வாரம் ஒரு கவிதை

மலரட்டும் மீண்டும் ஒரு தீபாவளி 


நராகசுரன் வதத்தில் மலர்ந்தது ஒரு 
தீபாவளி !
இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் ஒரு 
அசுரன் இப்போ நம்மிடையே ! அவன் 
கொரானாசுரன் !
வதைக்க வேண்டும் விரைவில் இந்த 
அசுரனை !
மீண்டும் மலரும் அப்போதுதான் 
இனிய தீபாவளி ! 

இன்னொரு தீபாவளி மலரட்டும் 
விரைவில் ! ஒளி பரவட்டும் 
மக்கள் முகத்தில் ! அவர் 
மனம் குளிரட்டும் இந்த கலியுக 
அசுரன் வதத்தில் !
மலரட்டும் மீண்டும் ஒரு தீபாவளி !

கந்தசாமி  நடராஜன் 

வாரம் ஒரு கவிதை

வழி பிறக்குமா நல்ல வழி பிறக்குமா

வழி பிறக்குமா நல்ல வழி பிறக்குமா 
வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் 
எனக்கு !

வரவேண்டும் வெளியில் நான் வீட்டுக்கு 
வெளியே ! வெய்யிலோ மழையோ காலாற 
தெருவில் நடக்க வேண்டும் முதலில் 
முகக் கவசம் எதுவும் இல்லாமல் !

வீட்டு சிறையில் இருப்பதால் மட்டும்  நான் 
ஒரு அரசியல் தலைவனாக முடியுமா 
என்ன !
சர்ஜிகல் மாஸ்க் போடுவதால் மட்டும் 
நான் ஒரு டாக்டர் ஆக முடியுமா 
என்ன !

நான் நானாகவே இருக்க வேண்டும் !
முகம் தெரியா ஒரு சிறு கிருமிக்கு 
பயந்து நான் ஏன் என் முகம் 
மறைக்க வேண்டும் ?

யாரோ ஒருவர் இருமினால் பயம் 
தும்மினால் பயம் …இப்படி பயமே 
வாழ்க்கை ஆனால் கேள்விக்குறி 
ஆகாதா வாழ்க்கையே ?

நித்ய கண்டம் பூரண ஆயுசு 
என்னும் பழமொழிக்கு என்ன அர்த்தம் 
என்று புரியுது இப்போ இந்த வயதில் !

வைத்து விட்டேன் என் பயத்துக்கு 
ஒரு முற்றுப் புள்ளி ! பயம் இனி இல்லை 
எனக்கு ! முகம் தெரியா கிருமி அலறி 
அடித்து ஓட வேண்டும் பயம்  வென்ற 
என்னைப் பார்த்து ! அடங்காமல் ஆட்டம் 
போட்ட அந்த விஷக் கிருமி ஓடும் 
ஓட்டம் பார்த்து நான் ரசிக்க வேண்டும் !

வழி பிறக்குமா ! நல்ல வழி பிறக்குமா !
விடை கிடைக்குமா நல்ல விடை 
கிடைக்குமா என் கேள்விக்கு ? 

கந்தசாமி  நடராஜன் 
26/10/2020

வாரம் ஒரு கவிதை

கசப்பான உண்மை !!!

“வரலாறு காணாத வளர்ச்சி நமது GDP 
இந்த அரை ஆண்டில் ..மாத மாத 
வளர்ச்சி இத்தனை சத வீதத்தில் …”
மெய் மறந்து பேசுகிறார் மேடையில் 
கட்சித் தலைவர் !

பாவம் அவருக்குத் தெரியவில்லை 
தான் பட்டியல் இடுவது நாட்டில் கொரானா 
பாதிப்பு சதவிகித புள்ளி விபரம் 
என்னும் கசப்பான உண்மை !!!

கந்தசாமி நடராஜன் 

வாரம் ஒரு கவிதை

வெறும் பொம்மை பேச்சு அல்ல !!!


ஆண்டு முழுதும் உங்க வீட்டுப் பரண் 
மேலே “லாக் டவுனில் ” நாங்க !
நீங்க இப்போதான் ஆறு மாதமா 
” லாக் டவுனில் ” !

காற்றாட எங்களையாவது  உங்கள் வீட்டுப் 
படியில் விட்டு வையுங்க !

எங்க முகத்தில் முகக் கவசம் எதுவும் 
மாட்டி விடாதீங்க நீங்க !

இந்த பொம்மை சொல்வதைக் கேளுங்க !
நீங்களும் உங்க நண்பர்களும் மட்டும் 
மறக்காமல் முகக் கவசம் போட்டுக் 
கொள்ளுங்க !

