மார்னிங் டூ ஈவினிங் : சர்வம் டிஜிட்டல்மயம்…!!!

 

முழுக்க டிஜிட்டல்மயமான இந்த கலர்ஃபுல் யுகத்தில் செல்போனும், இன்டர்நெட்டும் இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவதுதான் இப்போது ஒருவனுக்கு உச்சபட்சத் தண்டனையாக இருக்கும். இன்றைய ட்ரெண்டி சமூகத்தின் மக்களிடம் டெக்னாலஜியின் வெளிப்பாடு எப்படி இருக்கிறது……………..

என் போனுக்குக் காசு போடணும்’னு பத்து வருசத்துக்கு முன்னாடி யாராவது சொன்னால், நூறு ரூபாய்த் தாளை குறுக்குவாட்டில் மடிச்சு போனுக்குள்ள திணிக்கணும் போலன்னு நினைச்சுருப்போம். போன் லாக் ஓப்பன் ஆக மாட்டேங்குதுனு சொன்னதுக்காக, அதை அப்படியே வாங்கிக் கால் இடுக்கில் உட்கார வெச்சு சுத்தியலால் அடிச்சு பல துண்டாக்கிக் கொடுப்பாரே வடிவேலு. அந்த மாதிரி பேட்டரியைக் கழட்டுவதற்கு, ரெண்டு கையாலும் தூக்குச்சட்டி மூடியைக் கழட்ட முயற்சிப்பது போல போனை இழுத்துக்கொண்டு கிடப்பதும் ஒருகாலத்தில் நமக்கு நடந்திருக்கும். இப்போதெல்லாம் நிகழ்வு அப்படியே தலைகீழ். சின்னக் குழந்தைகளும் கேண்டி க்ரஷ் முதல் க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் வரை வருடக்கணக்காக விளையாடி விளையாடி டயர்டாகிப் போய்க் கிடக்கிறார்கள்.

 

* முன்னொரு காலத்தில் கம்ப்யூட்டரில், ‘ ஃபைல்ஸ் அனுப்பியாச்சா?’னு யாரிடமாவது கேட்கும்போது ‘பீரோவில் பத்திரமா வெச்சுருக்கேன். எடுத்துட்டு வரவா’னு கேட்டுக் கிச்சுக்கிச்சு மூட்டிய அப்பாவிச் சமூகத்துக்கும், இப்போ ‘வீட்டு விண்டோஸை க்ளோஸ் பண்ணிரும்மா’னு சொன்னாலே ‘அப்பவே சிஸ்டம் ஷட் டவுன் பண்ணிட்டேனே’ எனச் சொல்லும் டெக்னிக்கல் சமூகத்திற்கும் இடையே இருக்கும் ஈஃபிள் டவர் உயர வித்தியாசமே இந்தக் காலம் டிஜிட்டல் யுகமாகிப் போனதற்கான சான்று. கையகலக் கைபேசிக்குள் உலகமே ஒளிந்திருக்கும் விந்தைகள் தெளிவான பின்பு ‘இத்துனூண்டு போனுக்குள்ளேயா இம்புட்டு இருக்கு?’ எனச் சொல்லியபடியே பல் போன கிழவிகளும் காதில் செல்வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

* தனியாக இருப்பதாக நினைப்பதே இப்போதெல்லாம் கையில் மொபைல் இல்லாத தருணங்களிலும், மொபைல் இருந்தும் சார்ஜ் இல்லாத கையறுநிலைகளிலும்தான். யார் எவ்வளவு தொலைவில் இருந்தால் என்ன? கண்காணாத இடத்துக்குக் கண்ணைக்கட்டி கொரியரில் அனுப்பப்பட்டாலும் ‘யாமிருக்க பயமேன்’ எனத் துணை நிற்கின்றன தொலைத்தொடர்பு சாதனங்கள். நவீன கருவிகள் மனிதனைச் சோம்பேறியாக்குகின்றன என ஆங்காங்கே ஆய்வறிக்கைகளில் சொல்லப்பட்டாலும், பள்ளிக்கூடம் போகும் சிறுவர்கள் மெசேஜ் டைப் செய்யும் வேகத்தைப் பார்த்தாலே அந்தக் கருத்து நம் மனதில் ஒரு நிமிடத்தில் உடைபட்டுப் போகும். முடியும்ம்மா…?

