வாரம் ஒரு கவிதை

வாழ விடுங்கள் எங்களை !!!

நான் சந்திரனில் வீடு கட்டி குடி ஏறப் 
போகிறேன் … செவ்வாய் கிரஹத்தையும் 
சர்வே எடுத்து வீடு கட்ட முடியுமா என்று 
பார்க்கப் போகிறேன் என்று சொன்னோமே 
இந்த மண்ணுலக வாசிகள் நாம் !

இந்த மண்ணுலகம் காலி …இந்த இடம் 
நமக்கு இனி சொந்தம் என்று எண்ணி 
கொரானா நீங்கள் எங்கள் மண்ணில் கால் 
பதித்து விட்டீர்களா என்ன ? 

அய்யா . …கோவிட் 19 
அய்யா … தவறுக்கு 
வருந்துகிறோம் ! இந்த மண்ணில் 
எங்களைத் தவிர உங்களுக்கு 
இடம் இல்லை அய்யா 

உங்களுடன் வாழப் பழகிக்கொள்ள 
வேண்டும் என்று எங்கள் ஊர் 
பெரிய மனிதர் சிலர் சொல் கேட்டு 
எங்கள் ஊரில் ஆதார் கார்டு கேட்டு 
உங்கள் குடியுரிமையை நிலை 
நாட்ட நினைக்க வேண்டாம் கொரானா 
அய்யா ! 

விட்டு விடுங்கள் எங்களை …நீங்கள் 
வேண்டுமானால் நிலவிலும் ,வேற்று 
கிரஹத்திலும் கால் பதித்துக் கொள்ளுங்கள் !
மனிதர் நாங்கள் அந்த பக்கமே எட்டிப் பார்க்க 
மாட்டோம் இனி !

இந்த மண்ணின் பெருமை என்ன என்று 
எங்களுக்கு புரிய வைத்த உங்களுக்கு 
கோடி நமஸ்காரம் ! 

அழையா  விருந்தாளியாக வந்த உங்களுக்கு 
விடை கொடுக்கிறோம் இன்றே ! 
விட்டு விடுங்கள் எங்களை ! இந்த 
மண்ணில் மண்ணின் மைந்தராய் 
வாழ விடுங்கள் எங்களை ! 

கந்தசாமி நடராஜன்

Leave a comment