வாரம் ஒரு கவிதை

விடுதலை எப்போது எனக்கு ?

என் வீட்டு தோட்டப் பறவை நோட்டம் 
பாக்குது என்னை தினமும் !
அதன் கூட்டுக்குள் இருந்து ஒரு பாட்டு 
பட்டென்று பறந்து விடுது கூட்டை விட்டு !
என் வீட்டு வாசலில் நின்று எட்டிப்பார்த்தது 
என் வீட்டை இன்று !
என்ன பயம் உனக்கு என்னைப் பார்த்து 
உன் வீட்டுக் கூட்டுக்குள்ளேயே முடங்கி விட்டாய் 
மனிதா நீ …கேட்டது பறவை ! 
பயம் உன்னைப் பார்த்து இல்லை …கண்ணுக்கு 
தெரியா ஒரு கிருமி முடக்கி விட்டது என்னை என் கூட்டுக்குள்ளே !
சொன்னேன் பதில் நான் !
என்னையும் எல்லோரையும் கூண்டில் அடைத்துத்தானே 
பழக்கம் உனக்கு … ஒரு கிருமி உன்னை கூண்டில் 
அடைத்து விட்டதா … புரியலையே எனக்கு !
பறவை உனக்கு மட்டுமா புரியவில்லை 
மனிதன் எனக்கும் இன்னும் புரியவில்லையே 
அந்த கிருமியின் பலம் என்ன என்று ! விடை 
தெரியாமலே அடங்கி விட்டேன் என் வீட்டுக்குள் 
விடுதலை எப்போது எனக்கு ? 
தெரிந்தால் சொல்லு எனக்கு பறவையே !

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

விட்டு விடு எங்களை …

வாகனம் இல்லா சாலைகள் …மாணவர்
இல்லா கல்வி சாலைகள் !
அலுவலர் இல்லா அலுவலகங்கள்… வெறிச்சோடிய 
கடற்கரை ! 

விமானம் இல்லாத விமான நிலையம் …ரயில் 
இல்லாத ரயில் நிலையங்கள் ! வழிபாட்டு 
தலங்களுக்கும் போட்டு விட்டாய் நீ ஒரு பூட்டு !

கோயிலில் இருக்கும் கடவுளும் இன்று 
மருத்துவ மனையில் …மருத்துவர் உருவில் !

ஊரையே அடக்கி விட்டாய் நீ ..அடங்காமல் 
ஆடிய மனிதரும் முடங்கி விட்டார் வீட்டுக்குள்ளே !

கொரானா …நீ மட்டும்தான் இன்னும் அடங்காமல் 
ஆட்டம் காட்டுகிறாய் உலகுக்கு !

விட்டு விடு எங்களை … போதும் உன் ஆட்டம் !
ஓரு தட்டு தட்டி மனிதா நீ ஒரு தூசு என் முன்னால் 
என்று சொல்லாமல் சொல்லி விட்டாய் !

ஓடி விடு நீ இப்போதே …வீட்டை விட்டு நாங்கள் 
வெளியே வர வேண்டும் …எங்கள் உலகை 
புதிய உலகை பார்க்க வேண்டும் …பறவைகளின் 
குரல் கேட்கவேண்டும் பழையபடி !

இனிமேல் யாரையும் ” நீ ஒரு தூசு  என் முன்னால் “
என்று சொல்ல மாட்டோம் ! விட்டு விடு எங்களை 
வாழ விடு எங்கள் குலத்தை ! 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

 வீடு கிடைக்குமா ஒரே ஒரு நாளைக்கு ?


ஒரு நாள் முழுதும் வீட்டுக்குள்ளே 
இருக்கணுமாம் …வெளியே யாரும் 
வரக்கூடாதாம் ஒரு நாள் ! 

எனக்கு வீடே இல்லை …நடைபாதைதான் 
என் வீடு !
அந்த ஒருநாள் மட்டும் ஒரு வீடு கிடைக்குமா 
எனக்கு  நானும் ஒரு வீட்டுக்குள் முடங்கிக்கொள்ள ?