பிள்ளையாருக்கு எலி வாகனமானது போல இப்போது நம்மில் பலருக்குப் பேருதவி புரிந்துகொண்டிருப்பது மவுஸோ, ஸ்மார்ட்போனோதான். தூங்கி விழிக்கும்போதே மொபைல் போன், நோட்டிஃபிகேஷன் சத்தத்தோடு வெளிச்ச நட்சத்திரங்களைத் தூவி வரவேற்கின்றன. பல்லைக்கூட விலக்காமல் பெட் காபி சாப்பிடுவது போல் பெட்ஷீட்டுக்குள் புகுந்தபடி, வந்திருக்கும் வாட்ஸ்-அப், ஹைக் மெசேஜ்களுக்கு ரிப்ளைகளைத் தெறிக்கவிடுகிறோம். முதல்நாள் நள்ளிரவில் போட்ட செல்ஃபிக்கு வந்திருக்கும் போட்டோ கமென்ட்ஸ்களுக்கு பதில் கமென்ட்கள் இட்டு மனசைத் தேற்றிக்கொள்கிறோம். பத்து ‘ப்ப்பா..’ கமென்ட்களுக்கு மத்தியில் ஒற்றை ‘ஆசம்’ கமென்ட் தரும் பேரின்பம் ஃபேஸ்புக் வாழ் மக்களுக்கு மட்டுமே புரியும்.

* நல்ல விஷயங்களைப் பகிர வேண்டும்னு நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த விஷயத்தை ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ங்கிற பார்த்திபன்-வடிவேலு காமெடிக் கதையாகிக் கடைசியில் ‘பகிரப்படும்’ எனும் வார்த்தையை மட்டும் கப்பெனப் பிடித்துக்கொண்டு நல்ல சேதி, கெட்ட சேதி, நாலு வருசத்துக்கு முன்னாடியே குழிதோண்டிப் புதைச்ச சேதினு எல்லாத்தையும் தோண்டியெடுத்துப் பகிரோ ‘பகீர்’னு ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கோம். வாய்க்கு வந்த எதையாவது சொல்லிட்டு விவேகானந்தரையும், ஐன்ஸ்டீனையும் இழுத்துத் தெருவில் விட்டுக்கிட்டு இருக்கோம்.

* போஸ்ட் பிடிக்கலைனா கம்முனு அடுத்த பேஜை ஸ்க்ரோல் பண்ணிப் பார்த்துப் போய்க்கிட்டே இருப்போம்ல, வாழ்க்கையிலும் அதே மாதிரி நல்லது, கெட்டதுனு தினந்தினம் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கும். நமக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டும் சிம்பிளா லைக் பண்ணிட்டு, சில நேரங்களில் ஹார்ட்டின் சிம்பள் போட்டு அபரிமிதமான விருப்பத்தைத் தெரிவிச்சுக்கிட்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக்கணும். விரும்பத்தகாத நிகழ்வுகளை நிறுத்தி நிதானமாகப் பார்த்து உணர்ச்சிவசப்படுறதுக்குப் பதிலா அப்படியே அப்பீட்டாகி அடுத்த நல்ல நிகழ்வுக்கு ‘கிருட்டுக் கிருட்டு’னு ஜம்ப் பண்ணி ட்ராவல் ஆகிட்டே இருக்கணும்னு சுவாமி மார்க்கானந்தா தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற தன்னோட டைம்லைன்ல எழுதி வெச்சுருக்கிறதா ஒரு ஷேரிங் ஸ்டேட்டஸ் சொல்லுது.

