வாரம் ஒரு கவிதை ….” தூரத்தில் கேட்குது ….”

 

தூரத்தில்  கேட்குது ..
———————-
அம்மா உன் குரல் முதன் முதல் கேட்டேன்   தூரத்தில்…
உன் கருவில்  நான்  மலர்ந்து வளர்ந்த  போது !
இப்போதும்  உன் குரல் நான் கேட்கிறேன்
தினமும் …தூரத்திலிருந்தே !
அயல் நாட்டு மண்ணில் நான் இன்று  இருந்தாலும்
நம் நாட்டு  மண் வாசம் மறக்கவில்லையே அம்மா  நான் !
தூரத்திலிருந்து உன்  குரல்  நான் கேட்டாலும்
அம்மா..பாசமுடன் மண் வாசம் கலந்து ஒலிக்கும்
உன் குரல் நான்  அன்று  கருவில் கேட்ட
அதே குரலாக இன்றும் ஒலிக்கும் மாயம் என்ன அம்மா ?
தூரத்தில் கேட்குது உன் குரல் என்று என்னிடம்
இது வரை நீ சொன்னதில்லையே அம்மா !
எங்கே நீ இருந்தாலும் நீ இருக்குமிடம் என்
இதயத்தில்தான் என்று எனக்கு சொல்லாமல்
சொல்லுகிறாயா  அம்மா ?
Natarajan …..in http://www.dinamani.com dated 24th July 2017

வாரம் ஒரு கவிதை ….” இன்றைய தாலாட்டு “

 

இன்றைய தாலாட்டு
———————————–
தொட்டில் கட்டி  தாய் பாடும் தாலாட்டு
கேட்டது ஒரு தலைமுறை !
தொட்டில் என்றால் என்ன என்று
கேட்குது இன்றைய தலை முறை !
தொலைகாட்சி பாட்டுக்கு தலை
ஆட்டும் இந்த தலைமுறைக்கு அன்னையின்
தாலாட்டு ஒரு புதிர் விளையாட்டு !
வேலை வேலை என்று ஆலாய்
பறக்கும் பெண்ணுக்கு  தாலாட்டு
பாட எங்கே நேரம் ?
மடிக்கணினி இசைக்கும் இசையே ஒரு
குழந்தை கேட்கும் இன்றைய தாலாட்டு !
அம்மா அப்பாவின் கைபேசி
மணிஓசைதான்  தாள வாத்திய கச்சேரி
மடியில் தவழும் குழந்தைக்கு !
இன்றைய குழந்தை  கேட்கும்
ஒரே தாலாட்டு  அதன் அம்மா அப்பா
பாடும் ஒரே பாட்டு …”எடுக்க வேண்டும்
எல்லா அடையாள அட்டையும் நம்ம  குழந்தைக்கு “
Natarajan
in http://www.dinamani.com dated 17th July 2017

வாரம் ஒரு கவிதை ….” நிழலாடும் நினைவு “

 

நிழலாடும்  நினைவு…
——————-
கடல் அலை போல்  நினைவலைகள்…
ஓயாத  கடல் அலை போல்
நினைவலையும்  ஒரு தொடர்கதையே !
மெல்லிசையாய் ஒலிக்கும் வாழ்வின்
இனிய நினைவலைகள் இடைவிடாமல்
தொடரும் ஒரு நிழலாய் நம் வாழ்வின் நிஜத்தில் !
இளமை  கால நினைவின் நாட்டியம் நல்ல
கட்டியம் கூறும் எதிர் வரும் கால நிஜங்களுக்கு !
மனதில் நிழலாடும் நினைவே எதிர் வரும் காலத்துக்கு
ஒரு நம்பிக்கை நட்சத்திரம் !
இனிய பழைய நினைவின் ஓட்டம் இருக்க  வேண்டும்
என்றும் நம்  மனதில் ஒரு நிழலாக ! நினைவுகள் நிழலாடும்
வரைதான் நம் வாழ்வின் ஆட்டமும் ஓட்டமும் !
மனதின் நிழலே நம் வாழ்வின் நிஜம் !
நிஜம் இல்லாமல் நிழல் இல்லை !
நிழல் இல்லாத நிஜமும் இல்லை !
Natarajan
My Tamil kavithai in http://www.dinamani.com dated 10th July 2017

வாரம் ஒரு கவிதை …” மறு ஜென்மம்”

 