கேட்கிறான் ஒரு நடைபாதை வாசி …
என்ன பதில் சொல்ல அவனுக்கு ? 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை !

அடக்கி வாசி மனிதா நீ !

++++++++++++++++++++

நீ அங்கு செல்லாதே …நீ  இங்கு 
வராதே ! … சொல்லாமல் 
கொள்ளாமல் பரவும்  வைரஸால் 
மிரண்டு போய் இருக்குது உலகம் !
அரண்டு போய் இருக்கிறான் மனிதன் !

என் கையில் எல்லாமே அடக்கம் 
என்னை மீறி என்ன நடக்கும் 
என்னும் இறுமாப்பு மனிதனுக்கு !

இயற்கை இன்று போட்டு விட்டது 
எல்லோருக்கும் ஒரு வாய் காப்பு !
கோடிட்டு காட்டி விட்டது இயற்கை 
தன் கோபத்தை ! 

புரிந்து நடந்து கொள்  மனிதா 
உன் எல்லைக்கோடு என்ன என்று 
தெரிந்து நடந்து கொள் !

இயற்கையின் எல்லைக் கோட்டை நீ 
தாண்டினால் உன் நாட்டின் எல்லைக் 
கோடும் கூட மூடப்படும் உனக்கு !

இயற்கையின் சீற்றத்தின்  ஒரு சிறு 
பொறிதான் நீ காண்பது இன்று !
அடக்கி வாசி மனிதா நீ இனிமேல் !

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

மனித நேயம் என்னும் மருந்து 


கண்ணுக்குத் தெரியாமல் பரவுவது 
வைரஸ் …புதுப் புதுப் பெயருடன் !
கண்ணுக்குத் தெரிந்தே பரவுவது 
வாட்ஸாப் வைரல் !

தெரியாமல் பரவும் வைரஸை விட 
தெரிந்தே பரவும் வைரலின் 
வேகமும் தாக்கமும் கொடுமை !

தெரியாமல் வளரும் வைரஸை 
தடுக்க முடியாது நம்மால்..ஆனால் 
தெரிந்தே பரப்ப விடும் வதந்தி 
என்னும் வைரலைத் தடுக்க 
முடியும் நம்மால் !…மனித 
நேயம் என்னும் மருந்து கொண்டு !
வதந்தி என்னும் வைரலைத் தடுப்போம் நாம் 
எடுப்போம் ஒரு சபதம் இன்று அதைத் தடுக்க 
மனித நேயத்தின் பெயரில் ! 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

அது அந்த காலம் !!!+++++++++++++++++

அரச மரம் சுற்றி அடி  வயிற்றைத் 
தொட்டுப் பார்த்த பெண்கள் காலம் 
ஒரு காலம் ! அது அந்த காலம் !

அரை கிலோ மீட்டர் நடந்து விட்டு 
அருகம் புல் ஜூஸ் குடித்து முடித்த
கையோடு அடி வயிறு தொட்டு தொந்தி

கரைந்து விட்டதா என்று ஆண்கள் பார்ப்பது 
இந்த காலம் !!!

கந்தசாமி நடராஜன்

கேள்வி எங்கே ?

கேள்வி எங்கே ? 

கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும் 
தலைப்பு கொடுத்தால் ஒரு 
கவிதை பிறக்கும் தன்னால் !
இரண்டுமே இல்லை என்றால் 
வறண்டு விடும் கவிதை கிணறு !
முரண்டு பிடிக்கிறேன் என்று 
நினைக்க வேண்டாம் !
பிறக்க வேண்டும் என்னுள் ஒரு 
கவிதை மீண்டும் ! 
கேளுங்க ஒரு கேள்வி என்னை 
கேட்டு மகிழுங்க என் பதிலை 
ஒரு கவிதை வடிவில் ! 

கந்தசாமி நடராஜன்