தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க, கண்டிக்க ஏன்… தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் படைத்திருந்த தாத்தா இப்போது எங்கே?
தாத்தா, பாட்டி உறவு தாமரை இலை மேல் தண்ணீர் போல ஒட்டாமல் போனதால் தான் இன்றைய பல குடும்பங்கள் சுக்கு நுாறாய் உடைந்து, சிதறிப் போயிருக்கின்றன. வீட்டில் சாப்பிடாமல், நாக்கில் ருசியின்றி கிடக்கும் குழந்தைகளை, மருமகளிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று ஓட்டலுக்கு கூட்டிச்சென்று புரோட்டா, ஸ்பெஷல் தோசை, ஐஸ்கிரீம் என வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்த நாட்கள் என்ன… காய்ச்சலோ, வயிற்று போக்கோ வண்டி கட்டிக்கொண்டு முதல் ஆளாய் டவுன் ஆஸ்பத்திரிக்கு, பெரிய டாக்டரை பார்க்க அழைத்து போகும் உத்வேகம் என்ன… அந்த தாத்தாக்கள் எங்கே?
கயிற்று கட்டிலில் நிலாவை காட்டிக்கொண்டே காற்றோட்டத்துடன் கதை சொல்லும் பக்குவம் என்ன… அவை எல்லாம் இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைக்காத பாசபிணைப்பு காலங்கள்.
தாத்தாவின் அதிகாரம்:
தாத்தா கையில் தான் வீட்டின் சாவிக் கொத்து இருக்கும். கல்யாண நாளில் திடீரென ஒரு பெரும் தொகையை மருமகளிடம் கொடுத்து, பிடித்த நகை வாங்கிக்கொள்ளம்மா என்று குடும்ப சக்கரத்தை பக்குவமாக நகர்த்தி செல்லும் தாத்தாக்கள் இல்லாததால் பல குடும்பங்கள் தடம் புரண்டு கிடக்கின்றன. வீட்டிற்கு யாராவது புதிய ஆள் வந்தாலோ, ஆண் குரல் கேட்டாலோ யாரு என சத்தமாக கர்ஜிக்கும் குரலில் எதிராளி சற்று ஆடிப்போய் விடுவார்.
குழந்தைகளை முதல் நாள் பள்ளியில் கொண்டுபோய் விடுவதிலிருந்து, மருமகளை அடுத்த பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வரை தாத்தா தானாகவே இழுத்து போட்டுக்கொண்டு செய்யும் வேலைகளை இப்பொழுது செய்ய யாரும் இல்லை. ஆட்டோக்காரர், கால் டாக்சிகாரர்கள் அந்த பணியை செய்ய வேண்டிய நிலை. இதுவேதனையானது மட்டுமல்ல மூத்த உறவுகளை உதறிய பாவத்தின் தண்டனை தான்.
ஒழுக்கத்தின் அடையாளம்:
தாத்தா வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள். லேட்டாக வீட்டிற்கு வந்தால், கதவை தட்டியவுடன் முதல் ஆளாய் கதவை திறந்து ‘ஏன்டா லேட்’ என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன் கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது. அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு ‘குடிமகன்கள்’முளைத்துவிட்டனர்.
பாடம் சொல்லி கொடுப்பதாகட்டும், வாத்தியாரிடம் சென்று ‘படிக்கலைனா நல்லா அடிங்க’ என்று சொல்லிவிட்டு, பேரன் போன பின்பு ‘அடிச்சு கிடிச்சுப்புடாதீங்க; ஒரு பேச்சுக்கு சொன்னேன்,” என்று மறுநிமிடமே வாத்தியாரிடம் மல்லுகட்டும் அந்த தாத்தாவின் அன்புக்கு ஈடு இணையே இல்லை. குழந்தை பருவத்தில் உண்டியல் தான் தாத்தா கொடுக்கும் முதல் பரிசு. சேமிப்பு பழக்கத்தை முதல் காசு போட்டு தொடங்கி வைக்கும் தாத்தாக்கள் உண்டு. ‘தாத்தா நீ செத்துப்போனா எனக்கு யாரு பொம்மை வாங்கித்தருவா? யாரு காசு கொடுப்பா?’ என விளையாட்டாய் கேட்கும் போதெல்லாம் சிரித்துக் கொண்டே ‘உன் கல்யாணத்தை பார்த்துட்டுதான்டா நான் சாவேன்’ என முத்தமிட்டவாறே சொல்லும் அந்த முதிய குழந்தை தாத்தா இப்போது இருப்பதெல்லாம் முதியோர் இல்லங்களில்.
முதுமையை போற்றுவோம்:
குடும்ப உறுப்பினர்களின் மூக்கணாங்கயிற்றை அதிகாரமாக கையில் வைத்திருந்த பல முதியவர்கள் இன்று முதியோர் இல்லங்களில் கட்டிப்போடப்பட்டிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் எழுதிப்போட்டிருந்த வாசகம் நெஞ்சை உருக்கியது. ‘இது மனிதர்களை பார்க்க விலங்குகள் வந்து போகும் மனித காட்சி சாலை’. பல ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய வாசகம் இது. தங்கள் வீட்டின் முதியவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய்விடும் மகன்கள் அங்கு சொல்வதெல்லாம், ‘இங்கேயே ஏதும்ஆனா கூட பரவாயில்லை! நாங்க உங்களை ஏதும் சொல்லமாட்டோம். திரும்ப எங்க வீட்டுக்கு மட்டும் அனுப்பிவிடாதீங்க!’ குடும்ப உறவுகள் அந்நியமாகிப்போனதின் முதல் அபாயமே, வீட்டின் முதியோர் புறக்கணிப்பு தான்.
