பறவைகள் மோதிய விமானம்… ஆற்றில் இறக்கிய பைலட்… விமான வரலாற்றில் ஒரு ‘வாவ்’ சம்பவம்!


 

 

 

 

 

 

 

 

 

 

2009 ஆண்டு ஜனவரி 15 குளிர்காலத்தின் வியாழக்கிழமை. நியூயார்க் நகரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருக்கிறது. லகுவார்டியா விமானநிலையம் பரபரப்பாக இருக்கிறது. விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. விமானங்களுக்கு ஓடுபாதையில் இறங்க வேண்டிய நேரத்தை சிக்னலாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். லகுவார்டியாவிலிருந்து US ஏர் பஸ் 1549  A320 என்கிற விமானம் நார்த் கர்லோநியாவில் உள்ள சார்லோட்டி விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகிறது. 66 டன் எடை கொண்ட விமானம் இரண்டு என்ஜின்களைக் கொண்டது. இரண்டு என்ஜின்களும் 40000 குதிரைத் திறன் கொண்டவை. பைலட்டின் பெயர் செஷ்லே சுல்லேன்பெர்கர் (Chesley Sullenberger). வயது 57. இவர் அமெரிக்க விமானப்படையில் பைலட்டாக  இருந்தவர். மொத்தம் 19663 மணி நேரம் பறந்தவர். அதில் 4765 மணி நேரம் A320 விமானத்தில் பயணித்தவர்.

ஏர் பஸ் 1549  A320 விமானத்தில் 150 பயணிகளும் ஐந்து விமானச் சிப்பந்திகளும் பயணிக்கிறார்கள். விமானம் கிளம்புவதற்கான ஒப்புதல் நிலைய அதிகாரிகளிடமிருந்து கிடைக்கிறது. விமான நிலையத்தின் நான்காவது ஓடுபாதையிலிருந்து மாலை 3:24:56 நொடிகளுக்கு விமானம் புறப்படுகிறது.

விமானம் 2818 அடி உயரத்தில் 343 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது. விமான முகப்புப் பகுதியில் விமானத்தின் முன்பாக பறவைகள் வருவதை பைலட் பார்க்கிறார். அவை கனடா கீஸ் வகை பறவைகள். 3:27:11  பறவைகள் விமானத்தின் எஞ்சின் பகுதியில் மோதுகின்றன. பறவைகள் மோதியதில் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் பழுதாகின்றன. விமானம் பழுதானதை உணர்கிற பைலட் உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவலைத் தெரிவிக்கிறார். 3:27:33 வினாடிகளில் “விமானத்தில் பறவைகள் மோதிவிட்டன.  உடனே விமானத்தை லகுவார்டியாவில் தரை இறக்க வேண்டும் ஓடுபாதையை கிளியர் செய்து கொடுங்கள்” என்கிறார். நிலைமையின் தீவிரத்தை அறியாத விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை நியூ ஜெர்சியில் இருக்கிற டேடேர்போரோ விமான நிலையத்தில் இறக்குங்கள் எனத் தகவல் சொல்கிறார்கள்.

“விமானத்தை டேடர்போரோவில் இறக்குவதற்குச் சாத்தியமில்லை” என பைலட் பதிலளிக்கிறார். விமானம் ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்திற்கு மேலாகப் பறந்துக்கொண்டிருக்கிறது. பயணிகளுக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. விமானத்தில் இருக்கிற 150 பயணிகளையும் காப்பாற்றியாக வேண்டிய அசாதாரண சூழ்நிலை. நொடிக்கு 18 அடி கீழ் நோக்கி விமானம் சென்றுகொண்டிருக்கிறது. தீவிரத்தை உணர்கிற பைலட் 3:28:10 நேரத்தில் விமானத்தை அட்சன் பகுதியில் இறக்குவதாக விமான நிலையத்திற்குத் தெரிவிக்கிறார். ஆனால், விமான நிலைய அதிகாரிகள் ”அட்சன் பகுதியிலா வேண்டாம்” என்கிறார்கள். காரணம் அட்சன் என்பது ஓடுதள பகுதி அல்ல என்பதே. நியூயார்க் நகரத்தில் இருக்கிற ஒரு ஆறு. ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் இருக்கிற நகரின் பரபரப்பான பகுதி. மொத்த விமான நிலையமும் பதற்றத்திற்கு வருகிறது. அட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாகச் செல்லும் ஆறு. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள்.

வேறு வழியின்றி விமானத்தை பைலட் அட்சன் ஆற்றுப் பகுதியில் இறக்க முடிவு செய்கிறார். பயணிகளுக்கு நிலைமை எடுத்துச் சொல்லப்படுகிறது. விமான ஒலிபெருக்கியின் மூலம் விமானிப் பயணிகளுடன் உரையாடுகிறார். பயணிகள் பயத்தில் உறைகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத சூழல். விமான நிலையக் கட்டுப்பட்டு அறையில் இருக்கிற அதிகாரிகள் நியூயார்க் கடற்படைக்குத் தகவல் கொடுக்கிறார்கள். கடற்படையின் படகுகள் கப்பல்கள் குறிப்பிட்ட இடத்திற்குக் கிளம்புகின்றன. பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள், படகுகள் என அட்சன் ஆறு மிகப்பெரிய விபத்திற்கு தயாராகிறது

