“மழை நீர்… உயிர் நீர்…”, “மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்…” இப்படி மழை நீருக்காக ஏராளமான வாசகங்கள் பெரும்பாலும், வாகனங்களின் பின்புறம்தான் எழுதப்படுகின்றன. கான்கிரீட் காடான நகரங்களில் மழை நீர், சாக்கடையிலும், கடலிலும்தான் கலக்கின்றன. பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல், கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கேன் தண்ணீரை நம்பி காலத்தை ஓட்டி வருகிறோம்.
கோவையில் இந்தாண்டு கோடை காலம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. கோவையில் ஓராண்டில் பெய்யும் சராசரி மழை அளவு 620 மி.மீட்டர். இந்த நீரைச் சேகரித்தாலே குடிநீர் பஞ்சம் எட்டிக்கூட பார்க்காது. ஆனால், பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாததால், கடந்த சில ஆண்டுகளாக, கோவையில் கோடை காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
இந்நிலையில், கோவையில் மழை நீரைச் சேமிப்பதற்காக, பொது இடங்களில், மழைநீர் சேகரிப்புக் கிணற்றை தன்னார்வலர்கள் அமைத்து வருகின்றனர். அதன்படி, இந்தியாவின் “மழைநீர் மனிதன்” என்று அழைக்கப்படும் சேகர் ராகவனின் ஆலோசனைப்படி, ரேக் அமைப்பு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சில நல்ல உள்ளங்கள் உதவியுடன், கோவை மாநகராட்சியுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு கிணறை அமைத்து வருகின்றனர்.
மழைநீர் சேகரிப்பு கிணறு
மழை நீர் அதிகளவில் வீணாகக்கூடிய பொது இடங்களில், குழி தோண்டி, அதில் கான்கிரீட் ரிங்கை அமைத்தால் போதும். உதாரணத்துக்கு எட்டு அடி குழிதோண்டி, அதில் தொட்டி போல, நான்கு அடி விட்டமுள்ள, காங்கிரீட் ரிங்கை இறக்கி வைத்தால்போதும். சராசரியாக எட்டு அடி ஆழமுள்ள குழியில் 3,000 லிட்டர் நீரை சேமிக்கலாம். இதில் சேமிக்கப்படும் நீர், கொஞ்சம், கொஞ்சமாக நிலத்தில் இறங்கும். இதன் மூலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னையில் வெற்றி பெற்ற இந்த மழைநீர் சேகரிப்புக்கிணறுகளை, கோவையில் முதல்கட்டமாக, குறிச்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டிலும், துடியலூர் பகுதியிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சேகர் ராகவன், “பூமிக்குள் நீர் இறங்குவதற்கு, 10 முதல் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டலாம். நமக்கு தகுந்தாற்போல் ரிங் அமைத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இதைச் சுத்தம் செய்தால் போதும். இதை வீடுகளிலும் அமைக்கலாம். தெருக்களின் ஓரமாகவும் அமைக்கலாம். நீர் சேமித்து வைக்கும் தொட்டியாக இதைப் பார்க்கக் கூடாது. நீரை நிலத்தடிக்கு அனுப்பி வைக்கும் திட்டமாகத்தான் பார்க்கவேண்டும். சென்னையில் பல இடங்களில் இந்த மழைநீர் சேகரிப்புக் கிணற்றை அமைத்துள்ளோம். இதன் மூலம் வெள்ள அபாயத்தையும் தவிர்க்கலாம். நிலத்தடி நீர் அளவையும் அதிகரிக்கலாம். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற கிணறுகளை அமைப்பது மிகவும் நல்லது. நிலத்தடி நீர் என்பது, வங்கியை போன்றது. அதில் தண்ணீரைச் செலுத்தினால்தான், மீண்டும் அதில் இருந்து, தண்ணீரை எடுக்க முடியும். 10 அடி ஆழம், 3 அடி காங்கிரீட் ரிங்குடன் கூடிய மழை நீர் சேகரிப்பு கிணறை அமைக்க 12 ஆயிரம் ரூபாய் ஆகும்” என்றார்.
ரேக் (Raac) அமைப்பின் ரவீந்திரன், “தற்போதைக்கு, பெரும்பாலான பகுதிகளில், மழை நீரைச் சேகரிப்பதற்காக, 200 அடிக்கு போர் போட்டு, ஆறு அடிக்கு குழித் தோண்டி, அதில் கற்களை போடுவார்கள். இதற்கு 75 ஆயிரம் ரூபாய்வரை செலவாகும். எல்லோராலும் இதை அமைக்க முடியாது. அவற்றை பராமரிப்பதும் கடினம். ஆனால், மழை நீர் சேகரிப்புக் கிணறுகளை அமைக்க அவ்வளவு செலவு ஆகாது. இதை, பராமரிப்பதும் மிகவும் எளிது. 15 ஆயிரம் ரூபாய் செலவுசெய்து ஓர் கிணற்றை அமைத்தால், அதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு மழை நீரைச் சேமிக்கலாம். பொது இடங்களில் மழை நீரைச் சேமிப்பதற்கு இது மிகவும் எளிதான வழி. இதுதொடர்பாக, மக்களிடையே விழிப்பு உணர்வும் செய்து வருகிறோம். மழைக்காலம் முழுவதுமே மழை நீர் சேகரிப்புக் கிணற்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
சமூக ஆர்வலர் டிம்பிள் கூறுகையில், “சென்னை அண்ணாநகரில் என் உறவினர் வீடு உள்ளது. அவர்களுடையே தெருவே லாரி தண்ணீரை பிடித்துக் கொண்டிருக்கும். ஆனால், இவர்கள் பிடிக்க மாட்டார்கள். அப்போதுதான், மழைநீர் சேகரிப்பு கிணறு குறித்துத் தெரியவந்தது. அப்போதிலிருந்தே, இந்தத் திட்டத்தைக் கோவைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசை இருந்தது. எங்களது அப்பார்ட்மென்ட் அருகே, இப்படி வீணாகும் மழைநீரை பார்க்கும்போது, எனக்கு வருத்தமாக இருக்கும். பின்னர், சேகர் ராகவனுடன் ஆலோசித்து, எங்களுடைய அப்பார்ட்மென்ட் அருகே உள்ள ரிசர்வ் சைட்டில் கிணறு அமைத்தோம். 2,500 சதுரடி பகுதியில் பெய்யும் மழை நீர், இதில் சேமிக்கப்படும். கோவை முழுவதும் இதுபோன்று 44 ஆயிரம் குழிகள் அமைக்கலாம் என்கின்றனர். அப்படி அமைக்கும்போது, நிலத்தடி நீரின் அளவு ஒன்பது மீட்டர் வரை அதிகரிக்கும். எனவே, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற பகுதிகளில் இதுபோன்ற கிணறுகளை அமைக்கலாம். அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இணைந்து, தங்களின் பங்களிப்பில்கூட இதுபோன்று குழிகளை அமைக்கலாம்” என்றார்.
மழை பெய்வதற்கு முயற்சி செய்யாவிடினும், குறைந்தது பெய்யும் மழை நீரையாவது சேமிக்க முன் வருவோம்…!
Source….. http://www.vikatan.com
Natarajan