞர்களின் மறுமலர்ச்சி நாளாக அறிவித்தது. வியத்தகு சாதனைகளை நிகழ்த்தும் இளைஞர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூபாய் ஐந்து லட்சம், ஒரு சவரன் தங்கத்துடன் வழங்கப்படும். காற்றுள்ளவரை, இராமேசுவரம் கடற்கரை மணல் இருக்கும்வரை, இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம் எனும் கீதம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Source…..By பேராசிரியர் தி. இராசகோபாலன் in http://www.dinamani.com

Natarajan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s