உலகமே கொண்டாடுகிற ஒருநாள் என்றால், அது, ஜனவரி, 1ம் நாள் தான். புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறப்பதில்லை; புதிய உலகம் பிறக்கிறது. ஆண்டு பிறப்பு என்றாலே,
ஆங்கில ஆண்டின் ஜனவரி, 1ம் தேதியை தான் குறிப்பிடுகிறோம்.
‘சென்னை’ என, பெயர் மாற்றம் செய்த, 1995ம் ஆண்டு வரை, சித்திரைத் திங்கள் முதல் நாளைத்தான், ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். ஆனால், அதன் பிறகான கொண்டாட்டங்களின் வண்ணங்கள் மாறி விட்டன. ஆயினும், வரலாற்றுக் குறிப்புகள் உட்பட, எல்லாரும் பொதுவாக அறிந்து கொள்ளக் கூடிய வகையில், அனைத்து நிகழ்வுகளையும், ஆங்கில ஆண்டு, மாதம் மற்றும் தேதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே குறித்து வைக்கிறோம்.
நம் வயதை கணக்கிடும் போது, நாம் பிறந்த ஆங்கில ஆண்டை மனதில் வைத்து, தற்போது நடக்கும் ஆண்டு வரை எண்ணி, நம் வயதைச் சொல்கிறோம். அதனால், ஆண்டின் துவக்கம் என்பது, ஜனவரி, 1ம் தேதி தான் துவங்குகிறது என கொள்வதில் தவறில்லை.
வரவேற்பு
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு நிகரான ஆரவார கொண்டாட்டங்கள், புத்தாண்டிலும் இப்போது நிகழ்கின்றன. புதிய ஆண்டை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், மிக மகிழ்வோடு கொண்டாடும் ஒரு பண்டிகை, ஆண்டின் முதல் நாள் கொண்டாட்டம் தான்!முதல் நாள் இரவே, ஆட்டம், பாட்டம் என, கொண்டாட்டம் துவங்கி விட்டாலும், பெரும்பாலான மக்கள், ஒரு பழக்கத்தைக் கடைபிடித்து
வருகின்றனர்.
முதல் நாள் இரவு, வீட்டில் நிலைக் கண்ணாடி முன், தட்டில் பல வகையான பழங்கள், பணம், காசுகள், நகைகள் போன்றவற்றை, அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.காலையில் துாக்கம் கலைந்து, அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர்; இதனால், ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என, நம்பப்படுகிறது. இதை, ஆரம்பத்தில் சித்திரைத் திங்கள் முதல் நாள் அன்று தான் கடைபிடித்தனர்.
புது ஆண்டு பஞ்சாங்கம் வாங்கி வந்து, பெரியவர்கள் மூலம் பஞ்சாங்கப் பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதிலும், கேக் வெட்டுவதிலும், நாளை முதல் இப்படி தான் என, சபதம் எடுத்துக் கொள்வதிலும் தான், கொண்டாட்டங்கள் இருக்கின்றன என்பது வாடிக்கையாகிப் போனது.
புது ஆண்டு பிறப்பது, நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு, கடந்த ஆண்டு செய்த தவறுகளை திருத்தி, வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்குத் தானே தவிர, இப்படி வரைமுறையில்லாமல் கொண்டாடி மகிழ்வதற்கு அல்ல. ஜனவரி, 1ம் தேதியை, ‘உலக குடும்ப நாள்’ என, அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.
உலகிற்கு, கூட்டுக் குடும்ப வாழ்க்கையை கற்று தந்தது இந்தியா தான். ஆனால், அந்த அளவிற்கு கலாசாரம், பழமைவாதம் நிரம்பிய இந்தியாவில், குடும்ப உறவுகள் பற்றிய அருமை தெரியாமல், உலக குடும்ப தினம் கொண்டாடும் அளவிற்கு வந்து விட்டோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என, பெரும் கூட்டமாக கடந்த நுாற்றாண்டு வரை வாழ்ந்துள்ளோம்.இப்படி, உறவு முறைகள் தெரியாமல், அவர்களின் அருமையும், வாழ்ந்த வரலாறும் தெரியாமல், இன்றைய இளைய சமுதாயம், நட்புகளும், பழகியவர்களுமே, தங்களுக்கு முக்கியமானவர்கள் என, இருப்பதால் தான், பெரும் சிக்கல்கள் சமூகத்தில் எழுகின்றன.
