வாரம் ஒரு கவிதை ….”சிரிப்பு ” 2

சிரிப்பு  2
++++++++
தினமும் பார்க்கிறேன் என் குடியிருப்பில்
வசிக்கும் அவரை நான் …காலை
மாலை நடை பயிலும் நேரம் !
சிரித்து வணக்கம் சொல்லுவேன் அவருக்கு
நான் ! பதிலுக்கு வணக்கம் இல்லை …
முகத்தில் சிரிப்பு கூட இருக்காது !
கடுவன் பூனை என்று அவருக்கு பெயராம்
எங்கள் குடியிருப்பில் !  ஒரு குழந்தையைப்
பார்த்தாலும் முகத்தில் சிரிப்பு வராது அவருக்கு !
சிரிக்கவே காசு கொடுக்க வேண்டும் போல
அவருக்கு…நினைத்துக் கொள்வேன் !
ஒரு நாள் அவரைக்  கேட்டேன் ‘அய்யா
உங்கள் பணி என்ன , எங்கே “? என்று !
நான் ஒரு ” நகைச்சுவைப் பயிற்சியாளர் ” !
சொன்னார் அவர் !
பொத்துக்கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு !
அவர் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பே
இல்லை அப்போதும் !
Kandasami Natarajan
05/09/2019
Advertisements

வாரம் ஒரு கவிதை ….”சிரிப்பு “

சிரிப்பு
++++++
சிரித்து வாழ வேண்டும் நீ !பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே நீ !
இந்த சொல்லுக்கு விதி விலக்கு
நான் !
நான் சிரிப்பதில்லை .. என்னைப்
பார்த்து மற்றவர் சிரிக்கிறார் !
ஆம் ! நான் ஒரு நல்ல நகைச்சுவை
நடிகன் …மேடையிலும் திரையிலும் !!!
Kandasami Natarajan
in www. dinamani.com  dated 03/09/2019
03/09/2019

வாரம் ஒரு கவிதை …”பறவை “

பறவை
+++++++
கூண்டிலிருந்து வெளியே வந்த பறவை
முன்னால்  மண்டியிட்டான் மனிதன்
மன்னிப்பு கேட்க! … நீ இப்போ
ஒரு சுதந்திரப் பறவை என்றான் !
நான் எப்போதுமே சுதந்திரப் பறவைதான்
எனக்கு எல்லைக் கோடு என்று எதுவும்
இல்லை விண்ணில் பறக்க !
உன்னைப் போல் எனக்கு பாஸ்போர்ட்
விசா என்று எதுவும் தேவை இல்லை
எனக்கு எந்த மண்ணிலும் தரை இறங்க !
சொன்னது பறவை !
இப்போதும் மனிதன் குனிந்தான்
மண்ணில் தன் முகம் பதித்தான்
வெட்கத்துடன் !
K.Natarajan
in http://www.dinamani.com  dated 28/08/2019

வாரம் ஒரு கவிதை ….” அரசியல் “

அரசியல்
+++++++++
அரசியல்  இசைக்க வேண்டும் இணக்கமான
ஒரு இசை… ஆனால்  அரசியலில்  அரங்கேறுவதோ
தினம் ஒரு நாடகம் இன்று !
அரிசியில் ஆரம்பித்து  வரிசை கட்டி காத்திருக்கு
அரசியல் மக்கள் மனதை தினம் உரசிப்பார்க்க !
அரிசியில் அரசியல், நதியில்  அரசியல், படிக்கும்
படிப்பில் அரசியல் , எதில்  இல்லை அரசியல் ?
அரசியல் செய்யவில்லை என்றால் அரசியல் வாதிக்கு
ஆட்சியில் இடமில்லை ! அரசியல் ஒரு சாக்கடை
என்றார் ஒருவர் ஒருநாள் ! இன்று அரசியல் ஒரு
சந்தைக்கடை !
வெறும் கல்லையும் வைரக்கல் என்று வாக்கு
வங்கியில் விற்று தன் வங்கிக்கணக்கில்
வெட்கமே  இல்லாமல் பணம் சேர்க்கும்
ஒரு வியாபாரமே இன்றைய அரசியல் !
Kandasami Natarajan in http://www.dinamani.com
dated  21/08/2019