கேள்விக்குறி உறவுகள்:
தாத்தா பாட்டி உறவுகள் தற்போதைய குழந்தைகளுக்கு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். தாத்தாக்கள் கிராமங்களில் தனியாக ரேடியோவோ, தொலைக்காட்சியோபார்த்து அன்றாட பொழுதை ஓட்டிக்கொண்டிருக்க, நகரத்து குழந்தைகள் பள்ளி, டியூஷன், டான்ஸ் என பிசியாக காலம் கழிக்க, என்றாவது வரும் தாத்தாவும் நகரத்து வீட்டில் தனியாகவே இருக்க, தாத்தா- குழந்தை உறவுப்பாலம் நுாலிழையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. டிரங்கால் போட்டு கூடுதல் பணம் செலவு செய்து போனில் தாத்தாவிடம் நலம் விசாரித்த காலம் போய், இப்போது பணம், அலைபேசி, நேரம் இருந்தும் மனம் இல்லாமல் தாத்தாவுடன் போனில் பேசுவதையே தவிர்த்துவிட்டோம்.
தாயின் அன்பை போன்றே தாத்தாவின் அன்பும் ஈடு இணையற்றது. ‘தாத்தா நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி இன்னிக்கு நான் லீவு போடப்போறேன்’ என்று பேரன் தாத்தாவை கிண்டல் செய்து ஓடுவதும், ‘இரு உன்னை உங்க வாத்தியார் கிட்ட சொல்லித்தரேன்’ என்று சொல்லி தாத்தா செல்லமாய் துரத்துவதும் இனி கிடைக்காத நாட்கள். எந்த ஒரு செயலையும் பக்குவமாய் அணுகி தீர்வு சொல்வது தாத்தாவின் கைவண்ணம். வயதும், அனுபவமும் தாத்தாவை பக்குவப்படுத்துகிறது. ஆனால், அந்த நிதானமும் பொறுமையும் இல்லாததால், இன்று இளைய தலைமுறை இயந்திர கதியாக இயங்குகிறது.
கோடையில் தாத்தா வீடு:
கோடை விடுமுறையில் தாத்தா வீட்டிற்கு கிராமத்திற்கு செல்வதை குழந்தை பருவத்தில் ரசிப்போம். தாத்தாவும், பாட்டியும் சேர்ந்து தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிவிடுவார்கள். மாலையில் வடை, இரவு சுடச்சுட தோசை சுட்டு கொடுப்பார்கள். திடீரென எல்லா குழந்தைகளுக்கும் விளக்கெண்ணெய் கொடுத்து பேதியாக்கி, வயிற்றை சுத்தம் செய்வார்கள். பள்ளி திறக்கும் முன்பாக சென்ட்ரப்பர், பென்சில், நான்கு வண்ண ரீபில் பேனா, புது ஜாமின்ட்ரி பாக்ஸ் என தாத்தா குழந்தைகளை கவனிக்கும் விதமே தனி தான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை என சம உறவுகளோடு கிராமத்து வீட்டில் குழந்தைகளாக ஆட்டம் போட்ட நாட்கள், குளத்திலும், கண்மாயிலும் நீச்சல் கற்றுக் கொண்டு நாட்கள், பம்புசெட்டில் குளித்தநாட்கள், கோடை மழையில் நனைந்தவாறே கிராமத்து வீட்டு முற்றத்தில் குதித்த நாட்கள் இன்றும் ரம்யமானவை. அந்த நாட்களின் பாசப்பிணைப்பு தான் இன்றும் நம்மை நமது சொந்தங்களோடு இணைத்து வைத்திருக்கிறது.
குடும்ப உறவுகள் அறுந்து போகாமல், நேசங்களும், பாசங்களும் விரிசல் விடாமல் ஆண்டுதோறும் புதுப்பித்து கொண்டிருந்த ஒரே உறவு தாத்தா தான். டேய் என்ற தாத்தாவின் கம்பீரக்குரலுக்கு அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன், தம்பி என அத்தனை பேரும் சர்வநாடியெல்லாம் அடங்கி பதுங்கி இருந்த காலம் மறக்க முடியாதவை. தாத்தாவின் குரலுக்கு ஆதரவாய் புதிதாய் வந்த மருமகள்களும் இணைந்து போய், கூட்டுக்குடும்ப உறவுகளும், வரவுகளும் சங்கமிக்கும் கோடை விடுமுறை இப்போது டியூசன், இசை, நடன பயிற்சி என்று தடம் புரண்டு போய்விட்டது. 40 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்கு மே மாதத்தில் கிராமத்துவீட்டில் கிடைத்தது எல்லாமே தாத்தாவின் அன்பு அரவணைப்பு தான்.
இழந்துவிட்ட நமது கலாசார உறவு மேம்பாட்டுக்கு குழந்தைகளை கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு அழைத்து போவோம். ஒதுக்கப்பட்ட முதிய உறவுகளிடம் அன்பு கேட்டு தஞ்சம் புகுவோம். உங்கள் குழந்தைகளுக்கு தாத்தாக்களை நீங்கள் அடையாளம் காட்டுங்கள். பேரக்குழந்தைகள் தாத்தா உறவை கற்றுக்கொள்ளும் மே மாதம், கோடை விடுமுறையில் தாத்தாவிடம் சங்கமிப்போம். கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் தன் நடுங்கும் கரங்களால் தங்கள் பேரக்குழந்தைகளை வாஞ்சையுடன் தாத்தாக்கள் தடவி, வருடும் போது இருக்கும் அன்பு எதற்கும் ஈடாகாது. உறவின் ஆழத்தையும், அன்பின் விளிம்பையும் குழந்தைகள் உணரும் தருணம் அது.
-ஜெ.ஜெயவெங்கடேஷ்சித்த மருத்துவர், மதுரை
98421 67567
Source….www.dinamalar.com