பல சமூக சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணங்களே, அன்பு, பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், பெரும்பாலான குழந்தைகள் வளர்வதும், முதியோர் இல்லங்கள் அதிகரித்ததும் ஆகும்.
கோவில்களை இரவு, 9:00 மணிக்கு நடை சார்த்தி, அதிகாலை, 4:30க்கு திறக்கும் வழக்கம் என்பது, ஆகம விதிப்படி என்றாலும், அறிவியல்படி நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. இரவு வேளையில், ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால், இப்படி நேரக் கட்டுபாட்டைக் கொண்டு வந்தனர். புத்தாண்டு நாளில், அதுவும், இந்த மார்கழி மாதத்தில், அதிகாலையில் கோவிலுக்குச் சென்று, ஆண்டவனை தரிசிப்பதே நல்லது.
கிறிஸ்தவம்
ஆங்கிலப் புத்தாண்டு என்பது, தமிழர்களால் மட்டுமின்றி, வேறு இனத்தவர்களாலும் கொண்டாடப்படும் முக்கிய நாளாக உள்ளது. ஆனால், ‘ஆங்கிலப் புத்தாண்டு என, ஜனவரி 1ம் தேதியைக் கொண்டாடுவது, கிறிஸ்துவ மதம் தொடர்பானது’ என, சொல்வோரும் உண்டு.ஐரோப்பாவில், கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப்பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள், ஆண்டின் ஆரம்ப நாளாக, டிசம்பர், 25 – இயேசுவின் பிறப்பு, மார்ச் 1 மற்றும் 25 – இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறிஸ்தவ திருவிழா நாட்களைத்தான் தேர்ந்தெடுத்தன.
ஜனவரி, 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறுவதும் மிகத்தவறு. ஆங்கிலேயர்கள் அதைக் கண்டுபிடிக்கவுமில்லை; அதை அமல்படுத்தவும் இல்லை. அதுபோல், ஏன் இந்த தேதியை ஆங்கிலப் புத்தாண்டு என்று கூற வேண்டும் எனச் சிந்திக்கவோ அல்லது எதிர்கேள்வி கேட்பதோ கூட இல்லை.’இந்நாளை ஒரு விழாவைப்போல் கொண்டாடுவது, இந்தியாவின் வேத கலாசாரம் கிடையாது’ என்றும் கூறி வருகின்றனர்.
இப்படி செய்வது, இந்து தர்மத்திற்கு எதிரானது என்ற வாதத்தை ஏற்க இயலாது. அதே நேரத்தில், நம் பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு எதிராக, அந்தக் கொண்டாட்டம் அமைந்துவிடக்கூடாது என்பதையும், மனதில் கொள்ள வேண்டும்.எந்த கருத்துகள் எப்படி இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், நம் மக்கள், கோவில்களில் காத்திருந்து, புது ஆண்டில் இறை தரிசனத்தை பெற, கூட்டம் கூட்டமாக செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
விருப்பம்
நகைக்கடை, ஜவுளிக்கடை, சினிமா தியேட்டர்கள், கடற்கரை போன்ற இடங்களில், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியாது. எந்த வசதியும் இல்லாத கிராமப்புறங்களில் கூட, புத்தாண்டு அன்றைக்கு மட்டுமாவது, கோலாகலமாக இருப்பதை, மக்கள் விரும்புகின்றனர்.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், கிராமத்திலும், நகரத்திலும் கூட, கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என, நன்றாகவே இருந்தது.
ஆனால், மாறி வரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி, இவற்றின் தாக்கம், மெல்ல மெல்ல நம்மையும் மாற்றி விட்டது என்றே சொல்லலாம்.ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகள், தங்களது சொந்த காலண்டர்படி உள்ள ஆண்டு பிறப்பையும், சிறப்பாக கொண்டாடுகின்றன; ஆங்கில புத்தாண்டையும் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.
எனவே, ஜனவரி 1ம் தேதியை, போதையோடு, நண்பர்களோடு கொண்டாடுவதை நிறுத்தி, ஏதாவது ஒரு உருப்படியான காரணத்துடன், உற்றார் உறவினர்களுடன், குடும்பத்துடன் நாம் கொண்
டாடுவதுடன், நம், சொந்த புத்தாண்டு தினத்தையும் கொண்டாட முயற்சிக்க வேண்டும்.
