இன்று நண்பர்கள் தினம்…
பழக்க தோஷத்தால்
ஆண்டு தவறாமல் வாங்குகிறேன்
வாழ்த்து அட்டைகளை…
ஆயினும், அனுப்பும் முகவரி
தெரியாததால், அவையெல்லாம்
குவிந்து கிடக்கின்றன என்னிடமே!
நட்பு… –
நினைவுகளில் நெருடுகின்றன
நிறைய முட்களும்
கொஞ்சம் பூக்களும்!
பால்ய கால நட்பெல்லாம்
பள்ளி இறுதி நாளொன்றில்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடியதோடு கலைந்து போயிற்று!
கல்லுாரி கால நட்போ
கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக
கத்தை கத்தையான கடிதங்களில்
செழித்து வளர்ந்து
நலம்; நலமறிய அவா எனும்
கார்டு கிறுக்கல்களில் குறுகியது!
அப்புறமான நாட்களில்
கார்டுகளும் காலாவதியாகி
ஆண்டுக்கொரு முறை
பொங்கல் வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி
கடைசியில் வேலை கிடைத்ததும்
கரைந்து காணாமலே போயிற்று!
அலுவலக நட்பெல்லாம்
அசட்டுப் புன்னகைகள்
அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்து
ஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்!
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திர வாழ்க்கையில்
நெஞ்சார்ந்து நட்புப் பாராட்ட
நேரமிருக்கிறதா நமக்கு?
சோ.சுப்புராஜ், சென்னை. in http://www.dinamalar.com dated 5th august 2018