
ஆனை முகப்பெருமானை போற்றி பூஜிக்கும் திருநாளான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 19ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.
வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராயினார் அந்த கணேசன்.
அந்த கணேசனை சதுர்த்தியன்று வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்களும் நடக்கும். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளித்து, அறிவு, தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து, எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுவோம்.
இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவர்ந்துவிட்ட கணேசரை விதம், விதமாக உருவாக்கி வழிபடுவதில் இந்தியா முழுவதும் உள்ள அவரது பக்தர்கள் தீவிர ஈடுபாடுகாட்டி வருகின்றனர். சென்னையிலும் கொஞ்சமும், பஞ்சம் இல்லாமல் விநாயகரை வித்தியாசமாக உருவாக்கி வருகின்றனர்.
“வேஸ்ட் ‘என்று தூக்கியெறியப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களைக் கொண்டு உருவாகிவருகிறார் ஒரு பக்கம், சாதாரணமாக அரிசியை குவித்துவைத்து அதில் சில மலர்களை வைத்த மாத்திரத்தில் அபாரமாக உருவாகி நிற்கிறார் இன்னொரு பக்கம், கார்த்திகை தீப விளக்குகளால் கம்பீரமாக எழுந்து கொண்டு இருக்கிறார் ஒரு பக்கம், நானும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கிரிக்கெட் மட்டையுடன் கிரிக்கெட் வீரராக பூம்புகார் கலைக்கூடத்தில் விற்பனையாகிக் கொண்டும் இருக்கிறார். கண்ணாடியில் அழகு காட்டுகிறார், அதே நேரம் எப்போதும் போல களிமண் மற்றும் வண்ண பூச்சுடன் தெருவிற்கு தெரு உருவாகி வருகிறார். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ரசாயன பூச்சு இல்லாத விநாயகர்தான் வேண்டும் என்று பக்தர்கள் கேட்டு வாங்குகின்றனர் ….