வருட துவக்கத்தில் நல்லது ஒன்றை தீர்மானமாக எடுத்து, நம்முடன் இருக்கும் தீயது ஒன்றை விட்டு விட வேண்டும். நாம் நல்லவற்றை யோசித்து, நல்லவற்றை செய்தால் மட்டுமே, இது சாத்தியப்படும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாள் இரவு, வண்ணமய கொண்டாட்டம், பலரது வாழ்க்கையை இருட்டாக்கி விடாமல் அமைத்துக் கொள்வது அவசியம்.
எவ்வாறு கோள்களின் இயக்கம், அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகுவதில்லையோ, அதுபோல், மனிதனின் வாழ்வானது, சமூகத்தை சார்ந்தே அமையும். அச்சமூகத்துடனான மனிதனுடைய உறவு பலப்பட, பாலமாக அமைவது, அன்பு மட்டுமே.
அதற்கு, ஒவ்வொரு மனிதனும், மானுட சமுத்திரத்தில் ஐக்கியமாவதால் மட்டுமே சாத்தியப்படும். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை, நாம் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், ஏழைகள் என, பகிர்ந்து கொள்வதாக தீர்மானித்துக் கொள்ளலாமே. நம் சந்தோஷம், நம்முடன் மட்டும் முடிந்து விட்டால், அதில் எந்த ஒரு திருப்தியும் இல்லை. நம் மகிழ்வு, மற்றவர்களுக்கும் பகிரப்பட வேண்டும்; அதுதான் உண்மையான மகிழ்வு என்பது, எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அதனால் தான், ஜனவரி, 1ம் தேதியை, ‘உலக குடும்ப நாள்’ என தீர்மானித்து, அன்று பகிர்தலுக்கும், அமைதிக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர்.
எந்த சிறப்பு தினம் என்றாலும், குடும்பத்தில், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதையே, நம் மக்கள் விரும்பினர்.குடும்பத்துக்குள் பிரச்னைகள் இருக்கலாம்; ஆனால், காட்டிக்கொள்ள விரும்பியதில்லை. கொண்டாட்டம் என்பது வெளியில் கொண்டாடுவது மட்டுமில்லை என்பதை உணர வேண்டும். ஒரு குடும்பம் என்பது, சண்டை சச்சரவோடு இருக்கும்; ஆனால், பாகுபாடு இருக்காது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி, நிறைய சந்தோஷங்களையும், நன்மைகளையும் கொண்டாட, குடும்ப வாழ்க்கையை நினைவூட்டும் தினம், இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குடும்ப மரம்
‘பேமிலி ட்ரீ’ எனப்படும், ‘குடும்ப மரம்’ என்பது, குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை. இதை கொடி வழி என்றும் சொல்லலாம்; இது, மரத்தின் அமைப்பை, தலைகீழாக, மூதாதையர் முதல், பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது.இதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும். இதை, தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள் மணவழிக் குடும்பம் என, உறவு முறைகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஒருவரது தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரர் ஆகியோர், உயிரியல் முறையில் தொடர்பானவர்கள்; இவர்களுடைய உறவுகள், ரத்த உறவு எனப்படுகிறது. ‘உலக குடும்ப தினம்’ ஆண்டுதோறும் ஜனவரி 1ம் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.இன்று அமைதியையும், மகிழ்ச்சியையும், உறவுகளோடு, நட்புகளோடு பகிர்ந்து கொள்ளவதற்கான நாளாக, இது அமைந்துள்ளது. இன்று, அன்பானவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து, உணவை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
முக்கியமாக, உணவு தேவை என்ற நிலையில் இருக்கும் மக்களுடன், அதை பகிர்ந்துண்டு மகிழ்வர். அமைதியையும், மகிழ்ச்சியையும், மணி ஓசையை எழுப்பியும், முரசொலித்தும், இந்த உலகை பத்திரமாய் காப்பதாய் கொண்டாடுவர். இந்த ஒரு நாள் உலக குடும்ப தினம் மூலம், உலகம் முழுவதும் அமைதியாய் இருக்க பிரார்த்திப்பர்.
வாரியாரின் புத்தாண்டு சிந்தனை
உழைப்பால் உயர்ந்திடுங்கள்!
