வாரம் ஒரு கவிதை…. ” திராவிட சூரியனே …. “

திராவிட சூரியனே …
——————-
“சௌம்யனுக்கு பின் வந்த சாதாரணன் நான்” என்று
சொன்னவன்  நீ! “சௌம்ய” ஆண்டு நிறைவுற்று பின்
மலர்ந்த ” சாதாரண ” ஆண்டு புத்தாண்டு கவி அரங்கில் !
வானொலி வழி உன் மொழி கேட்டேன் அன்று நான்,
ஆண்டு ஐம்பது ஓடி விட்டது இன்று !
“சௌம்யன்” அண்ணாவுக்கு பின் வந்த  ” சாதாரணன் ” நான் என்று
 நீ சொன்ன மந்திர வார்த்தை கட்டிப் போட்டு விட்டது  என்னை
 உன் கவியரங்க பேச்சு கேட்க அன்று முதல் !
நீ என்ன சாதாரணமானவனா ..?
சோதனை பல கடந்து சாதனை பல புரிய இந்த மண்ணில்
உதித்த திராவிட சூரியன் அல்லவா !
உன் எழுத்தும் பேச்சும் உசுப்பிவிட்டது
திண்ணையில் தூங்கிய ஒரு தலைமுறையை !
உன் மொழி புரியாத பிற மொழி தலைவர்களும்
உன்னுடன் சேர்ந்து நடந்தார் நீ காட்டிய வழியில் !
அது உன் அரசியல் ராஜ தந்திரம் !
எங்கிருந்து கிடைத்தது உனக்கு ஒரு நாளில்
இவ்வளவு நேரம் ! பன்முகத் திறன்
அத்தனையும் சுறுசுறுப்புடன்  இன்முகம்
காட்டியே நீ செய்த வேகம் ஒரு புரியாத
புதிர் ! எனக்கும் , என்னைப் போல் பலருக்கும் !
கணிப்பொறியும் அடிக்கடி படிக்குமாம்  பாடம்
உன்னிடம் …அதன் நினைவுத்திறனையும்
வேகத்தையும் கூட்டிக்கொள்ள !
ஒய்வு எடுக்கப் போகிறேன் என் அண்ணாவுடன்
என்று சொல்லி வங்க கடலோரம் துயில் கொள்ளும்
நீ …இளம் காலை சூரிய உதயத்தில் நீயும்
சேர்ந்துதானே மலர்ந்து சிரிக்கிறாய் இன்னும் !
உதய சூரியன் நீ என்றும் உன் தம்பிகளின்
இதய சூரியன்தான் !
திராவிட சூரியன் உனக்கு ஏது அய்யா
அஸ்தமனம் ?
K.Natarajan
15th August 2018