விடுதலை எப்போது எனக்கு ?
என் வீட்டு தோட்டப் பறவை நோட்டம்
பாக்குது என்னை தினமும் !
அதன் கூட்டுக்குள் இருந்து ஒரு பாட்டு
பட்டென்று பறந்து விடுது கூட்டை விட்டு !
என் வீட்டு வாசலில் நின்று எட்டிப்பார்த்தது
என் வீட்டை இன்று !
என்ன பயம் உனக்கு என்னைப் பார்த்து
உன் வீட்டுக் கூட்டுக்குள்ளேயே முடங்கி விட்டாய்
மனிதா நீ …கேட்டது பறவை !
பயம் உன்னைப் பார்த்து இல்லை …கண்ணுக்கு
தெரியா ஒரு கிருமி முடக்கி விட்டது என்னை என் கூட்டுக்குள்ளே !
சொன்னேன் பதில் நான் !
என்னையும் எல்லோரையும் கூண்டில் அடைத்துத்தானே
பழக்கம் உனக்கு … ஒரு கிருமி உன்னை கூண்டில்
அடைத்து விட்டதா … புரியலையே எனக்கு !
பறவை உனக்கு மட்டுமா புரியவில்லை
மனிதன் எனக்கும் இன்னும் புரியவில்லையே
அந்த கிருமியின் பலம் என்ன என்று ! விடை
தெரியாமலே அடங்கி விட்டேன் என் வீட்டுக்குள்
விடுதலை எப்போது எனக்கு ?
தெரிந்தால் சொல்லு எனக்கு பறவையே !
கந்தசாமி நடராஜன்