நிம்மதியாய் இருந்த எங்களை உங்கள் 
வீட்டுப் படியில் நிறுத்தி  எந்த வம்பிலும்  
மாட்டி விட்டுவிடாதீஙக நீங்க !

உங்கள் ஆசைக்கு எண்ணி பத்து 
நாள் உங்கள் வீட்டு விருந்தாளியாய் 
எங்களை கவனித்து மீண்டும் 
உங்கள் வீட்டுப் பரண் மேல் 
நல்லபடியாய் ” லாக் டவ்னில் “
நாங்க இருக்க 
எங்களை வழி அனுப்பி வைச்சுடுங்க !

அடுத்த வருடம் நீங்களும் “லாக் டவுன் “
பிரச்சனை எதுவும் இல்லாமல் பொம்மைகள் 
எங்களை ஒரு நிறைவான மனதுடன் 
உங்கள் வீட்டு கொலுப்  படிக்கு அழைத்து வாங்க!

வேண்டாம் உங்களுக்கு முகக் கவசம் அடுத்த ஆண்டு! 
சுமுகமாக இருக்கும் அடுத்த நவராத்திரி சமூக 
இடைவெளி என்று எதுவும் இல்லாமல் !

இது ஒரு பொம்மை பேச்சு அல்ல !
பொம்மையின்   வடிவில் அந்த 
அம்மன் அளிக்கும் சத்ய வாக்கு !

கந்தசாமி  நடராஜன் 

வாரம் ஒரு கவிதை

கூப்பிடு அய்யா அந்த கொரானாவை!!!


கொரானா கொரானா என்று எல்லோரும் 
சொல்லுறாங்க …யார் அந்த கொரானா ?
அவர் பின்னால் பெரிய கூட்டமே இருக்குமோ ?

கூப்பிடப்பா அவரை ..நம் கட்சிக் கூட்டணியில் 
இணைத்து விடுவோம் ! விட்டு விடக் கூடாது 
கொரானா வாக்கு  வங்கியை ! 

பேசிக் கொண்டே போனார் கட்சித் தலைவர் 
கேட்டுக் கொண்டு இருந்த கட்சித் தொண்டரை 
கொரானா தாக்கி அவர் இப்போ மருத்தவ 
மனையில் ! 

கட்சிக்காக கொரானாவுடன் கூட்டணி பேச்சு 
வாரத்தை நடக்கிறது இப்போ மருத்துவ 
மனையில் என்கிறார்  தலைவர் !

எந்த அரசியல் கூட்டணியிலும் சிக்காமல் 
சொல்லமால் கொள்ளாமல் ஓடி விடலாமா 
என்று யோசிக்கிறதாம் இப்போ அந்த 
அழையா விருந்தாளி கொரானா !

கந்தசாமி நடராஜன் 
15/10/2020

வாரம் ஒரு கவிதை

வாழ விடுங்கள் எங்களை !!!

நான் சந்திரனில் வீடு கட்டி குடி ஏறப் 
போகிறேன் … செவ்வாய் கிரஹத்தையும் 
சர்வே எடுத்து வீடு கட்ட முடியுமா என்று 
பார்க்கப் போகிறேன் என்று சொன்னோமே 
இந்த மண்ணுலக வாசிகள் நாம் !

இந்த மண்ணுலகம் காலி …இந்த இடம் 
நமக்கு இனி சொந்தம் என்று எண்ணி 
கொரானா நீங்கள் எங்கள் மண்ணில் கால் 
பதித்து விட்டீர்களா என்ன ? 

அய்யா . …கோவிட் 19 
அய்யா … தவறுக்கு 
வருந்துகிறோம் ! இந்த மண்ணில் 
எங்களைத் தவிர உங்களுக்கு 
இடம் இல்லை அய்யா 

உங்களுடன் வாழப் பழகிக்கொள்ள 
வேண்டும் என்று எங்கள் ஊர் 
பெரிய மனிதர் சிலர் சொல் கேட்டு 
எங்கள் ஊரில் ஆதார் கார்டு கேட்டு 
உங்கள் குடியுரிமையை நிலை 
நாட்ட நினைக்க வேண்டாம் கொரானா 
அய்யா ! 

விட்டு விடுங்கள் எங்களை …நீங்கள் 
வேண்டுமானால் நிலவிலும் ,வேற்று 
கிரஹத்திலும் கால் பதித்துக் கொள்ளுங்கள் !
மனிதர் நாங்கள் அந்த பக்கமே எட்டிப் பார்க்க 
மாட்டோம் இனி !