வாரம் ஒரு கவிதை …” பொம்மை “

பொம்மை
+++++++++
தாயின் மடியில் குழந்தை ஒரு பொம்மை !
விளையாடும் வயதில் குழந்தையின் பிடியிலும்  ஒரு
பொம்மை ! குழந்தை வளர வளர அது விளையாடும்
பொம்மைகளும் வளரும்…. அலைபேசி ,
மடிக்கணிணி , என்று விதம் விதமாக !
சிறு குழந்தையின் பிடியில்  பேசாத பொம்மை
இருந்த காலம் மாறி , ஓயாமல் பேசிக் கொண்டே
இருக்கும் கை பேசி , மடிக்கணிணி இந்த இரண்டின்
கிடுக்கிப் பிடியில் “வளரும்  குழந்தை ” இப்போது
வெறும் பொம்மைதான் !
இயந்திர பொம்மை சொல்லும் சொல்லுக்கு
ஆடும் மனித பொம்மைகளைப்  பார்த்து
” ரோபோ ” பொம்மைகள் ” நாளை எமதே “
என்று இன்றே சொல்லுதே …கேக்குதா
மனித பொம்மைகளே  உங்களுக்கு !
K.Natarajan
14/08/2019

வாரம் ஒரு கவிதை ….” வர்ண ஜாலம் ” 2

வர்ணஜாலம்
++++++++++++++
வானவில் காட்டும் விண்ணில் வர்ணஜாலம் !
நாட்டிய மேடையில் வர்ணம் படைக்கும் அந்த
நாட்டியமேடைக்கே  ஒரு வர்ணஜாலம் !
ஒரு கலைஞனின் கையில் தூரிகை
இருந்தால் அது படைக்கும் திரையில்
வண்ண ஜாலம் !
இசைக்கலைஞரின் இசை கேட்டு மெய்
மறந்து இசையை அசை போடும் அவர்
ரசிகர் கூட்டம் …அது இசையின் தனி
ஒரு மந்திர ஜாலம் …இசையின் வர்ணஜாலம் !
இது எதுவுமே இல்லாமல் வெறும்  வாய்ப்
பந்தல் மட்டுமே போடும் ஒரு கூட்டம் !
இதை செய்வேன் அதை செய்வேன்
திரிப்பேன் மணலைக் கயிறாக நான்
என்பார் சிலர் !…வெறும்  வார்த்தை ஜாலம் !
வார்த்தை ஜாலத்தை  வர்ண ஜாலமாக
நம்பி வாக்கும் அளிப்பார் வாக்காளர்
வாய் சொல் வீரருக்கு !
நம்பி வாக்களித்த வாக்காளர் கண் முன்னால்
திரும்பி வரவே மாட்டார் அந்த வேட்பாளர்!
அது அவர் செய்யும் மாயா ஜாலம் !
கந்தசாமி  நடராஜன்
07/08/2019

வாரம் ஒரு கவிதை …” வர்ணஜாலம் ” 1

வர்ணஜாலம்
+++++++++++++
விண்ணில் ஒரு வண்ணக்கோலம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
வானவில் ! அது ஒரு வர்ணஜாலம் !
என் வீட்டு வாசலில் ஒரு மாக்கோலம்
வெள்ளை மாக்கோலம் செம்மண் கட்டி !
அதுவும் ஒரு வர்ண ஜாலம் !
கோலம் போடுவது எப்படி? …தேடுகிறார்
சிலர் ” கூகிளில் ”  !
அது இந்த காலத்தின் கோலம் !
கோலம் போடும் கலை  சிலருக்கு
இன்னும் ஒரு மாயாஜாலம் !
K.Natarajan
in http://www.dinamani.com dated  07/08/2019
07/08/2019