மருமகனிடம் சாதுர்யமாகப் பதில் சொன்ன வின்ஸ்டன் சர்ச்சில்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு…

 

ஃது ஒரு காட்டுவழிப் பாதை. அந்தப் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் ஃப்ளெமிங் என்ற விவசாயி. எல்லா மனிதருக்கும் சோறுபோடும் விவசாயியின் நிலைமை என்பது காலம் முழுவதும் காட்டுவழிப் பயணத்தையும், நடைப்பயணத்தையும் கொண்டதாகத்தானே இருக்கும். அதுதான் விவசாயியின் தலைவிதி என்று எழுதியிருக்கும்போது யாரால் அதை மாற்ற முடியும்?

ஃப்ளெமிங்கின் பயணமும் அதுதான்… அவர் சென்றுகொண்டிருந்த அந்தக் காட்டுவழிப் பாதையில் ஒரு சதுப்பு நிலத்தின் புதைகுழியில் பணக்காரச் சிறுவன் ஒருவன் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். ஆம், இன்றைய விவசாயிகள் சிக்கியிருக்கும் புதைகுழிகளைப்போலவே அவனும் நன்றாகச் சிக்கியிருந்தான். அதைப் பார்த்த ஃப்ளெமிங், பதறியடித்தபடியே அங்கு ஓடினார். காயம்பட்டவர்களுக்குத்தானே வலியின் அருமை புரியும்; கல்லடிப்பட்டவர்களுக்குத்தானே வேதனை தெரியும். எப்போதும் விவசாயிகள் தங்கள் உயிரைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அதனால்தான் இன்று விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கின்றன.

ஃப்ளெமிங்கும் அந்த எண்ணத்தில்தான் அந்தச் சிறுவனைக் காப்பாற்ற ஓடினார்; தன்னால் முடிந்த உதவியைச் செய்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார். ஓர் உயிரை மீட்ட சந்தோஷத்தில் அவருடைய மனம் சிறகடித்தது. அதிலும், நாளைய உலகத்தை மாற்றப் பிறந்த ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதில் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார். இதனையறிந்து அந்தச் சிறுவனின் தந்தை பதறிப்போய் ஓடிவந்தார். பையனைக் கண்ட சந்தோஷத்தில் அவரும் அமைதியானார்.

பிறகு, சுயநினைவுக்கு வந்த சிறுவனின் தந்தை… ஃப்ளெமிங்கிடம், “என் மகனைக் காப்பாற்றிய உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்… எவ்வளவு கேட்டாலும் தருகிறேன்; வாங்கிக்கொள்ளுங்கள்” என்கிறார் மிகவும் பரிதாபமாக. பசியுடனும், பட்டினியுடனும் வாழும் விவசாயிக்கு இருக்கும் மற்றொரு குணம் நேர்மைதானே; உதவி செய்வதற்கு பணம் எதற்கு என்ற எண்ணத்தில் வாங்க மறுக்கிறார் ஃப்ளெமிங். ஆனாலும், அந்தப் பணக்காரத் தந்தை விடுவதாக இல்லை. தொடர்ந்து வற்புறுத்துகிறார். ஒருவழியாகப் பணத்தை வாங்காமல் வேறொரு கோரிக்கையை அவரிடம் வைக்கிறார் ஃப்ளெமிங்.

“தன் மகனைப் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வாருங்கள்” என்பதே அந்தக் கோரிக்கை. ஒப்புக்கொள்கிறார் பணக்காரர். அவருடைய உதவியால் ஃப்ளெமிங்கின் மகன் நன்றாகப் படித்து, பின்னாளில் மருத்துவராகிறார்; மருத்துவத் துறையில் ‘பென்சிலின்’ என்ற மருந்தைக் கண்டுபிடிக்கிறார்; அவர் (அலெக்சாண்டர் ஃப்ளெமிங்)  கண்டுபிடித்த அந்த மருந்துமூலம் நிமோனியா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுகிறார். அவரும் உயிர் பிழைக்கிறார். அப்படி உயிர் பிழைத்தவர் வேறு யாரும் அல்ல… முன்பு, புதைகுழியில் சிக்கிய அதே பணக்காரச் சிறுவன்தான். முதலில் விவசாயி மூலம் காப்பாற்றப்பட்ட அந்த நபர், இப்போது விவசாயியின் மகன் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், இன்றோ அரசும் விவசாயிகளைக் காப்பாற்றுவதாக இல்லை; விவசாயிகளும் மற்றவர்களைக் காப்பாற்றும் நிலையிலும் இல்லை. இப்படி விவசாயக் குடும்பத்தின் மூலம் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்த நபர்தான் பின்னாளில் இங்கிலாந்தில் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.

“நம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள கஷ்டத்தைக் காண்கிறான்; நம்பிக்கை உள்ளவன் ஒவ்வொரு கஷ்டத்திலும் உள்ள வாய்ப்பைக் காண்கிறான்” என்ற நம்பிக்கை விதையை இங்கிலாந்து நாட்டு மக்கள் மனதில் விதைத்து அவர்களுடைய நட்சத்திரமாக ஜொலித்தவர் சர்ச்சில். அவர், ஒருமுறை முக்கியமான வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது… அவருடைய மருமகன், “உலகிலேயே மிகப்பெரிய ராஜதந்திரி யார்” என்று வினவுகிறார். தன் மருமகன் எந்த நேரமும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் இயல்புடையவர் என்பதை நன்றாகத் தெரிந்துவைத்திருந்த சர்ச்சில், மருமகன் கேட்ட கேள்விக்கு “முசோலினி” என்று பதில் சொல்கிறார்.  ஆச்சர்யமுற்ற மருமகன், “என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்… அப்படியென்றால், நீங்கள் தாழ்ந்தவரா” என்று மறுபடியும் வினா தொடுக்கிறார். அதற்கு சர்ச்சில், “தொணத்தொணவென்று எப்போதும் பேசிக்கொண்டிருந்த அவருடைய மருமகனைச் சுட்டுக்கொன்றார் முசோலினி. என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே” என்று அமைதியாகப் பதில் சொன்னாராம்.

பேச்சாளர்; எழுத்தாளர்; ஓவியர்; பத்திரிகையாளர்; போர் வீரர்; அமைச்சர்; பிரதமர் எனப் பன்முகங்களைக் கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பெருமையை உலகறியச் செய்தவர். “வெற்றி என்பது இறுதியானது அல்ல… தோல்வி என்பது மரணத்துக்குரிய செயல் அல்ல… அதுவே, வெற்றிகளின் எண்ணிக்கையைத் தொடர்வதற்கான துணிவாகும்” என்று சொன்ன இங்கிலாந்தின் பிதாமகன் சர்ச்சிலின் நினைவு தினம் இன்று.

Source….J.Prakash in http://www.vikatan.com

Natarajan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s