* வாழ்வில் உயர்ந்திட வேண்டுமானால், தேனீ போல உழைக்கும் மனிதராக மாறுங்கள். சுறுசுறுப்புடன் எப்போதும் நற்செயலில் ஈடுபடுங்கள்
* சிரித்த முகத்துடனும், நேர் கொண்ட பார்வையுடனும் நடை போடுங்கள். இனிமையும், நன்மையும் தரும் சொற்களையே பேசுங்கள்
* இளகிய தங்கத்தில், நவரத்தினம் ஒட்டிக் கொள்வதைப் போல, மனம் பக்தியில் ஒன்றினால், இறையருள் கிடைத்து விடும்
* குடும்பம் எனும் மரத்தில், மனைவி வேராகவும், கணவன் அடிமரமாகவும் இருக்க வேண்டும். அதில், அன்பு எனும் இலைகள் வளர்ந்து, ஒற்றுமை எனும் கனியைப் பறிக்க வேண்டும்
* கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கி எரியும் தீப்பிழம்பு போல, எந்த சூழலிலும், உயர்ந்த சிந்தனை மட்டுமே உள்ளவராக செயல்படுங்கள்
* சுறுசுறுப்புடன் பணியாற்றுங்கள். வளைந்து நிமிர்ந்து வேலை செய்வதால், உடல் பலத்தோடு, அறிவுத் தெளிவும் உண்டாகும்
* நல்லவர்களைத் தேடிச் சென்று பழகுங்கள்; அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை, வாழ்வில் கடைபிடியுங்கள்.
* குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, காலை அல்லது மாலையில் கடவுளைத் தினமும் வழிபடுவதால், எல்லாவித நன்மையும் உண்டாகும்
* ஆடம்பர வழிபாட்டை கடவுள் விரும்புவதில்லை; பக்தியோடு கொடுக்கும் எளிய பூவும், நீருமே அவருக்குப் போதுமானது.
செய்து தான் பார்ப்போமே!
இது ஜோசியம் இல்லை; இந்த ஆண்டு முழுவதும் நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்; பரிகாரங்கள். செய்து தான் பார்ப்போமே…
மேஷம் – பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்
ரிஷபம் – ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்
மிதுனம் – தானத்திலேயே சிறந்த மற்றும் அவசியமான ரத்த தானம் செய்யுங்கள்
கடகம் – வயதானவர்களுக்கு கம்பளி வாங்கித் தாருங்கள்
சிம்மம் – ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்;கூடவே அன்னதானம் செய்யுங்கள்
கன்னி – கட்டட தொழிலாளர்களுக்கு முடிந்த வரை உதவுங்கள்
துலாம் – முதியோர் இல்லங்களுக்குச் சென்று, இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
நண்பர்கள், உறவினர்களையும் உதவி செய்ய வையுங்கள்
விருச்சிகம் – அருகிலுள்ள கோவில் திருப்பணிகளில் பங்கேற்று, முடிந்த பொருள்
உதவியும் செய்யுங்கள்
தனுசு – கோவில் உழவாரப்பணிகளில் ஈடுபடுங்கள்
மகரம் – சாலையோரம் வாழ்பவர்களுக்கு ஆடைகள், உணவு பொருள் வாங்கிகொடுங்கள்.
கும்பம் – மரக்கன்று நட்டு, அவற்றை பராமரியுங்கள்
மீனம் – புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு உங்களால்முடிந்த சேவையை செய்யுங்கள்.
இந்த ராசிக்காரர்கள் இவற்றை மட்டும்தான் செய்ய வேண்டும் என கணக்கிடாமல், எல்லாருக்கும் நல்லவற்றை செய்ய ஆரம்பிப்போம். நாளும், கோளும் நல்லதாகவே நமக்கு அமையும்.
ஜனவரி பெயர் காரணம்
ஜனவரி என்ற பெயர், ரோமானிய மன்னர் ஜனசின் பெயரிலிருந்து வந்தது. ரோமன் இதிகாசத்தில் துவக்கங்களின் கடவுளாக காணப்பட்ட, ஜானஸ்லானுரியஸ் என்ற கடவுளின் பெயரே, ‘கிரிகோரியன்’ காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்படுகிறது.
Source….www.dinamalar.com
Natarajan