* ஒரு டேப்லட் அளவு மூஞ்சியில் ஒன்பது ஃபில்டர் அப்ளிகேஷன்களைப் போட்டுப் படுத்தியெடுத்து ப்ரொஃபைல் பிக்சரை மாத்திட்டு அதை லைக் பண்ணச் சொல்லி ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருக்கும் மூவாயிரம் பேருக்கும் ப்ரைவேட் சாட்டில் லிங்க் அனுப்பி ‘ஆதரவு தாரீர்!’ எனக் காலில் விழுந்து போட்டோக்கள் போட்டாலும் தானாகக் கிடைக்கிற முப்பது லைக்தான் நம்ம டைம்லைன்ல ஒட்டும். நாம் செய்யும் சில பல நல்ல விஷயங்களுக்கு ( நல்ல விஷயமா அப்படின்னா…?) ப்ரோமோஷன் கொடுத்து அடுத்தவர்களையும் அதைச் செய்யுமாறு ஊக்குவிக்கணும். அதுக்குக் கிடைக்கிற வெகுமதியை எப்படி இருந்தாலும் மனதார ஏத்துக்கணும். பில்டப் பண்றமோ, பீலா விட்றமோ… அது முக்கியமில்லை. நாம என்ன பண்ணினாலும் இந்த உலகம் நம்மை உத்துப் பார்க்கணும். அவ்ளோதான்.

சங்ககாலத்துல புறா விடு தூது, நாரை விடு தூதுன்னு பறக்கிற ஒரே காரணத்துக்காக பறவைகளோட காலில் லெட்டரைச் செருகி நாடுவிட்டு நாடு இதயங்களை அனுப்பி வாயில்லா ஜீவன்களை வதக்கி, வெயிலில் பறக்கச் சொல்லிப் பாடாய்ப்படுத்தியதெல்லாம் பழைய கதை. போகிறபோக்கில் பொண்ணைப் பார்த்தோமா பெயரைக் கேட்டோமா?, ஃபேஸ்புக் ஐடியைத் தேடினோமா? ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தோமா? ப்ரோபோஸ் பண்ணினோமா?னு பலகட்டப் பரிமாற்றங்களையும் ஓவர் நைட்டிலேயே முடிச்சு அடுத்த நாள் பிக்கப் ஆகி, அதற்கடுத்த நாள் ப்ரேக்-அப் ஆனாலும் அசால்ட்டா அன்ஃப்ரெண்ட் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிடுவான் டிஜிட்டல் உலகத்து இளைஞன்.

* 4ஜி போன் இருக்கு. வீடியோ காலிங் ஆப்ஷனும் இருக்கு. பிறகென்ன, எல்லோருக்கும் கான்ஃபரன்ஸ் கால்ல மீட்டிங்கைப் போட்டுப் பத்துமணிக்கு மேல் சியர்ஸ் சொல்லிப் பார்ட்டியை ஆரம்பிக்க வேண்டியதுதான். தூரத்து நண்பனின் அருகில் இருக்கும் கடலை பர்பியையும், மிக்சர் பாக்கெட்டிலும்தான் நினைத்தவுடன் கைவைத்து அள்ள முடியாது. மற்றபடி, ஸ்கைப்பிருக்க ஜாலிக்கும் அரட்டைக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. வெட்டியாய்க் கிடக்கும் வாட்ஸ்-அப் குரூப்பில் அவ்வப்போது பழங்கதை பேசி சாவடிக்குபோது, மகான் சசிகுமார் ‘மூடிக்கிட்டுப் படுங்கடா நொன்னைகளா…’ எனச் சொன்னதைப்போல… ‘குரூப்பைக் கலைச்சுத் தொலைங்கடா…’ எனக் கதறும் தூரம் தொலைவில் இல்லை.

ஆகவே மக்களே… எல்லாவற்றையும் டிஜிட்டல் யுகத்திற்கேற்றார்போல் மாற்றிக்கொண்டு ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஜெட்களில் பறந்துகொண்டிருக்கும் நாம் எதிரில் வருபவர்களை எனிமிகளாய்ப் பார்த்து எரிக்கும் சிவப்பு மூஞ்சி எமோட்டிகான் போட்டுத்தான் கடந்து செல்வோம் என அடாவடித் திட்டங்களாகவே வைத்திருந்தால் எப்படி? சின்னதாய் ஒரு ஸ்மைலி போடலாமே ஃப்ரெண்ட்ஸ்!

– விக்கி….www.vikatan.com

Natarajan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s