வாரம் ஒரு கவிதை

சொந்த பந்தம் 

சொந்தம் என்றால் என்ன சொல்லு தாத்தா 
கேட்டான் பேரன் என்னிடம் தொலைபேசியில் !
நெருங்கிய சொந்தம் …தூரத்து சொந்தம் 
யார் யார் என்று ஆர்வமாக சொன்னேன் நான் !
சொந்தமும் பந்தமும் பேரனுக்கு புரிய வைக்க 
ஒரு ஆசை !  
நான் உனக்கு நெருங்கிய சொந்தமா இல்லை 
தூரத்து சொந்தமா என்று சொல்லு பார்ப்போம் 
கேட்டேன் பேரனை ஆவலுடன் !
 நீங்க எனக்கு தூரத்து சொந்தம் 
தாத்தா …நீங்க என் கூட இல்லையே 
என்னை விட்டு தூரத்தில்தானே இருக்கீங்க 
தூரத்து சொந்தம்தானே நீங்க எனக்கு 
பேரனின் இந்த கேள்விக்கு என்ன 
பதில் நான் சொல்ல

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

வழி காட்டு இறைவா


நிலவில் கால் வைக்க வேண்டாம் நான் 
செவ்வாய் கிரஹத்தையும் பார்க்க 
வேண்டாம் அய்யா நான் !
அகவை எழுபது எனக்கு இப்போது 
என் வீட்டை விட்டு வெளியில் கால் பதிக்க 
ஒரு வழி காட்டு இறைவா நீ ! 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

ஒரு விண்ணப்பம் ….இறைவனுக்கு…


ஊரடங்கு ஊரடங்கு… அடங்கி இருக்கு 
மனித குலம் அவரவர் வீட்டுக்குள் 
நாட்டுக்குள் !

ஆனால் அடங்க மறுக்கிறதே அந்த ஒரு 
விஷக் கிருமி !

மருத்துவ மனையில் இடமில்லை 
மயானத்திலும் இடப் பற்றாக்குறை !

நெரு நெல் உளனொருவன்  இன்றில்லை 
என்னும் சொல்லுக்கு அதிரடி   விளக்கம் 
கொடுக்குதே ஒரு  விஷக் கிருமி !

இந்த உலகமே அலறுதே !
இறைவா உன்னிடம் ஒரு விண்ணப்பம் 
இவ்வளவு பேர் மேலே திடீர் என்று 
வந்தால் உன் உலகிலும் இடப் 
பற்றாக்குறை வராதா ?

பூவுலகில் இத்தனை பேரை ஒரு 
அடையாளம் தெரியாத கிருமிக்கு 
இரையாக்க வேண்டுமா நீ ?

உனக்கும் ஒரு லாபம் இல்லை 
அதனால் … வழி ஒன்று சொல்கிறேன் 
நான் உனக்கு …பேசாமல் அந்த கிருமியை 
நீ ஒரு நொடியில் அழித்து ஒழித்து விடு !
இந்த பூமியில் எல்லோருக்கும் நிம்மதி !
உனக்கும் நிம்மதி … கணக்கில்லாமல் 
வரும் பூலோக மக்களை எங்கு தங்க 
வைப்பது என்னும் பிரச்சனை உனக்கும் 
தீரும் ! 
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !
சொல்வதை சொல்லிவிட்டேன் 
நல்ல முடிவு எடுக்க வேண்டும் நீ 
இறைவா !!!
எங்கள் வாழ்வு உன் கையில்தானே 
எப்போதும் இறைவா !

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

என் கேள்விக்கு என்ன பதில் ?


தினசரி நாட்காட்டி தாள் கிழிக்கிறேன் 
நான் தினமும் காலை  …கிழிப்பது அதை 
மட்டுமே …ஊரடங்கில் வேறு ஒன்றும் 
கிழிக்கவில்லை நான் !

சொல்லப்போனால்  இன்று என்ன தேதி 
என்ன கிழமை என்று நாள் காட்டி 
சொல்கிறது செய்தி எனக்கு !

ஊரடங்கு முடிய இன்னும் எத்தனை 
நாள் பாக்கி என்றும் தெரியவில்லை !

