” நீ பாக்கற சமயம் பெரியவா உள்ளே இல்லையா …” ?

Email message forwarded by Smt Premamani
——————————————————————————————————————–
ஒருசமயம் குத்தாலத்திலிருந்து பந்தநல்லூர் வழியாக பெரியவாளுடைய மேனா வந்து கொண்டிருந்தது. இரவு பதினோரு மணி. ஆனாலும் பக்தர்கள் வழிநெடுக பெரியவாளை தர்சனம் பண்ண நின்றுகொண்டிருந்தனர்.

மேனாவின் கதவு மூடியிருந்தது. அதிக அளவில் பக்தர்கள் பெரியவாளை தரிசிக்க வேண்டியதால் மேனாவை நிறுத்தினார்கள். பெரியவாளே கதவைத் திறப்பார் என்று காத்திருந்தனர்.

ம்ஹூம் ! திறப்பதாக இல்லை! சற்றுநேரம் பொறுத்து பாரிஷதர் ஒருவர் மெல்ல மேனாவின் கதவைத் திறந்தார்…….. உள்ளே,பெரியவாளைக் காணோம்! பகீரென்றது! டார்ச் லைட்டை அடித்து உள்ளே பார்த்தார்……மேனா காலி!

அவ்வளவுதான்! பாரிஷதருக்கு கிலி பிடித்துக்கொண்டது! மெல்ல பக்கத்திலிருந்தவரிடம் “பெரியவா உள்ளே இல்லே! நன்னா பாத்துட்டேன்…” என்றார்.

“பெரியவா ஒனக்குத் தெரியாம வழில எங்கியாவது எறங்கி இருப்பா.. முன்னாடி கூட ஒருவாட்டி இப்டி பண்ணியிருக்கா” என்று சமாதானம் கூறினார்.

என்ன பண்ணுவதென்றே புரியாத நிலையில், வெளியே சொன்னால் வீண் கலவரமாகி விடுமே!என்ற கவலை வேறு! பயத்தோடு மேனாவின் கதவை மூடினார்.

கொஞ்ச நேரத்தில் உள்ளேயிருந்து முனகல் சத்தம் கேட்டது! பதைபதைக்க படாரென்று கதவை திறந்தார் பாரிஷதர். உள்ளே பெரியவா படுத்துக் கொண்டிருப்பது கண்டு திகைத்துப் போனார்! உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது!

பெரியவாளை கண்குளிர பக்தர்கள் தரிசித்ததும், மேனா கிளம்பியது. மறுநாள் அந்த பாரிஷதர் மெல்ல பெரியவாளிடம் இரவு நடந்த சம்பவத்தைக் கூறினார்.

பெரியவா சிரித்துக் கொண்டே, “ஓஹோ! நீ உள்ள பாக்கறச்சே பெரியவா உள்ள இல்லியா?…” என்று குழந்தை மாதிரி குதூகலித்துக் கேட்டார்.

“ஆமா…..பெரியவா. உயிரே போய்டுத்து!..”

“சரி, சரி, இனிமே……இப்டி சட்டு..ன்னு மேனாவோட கதவை தெறக்காதே!

இனிமே…”நம: பார்வதி பதயே!…ன்னோ, இல்லாட்டா, “கோவிந்த நாம சங்கீர்த்தனம்”…ன்னோ சொல்லிட்டு அப்புறமா கதவைத் தெற!….” என்று கூறினார்.
——————————————————————————————————————-
பகவான் நமக்குள்ளேதான் இருக்கிறான் என்றாலும், பகவன்நாமா சொன்னால்தான் உள்ளே பகவான் இருப்பது தெரியும்!

Read more: http://periva.proboards.com/thread/2078/periva-goes-missing-mena#ixzz3cqS5zcQj 

Source…www.periva.proboards.com

Natarajan

Leave a comment