இந்த மண்ணின் பெருமை என்ன என்று 
எங்களுக்கு புரிய வைத்த உங்களுக்கு 
கோடி நமஸ்காரம் ! 

அழையா  விருந்தாளியாக வந்த உங்களுக்கு 
விடை கொடுக்கிறோம் இன்றே ! 
விட்டு விடுங்கள் எங்களை ! இந்த 
மண்ணில் மண்ணின் மைந்தராய் 
வாழ விடுங்கள் எங்களை ! 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

இந்த கேள்விக்கு என்ன பதில் ?


காலையில் ஒரு நாட்டில் மாலை 
வேறு ஒரு நாட்டில் என்று விண்ணில் 
சுற்றி சுற்றி பறந்து வந்தேன் 
நான் சுதந்திரப் பறவையாக !
இன்று சிறகு ஒடிந்த பறவையாக 
“ஜம்போ ” ஜெட்  நான் அம்போ 
என்று மண்ணில் !
சிறகடித்துப் பறக்கும் ஓரு சின்னப் 
பறவை என் முதுகில் இப்போ !
நீ பறப்பது எப்போ என்று என்னைப் 
பார்த்து கேக்குது ஓரு கேள்வி ?
இந்த  கேள்விக்கு என்ன பதில் 
நான் சொல்ல ? 


கந்தசாமி நடராஜன் 
13/10/2020 

வாரம் ஒரு கவிதை

இந்த கேள்விக்கு என்ன பதில் ?

கோவிலில் குடியிருக்கும் கோபுர புறாவும் 
பள்ளிவாசலில் குடியிருக்கும் மாடப்புறவும் 
பார்ப்பதில்லை தங்களுக்குள் ஒரு பேதம் !
மனிதனுக்கு இடையில் மட்டும் ஏன் 
இந்த பேதம் ? 
இறைவனின் வீட்டில் குடியிருக்கும் 
புறாக்கள் மனதில் இருக்கும் இந்த  
கேள்விக்கு என்ன பதில் ? 

கந்தசாமி  நடராஜன் 
05/09/2020 

வாரம் ஒரு கவிதை

என் கடவு சீட்டு 

புதுப்பிக்கப் பட்ட என் கடவு சீட்டு (பாஸ் போர்ட் )
காட்டுது ஆயுள் அதற்கு 2030 வரை என்று !
கடவு சீட்டு கண்ணில் தெரியுது எனக்கு 
கடவுள் கொடுத்த ஆயுள் உறுதி சீட்டாக !
அகவை எழுபதை தாண்டும் நான் 
ஆயிரம் பிறையும் காணுவேன் நிச்சயம் 
என்று சொல்லாமல் சொல்லுதோ என் 
கடவு சீட்டு ! கடவுளுக்கே வெளிச்சம் !

கந்தசாமி நடராஜன் 
01/09/2020 

வாரம் ஒரு கவிதை

சும்மா இருப்பது சுகமா ?


சும்மா இருப்பது சுகமா ? இல்லை 
சுமையா ? 
கேள்வியைக் கேளுங்கள் ஒரு தினக் கூலி 
தொழிலாளியிடம் !
ஒரு சிறு கடை வியாபாரியிடம் !
கேளுங்க ஒரு உணவக உரிமையாளரிடம் !
ஒரு பெரிய தொழில் அதிபரிடம் !
இல்லை …ஒரு விவசாய பெருமகனிடம் !
சும்மா இருந்தால் சோறு எங்கிருந்து 
கிடைக்கும் என்னும் பதில்தான் வரும் !
சும்மாதான் இருக்கிறேன் நானும் 
வீட்டுக்குள் மாதக்கணக்கில் !
நீ சும்மா கிட என்று சொல்லி விட்டதால் !
சும்மா சொல்லக் கூடாது … சும்மா இருப்பது 
சும்மா இல்லை ! அம்மாடி … ஆளை 
விடு கோவிட் … என் வீட்டு வாசல் தாண்டி 
விடு விடு என்று ஒரு நடை நடக்க வேண்டும் 
எனக்கு …உன் அலை பற்றியே பேசிக் 
கொண்டிருந்த நான் நனைக்க வேண்டும் 
என் காலை கடல் அலையில் ! 
சும்மா சும்மா எத்தனை நாள் சுற்றிக் 
கொண்டு இருப்பாய் நீ எங்கள் காலை ?

கந்தசாமி  நடராஜன் 
01/09/2020