என் வாழ் நாளில் நான் இது வரை 
கிழித்துக் கழித்த நாள் போக 
இன்னும் எத்தனை நாள்  தினமும் 
தாள்  கிழிக்க வேண்டும் இனிமேல் ?

அதுவும் தெரியவில்லையே எனக்கு 
 என் வீட்டு நாள் காட்டியிடம் உண்டா விடை 
இந்த கேள்விக்கு ? 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

காலத்தின் கோலம் 


குற்றம் புரிந்தது பாஸ் போர்ட் 
தண்டனை ரேஷன் கார்டுக்கு !
நாடு விட்டு நாடு சென்றால் மட்டுமே 
பாஸ்போர்ட் தேவை என்று 
இருந்தோம் நாம் அன்று !
இன்று ஒரு ஊரு விட்டு இன்னொரு 
ஊர் செல்ல தேவை e பாஸ் !
இது காலத்தின்  கோலம் !
இந்தியன் என்னும் தேசிய நீரோட்டத்தில் 
இணைந்த மனிதர் பலர் தேசிய 
நெடும் சாலையில் நிற்காமல் ஓடிக் கொண்டு 
இருக்கிறார் இன்று  அவரவர் ஊர் தேடி !
இது யார் தவறு ? வேற்று ஊருக்கு பிழைக்க 
வந்தது  அவன் குற்றமா ? எதற்கு  இந்த கொடிய 
தண்டனை அவனுக்கு ? மனித நேயம் 
காட்ட வேண்டும் நல்ல வழி அவனுக்கு !
ஊரடங்கு காரணம் காட்டி எல்லோரும் 
ஒதுங்கி நின்றால் எப்படி அய்யா அடங்கும் 
அவன் வேதனை ? 
அந்த கிராமத்து ஏழையின் கண்ணீர் 
தகர்த்து விடும் பல நகரத்துக் கோட்டைகளை !

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

மாசு நீக்கிய தூசு நீ !


தூசு நீ வந்தாய் …மாசு இல்லாத காற்று 
தந்தாய் ! … மாசு இல்லாத நீல  வானமும் 
தந்தாய் நீ ! 
நீர் நிலை யாவும் தெளிந்த நீரோடை 
ஆனதும் உன்னால் !
நகரின் நடுவே வண்ண வண்ணப் 
பூக்கள் பூத்துக் குலுங்குதே உன்னால் !
புள்ளினங்கள் இசைக்குதே ஆனந்த கீதம் !
இந்த பூமி எங்களுக்கும் சொந்தம் என்று 
விலங்கினம் சொல்லாமல் சொல்லுதே 
மனிதனுக்கு !
மாசு நீங்கிய பூமி நீ தந்த வரம் !
நீ வந்த வேலை முடிந்து விட்டதே 
இன்னும் ஏன் ஒட்டிக் கொண்டு 
இருக்கிறாய் இந்த பூமியில் ?
ஒருவேளை மனிதன் மனதின் 
மாசும் அகல வேண்டும் என்று 
காத்து இருக்கிறாயா நீ ? 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

விடுதலை எப்போது எனக்கு ?

என் வீட்டு தோட்டப் பறவை நோட்டம் 
பாக்குது என்னை தினமும் !
அதன் கூட்டுக்குள் இருந்து ஒரு பாட்டு 
பட்டென்று பறந்து விடுது கூட்டை விட்டு !
என் வீட்டு வாசலில் நின்று எட்டிப்பார்த்தது 
என் வீட்டை இன்று !
என்ன பயம் உனக்கு என்னைப் பார்த்து 
உன் வீட்டுக் கூட்டுக்குள்ளேயே முடங்கி விட்டாய் 
மனிதா நீ …கேட்டது பறவை ! 
பயம் உன்னைப் பார்த்து இல்லை …கண்ணுக்கு 
தெரியா ஒரு கிருமி முடக்கி விட்டது என்னை என் கூட்டுக்குள்ளே !
சொன்னேன் பதில் நான் !
என்னையும் எல்லோரையும் கூண்டில் அடைத்துத்தானே 
பழக்கம் உனக்கு … ஒரு கிருமி உன்னை கூண்டில் 
அடைத்து விட்டதா … புரியலையே எனக்கு !
பறவை உனக்கு மட்டுமா புரியவில்லை 
மனிதன் எனக்கும் இன்னும் புரியவில்லையே 
அந்த கிருமியின் பலம் என்ன என்று ! விடை 
தெரியாமலே அடங்கி விட்டேன் என் வீட்டுக்குள் 
விடுதலை எப்போது எனக்கு ? 
தெரிந்தால் சொல்லு எனக்கு பறவையே !

