கருவில் சுமக்கும் வரையில் தான்
உன் கவனம் குழந்தை மீதிருக்குமா…
மடி தவழும் மட்டும் தான்
உன் மனம், மகளின் மீது குவிந்திருக்குமா?

புத்தகம் சுமந்து, பள்ளி செல்கையில்
பறக்க விட்டு விடுவாயா
உன் மகளின் மீதான பாதுகாப்பு வளையத்தை!
காய் நறுக்கவும், சோறு சமைக்கவும்
செலுத்தும் கவனத்தை விட
கொஞ்சம் கூடுதலாய் செலுத்து
உன் மகளின் மீதான நெருப்பு வளையத்தை!
தொலைக்காட்சி தொடர்களில்
உன் அகத்தை வைத்து
மகளின் எதிர்காலத்தை
தொலைத்து விடாதே!
உன் மகள் சிறகசைக்கும் திசையெங்கும்
உன் சிந்தனையை செலுத்து…
உறக்கத்தில் கூட விழித்திருக்கட்டும்
உன் மகளை பற்றிய பொறுப்புணர்வு!
நல்லதும் கெட்டதும் நிறைந்த உலகில்
மனிதர்கள் மட்டுமல்ல
மனித உருகொண்ட மிருகங்களும் உண்டென
மகளுக்கு புரிய வை!
துரியோதனன் பரம்பரையில்
பிறந்துவிட்ட ஆண்கள் சிலருக்கு
துகிலுரிக்கும் புத்தி போகவே இல்லை…
அவர்கள், பெண்ணின் சதை உரித்துப் பார்க்க
சமயம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!
ஹாசினி ஆசிபாவோடு
அரும்புகள் கருகிய கதை போகட்டும்
பார்த்துக்கொள் அம்மா கவனமாய்…
உன் பெண்ணிற்கு எத்தனை வயதானாலும்!
Source….. இ.எஸ்.லலிதாமதி, சென்னை.
In http://www.dinamalar.com dated 5th august 2018