3:30  நிமிடத்திற்கு பைலட் விமானத்தை அட்சன் ஆற்றில் இறக்குகிறார். ஆற்றுக்கும் விமானத்திற்குமான இடைவெளி 500 அடியிலிருந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. 100 அடி, 50 அடி, 20 அடி, 10 அடி எனக் குறைகிறது. 0.  அவ்வளவுதான். அதிபயங்கரச் சத்தத்துடன் விமானம் ஆற்றில் பாய்கிறது. அட்சன் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கிற மக்கள் பேராபத்தை உணர்கிறார்கள். விமானம் ஆற்றில் பாய்ந்த அடுத்த நிமிடம் ஆற்றில் மிதக்க ஆரம்பிக்கிறது. நல்ல வேளையாக விமானம் தீப்பிடிக்கவில்லை. விமானத்தின் தானியங்கி கதவுகள் மூடிக்கொள்கின்றன. கதவுகள் மனித முயற்சியில் திறக்கப்படுகிறது. அடித்துப் பிடித்துக்கொண்டு பயணிகள் விமானத்திலிருந்து வெளியே வருகிறார்கள். சிலர் பதற்றத்தில் வெளியே குதிக்கிறார்கள். குளிர்காலம் என்பதால் நீர் ஐந்து டிகிரி குளிராக இருக்கிறது. விமானத்திலிருந்து வெளியே வந்தவர்களை குளிர் வாட்டி வதைக்க ஆரம்பிக்கிறது. விமானத்தின் இறக்கைப் பகுதிகளில் ஏறி நின்று  கொண்டு உதவிக்கு அழைக்கிறார்கள். விமானம் ஆற்றில் இறங்கிய நான்கு நிமிடங்களில் கடற்படையின் படகுச் சம்பவ இடத்திற்கு வந்து சேர்கிறது. பயணிகளில் ஒருவர் மாற்றுத் திறனாளி. விமானம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்க ஆரம்பிக்கிறது. கடற்படை வீரர்கள் பயணிகள் எல்லோரையும் பத்திரமாக மீட்கிறார்கள். படகுகள் மூலம் எல்லோரும் மீட்டு ஆற்றின் கரைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். 3:55 நிமிடத்தில் விமானத்தின் கடைசிப் பயணியும் பத்திரமாக மீட்கப்படுகிறார். எல்லோரும் காப்பாற்றபட்டார்கள் என்பதை உறுதி செய்கிற விமான பைலட் கடைசியாக வெளியே வருகிறார். ஐந்து பயணிகள் பெரிய காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். எழுபத்தி எட்டு பயணிகளுக்குச் சிறிய காயங்கள். சிலர் குளிர் காய்ச்சலுக்கு ஆளானார்கள். ஒரு பயணிக்கு விமானத்தின் எரிபொருள் கண்ணில் பட்டதில் பார்வை போனது.

பெரிதாக எந்த அசம்பாவிதமும் அந்த விபத்தில் நிகழவில்லை. பயணிகள் பைலட்டை தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். விபத்து நடந்த இரண்டாம் நாள் விமானம் ஆற்றுப் படுக்கையிலிருந்து மீட்டு நியூ ஜெர்சிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. விஷயம் நீதி மன்றத்துக்குச் செல்கிறது. விமான நிர்வாகம் விமான பைலட்டை குற்றம் சாட்டுகிறது. விமானத்தை டேடர்போரோ விமான நிலையத்தில் தரை இறக்கி இருக்கலாம்; அதற்கான நேரம் இருந்தது. ஆனால் விமானி அவசரப்பட்டு விமானத்தை ஆற்றில் இறக்கிவிட்டார் என வாதாடுகிறது. விமானி செஷ்லே சுல்லேன்பெர்கர் அந்த நேரத்தில் பயணிகள் உயிர் குறித்து மட்டுமே சிந்தித்ததாகச் சொல்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத விமான நிறுவனம் நீதிமன்ற உத்தரவுபடி ஒரு விமானத்தை சோதனை முயற்சியாக விபத்து நடந்த இடத்திலிருந்து டேடர்போரோ விமான நிலையத்தி இறக்கிக் காட்டுகிறது. ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி ”சோதனை செய்யப்பட்ட விமானிக்கு என்ன நடக்கப்போகிறது எனத் தெரியும். அதனால் அவர் எளிதாக விமானத்தை தரையிறக்கி விட்டார். மேலும் அவர் அதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆனால் என்னுடைய நிலை வேறு” எனச் சொல்லி வாதிடுகிறார்.

விமான நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் ஒரு  சோதனை முயற்சியில் இறங்குகிறது. நடுவானில் விமானத்தின் இரு எஞ்ஜின்களையும் செயலிழக்கச் செய்து டேடர்பெரோ விமான நிலையத்தில் தரை இறக்குகிற முயற்சியில் இறங்கியது. விமானம் பெரிய சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகிறது. அனைத்தையும் ஆராய்ந்த நீதிமன்றம் செஷ்லே சுல்லேன்பெர்கர் செய்தது சரி எனச் சொல்லி தீர்ப்பளிக்கிறது. செஷ்லே சுல்லேன்பெர்கர் விமானி பல பதக்கங்களைப் பெறுகிறார். விமான நிறுவனம் பயணிகளுக்கு இழப்பீடை வழங்கியது.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘சல்லி(Sully)’ என்றொரு படம் வெளியானது. டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார்.

Source….George Anthony in http://www.vikatan.com

Natarajan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s