மறு ஜென்மம்
————–
நெரு நெல் உளனொருவன் இன்று இல்லை
என்னும் பெருமை படைத்த இந்த உலகில்
இரவில் கண்ணுறங்கி மீண்டும் கண் விழிக்கும்
அந்த இனிய காலை நேரமே நம் யாவருக்கும் ஒரு
மறு ஜென்மம் !  மறுக்க முடியுமா இந்த உண்மையை ?
கிடைத்தது ஒரு  அரிய மனிதப் பிறவி …தெரியும் இந்த
உண்மை நமக்கு ! தினமும்  காலையில் நாம்
எடுப்பது ஒரு மறு  ஜென்மம் ! இதுவும் தெரியும் நமக்கு !
இருக்கும் அந்த ஒரே ஒரு  நாளில் மறக்கலாமா
நாம் மனித நேயம் ?
தினம் காணும் மறு ஜென்ம விடியல் மறந்து
வேறு ஒரு புது  ஜென்ம மாய வலையில்
சிக்கி, கிடைத்த மனிதப்   பிறவியின்  மதிப்பைக்
குறைக்க வேண்டாமே நாம் !
மனிதராய் பிறந்தோம் …மனிதராகவே
வாழ்ந்து காட்டுவோம் ! அது ஒன்றே நமக்கு
கிடைத்த மனிதப் பிறவியின் பயன் !
Natarajan  in http://www.dinamani.com dated 26th june 2017

வாரம் ஒரு கவிதை …” கல்லறைப் பூவின் கண்ணீர் துளி “

 

சில்லறை இல்லையென்றால் இல்லை
உனக்கு  மரியாதை !  உண்மையும்
நேர்மையும் போடுமா உனக்கு சோறு ?

“பிழைக்கத் தெரியாத மனிதன் நீ ”
இந்த ஒரு பட்டம் மட்டுமே அந்த
மனிதனுக்கு  கிட்டிய சொத்து நேற்றுவரை !

இன்று கல்லறையில் அவன் அடங்கும் வரை
அவன் அருமை அவனுக்கே தெரியாது !

அவன் உறங்கும்  கல்லறை மேல்
எத்தனை எத்தனை மலர் வளையம் இன்று   !
அவன் இறப்பிலும் அவரவர்  ஆதாயம்

தேடி அவனுக்கு சூட்டும் பட்டம்  எத்தனை
எத்தனை இன்று !

“பிழைக்கத்” தெரியாத அந்த ஒரு மனிதன்
பெயர்  சொல்லி  தங்கள் “பிழைப்பை”
நடத்த துடிக்கும் ஒரு பெரிய கூட்டத்தின்

நாடகத்தின் நடுவில்  கல்லறைப் பூக்கள்
மட்டும் வடிக்குது கண்ணீர், மறைந்த
அந்த மனிதனை நினைத்து !

நடராஜன்   in http://www.dinamani.com dated 19th june 2017

வாரம் ஒரு கவிதை …” கவிக்கோவுக்கு ஒரு கவிதாஞ்சலி “

 

கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி
————————-
கவிஞன் என்று சொன்னாலே  அது கவிக்கோ !
கதையிலும்  கவிதை விதை விதைத்து  கவி
சொன்ன கவிஞன் அவன் ….இந்த புவி கேட்ட
கவிதை தானும் கேட்க விழைந்தானோ அந்த
இறைவன் ?  இறை அழைப்பு ஏற்று இப்புவி
துறந்து எமை  மறந்து பறந்து சென்றாயோ கவிஞனே ?
நீ பறந்து சென்ற வேகம் பார்த்து நான் வாய் மூடி
மௌனியானேன் …உன் பால் வீதி கவிதைப் பயணம்
முடித்து  உன் வீட்டு  வீதிக்கு நீ மீண்டும் திரும்பும் நாள்
வரை காத்திருப்பேன் நான் மெளனமாக !
உன் பால் வீதி பயணத்தில் என் மௌனத்தின் குரல்
உனக்கு கேட்காமல் இருக்குமா என்ன ?
Natarajan
12th June 2017

வாரம் ஒரு கவிதை …” மேகம் போடும் தாளம் “

 

மேகம்  போடும்  தாளம்
__———————
நீல வானம் இசைக்கும் மழை இசைக் கச்சேரிக்கு
வான் மேகம்  தவறாமல் போட்டிடும்  சரியான தாளம் !
கரு மேகத்  தாளம் இல்லாமல் மழை  இசைக் கச்சேரி ஏது ?
மனிதன் போட்ட தப்பு தாளத்தால் இன்று நீல
வானம் இசைக்க மறந்ததே தன் இன்னிசை மழையை !
மழையின்றி மனிதன் தவித்து ஒரு வாய் குடிநீருக்கு
போடுகிறான்  தாளம் இன்று ! மேள தாள வாத்தியம்
சகிதம் காத்திருக்கிறான் அவன்   வான் மழை இசைக்கு !
வான் மழை இசைக்கு சரியான தாளம் போடும்
மேகமே இன்று போடுதே தாளம் அதன் முகத்தை
தொலைத்து விட்டு !
தொலைத்த முகத்தை தேடி எடுத்து வான் மேகம்
போட வேண்டும் மீண்டும் ஒரு தாளம் வான் மழை
இசைக்கு கட்டியம் கூறி !  இசைக்க மறந்த  வானமும்
மேகம் போடும் தாளத்தில் தன்னை மறந்து இசைக்க
வேண்டும் ஒரு இனிய மழை  கீதம் இந்த மண் குளிர!
Natarajan … in http://www.dinamani.com datec 5th June 2017