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

விட்டு விடு எங்களை …

வாகனம் இல்லா சாலைகள் …மாணவர்
இல்லா கல்வி சாலைகள் !
அலுவலர் இல்லா அலுவலகங்கள்… வெறிச்சோடிய 
கடற்கரை ! 

விமானம் இல்லாத விமான நிலையம் …ரயில் 
இல்லாத ரயில் நிலையங்கள் ! வழிபாட்டு 
தலங்களுக்கும் போட்டு விட்டாய் நீ ஒரு பூட்டு !

கோயிலில் இருக்கும் கடவுளும் இன்று 
மருத்துவ மனையில் …மருத்துவர் உருவில் !

ஊரையே அடக்கி விட்டாய் நீ ..அடங்காமல் 
ஆடிய மனிதரும் முடங்கி விட்டார் வீட்டுக்குள்ளே !

கொரானா …நீ மட்டும்தான் இன்னும் அடங்காமல் 
ஆட்டம் காட்டுகிறாய் உலகுக்கு !

விட்டு விடு எங்களை … போதும் உன் ஆட்டம் !
ஓரு தட்டு தட்டி மனிதா நீ ஒரு தூசு என் முன்னால் 
என்று சொல்லாமல் சொல்லி விட்டாய் !

ஓடி விடு நீ இப்போதே …வீட்டை விட்டு நாங்கள் 
வெளியே வர வேண்டும் …எங்கள் உலகை 
புதிய உலகை பார்க்க வேண்டும் …பறவைகளின் 
குரல் கேட்கவேண்டும் பழையபடி !

இனிமேல் யாரையும் ” நீ ஒரு தூசு  என் முன்னால் “
என்று சொல்ல மாட்டோம் ! விட்டு விடு எங்களை 
வாழ விடு எங்கள் குலத்தை ! 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

 வீடு கிடைக்குமா ஒரே ஒரு நாளைக்கு ?


ஒரு நாள் முழுதும் வீட்டுக்குள்ளே 
இருக்கணுமாம் …வெளியே யாரும் 
வரக்கூடாதாம் ஒரு நாள் ! 

எனக்கு வீடே இல்லை …நடைபாதைதான் 
என் வீடு !
அந்த ஒருநாள் மட்டும் ஒரு வீடு கிடைக்குமா 
எனக்கு  நானும் ஒரு வீட்டுக்குள் முடங்கிக்கொள்ள ?

கேட்கிறான் ஒரு நடைபாதை வாசி …
என்ன பதில் சொல்ல அவனுக்கு ? 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை !

அடக்கி வாசி மனிதா நீ !

++++++++++++++++++++

நீ அங்கு செல்லாதே …நீ  இங்கு 
வராதே ! … சொல்லாமல் 
கொள்ளாமல் பரவும்  வைரஸால் 
மிரண்டு போய் இருக்குது உலகம் !
அரண்டு போய் இருக்கிறான் மனிதன் !

என் கையில் எல்லாமே அடக்கம் 
என்னை மீறி என்ன நடக்கும் 
என்னும் இறுமாப்பு மனிதனுக்கு !

இயற்கை இன்று போட்டு விட்டது 
எல்லோருக்கும் ஒரு வாய் காப்பு !
கோடிட்டு காட்டி விட்டது இயற்கை 
தன் கோபத்தை ! 

புரிந்து நடந்து கொள்  மனிதா 
உன் எல்லைக்கோடு என்ன என்று 
தெரிந்து நடந்து கொள் !

இயற்கையின் எல்லைக் கோட்டை நீ 
தாண்டினால் உன் நாட்டின் எல்லைக் 
கோடும் கூட மூடப்படும் உனக்கு !

இயற்கையின் சீற்றத்தின்  ஒரு சிறு 
பொறிதான் நீ காண்பது இன்று !
அடக்கி வாசி மனிதா நீ இனிமேல் !

கந்தசாமி நடராஜன்