சீற்றம், துயரம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கடந்த வார தலைநகரத்து மழை, ஒரு தனியார் நிறுவன ஊழியர் வாழ்வில் தந்த அனுபவங்கள் இவை!

தாம்பரம், சேலையூர் பகுதியில் தன் மனைவியுடன் வசித்து வந்தவர் அவர். வசித்தவர் என்று சொல்வதற்கு காரணமுண்டு; இப்போது அவர் சேலையூரில் இல்லை. கிண்டி, மடுவன்கரை பகுதியில், சமீபத்தில் தான் குடி புகுந்தார். ‘குடி புகுந்திருக்கிறார்’ என்று சொல்லாமல் பிழை விட்டதற்கு காரணம், மழை. ஆம், தற்போது அங்கும் இவர் இல்லை. தன் சகோதரியின் கோடம்பாக்கத்து வீட்டில், பத்திரமாக இருக்கிறார். அவர், மென்பொருள் வல்லுனர்; மனைவி, வங்கி ஊழியர். சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருக்கிறது என்பதால், இன்னும் குழந்தைகள் இல்லை. ‘நல்லவேளை, குழந்தைகள் இருந்திருந்தா ரொம்ப சிரமமாயிருக்கும்’ அவர் இப்படி பதற காரணம், மடுவன்கரையில் நிகழ்ந்த அந்த மழை சம்பவம்.
அதை அவர் விவரிக்கும் விதத்தில், இன்னும் அம்மழை இரவின் ஈரம். ‘சேலையூர்ல இருந்த வீடு, தனி வீடு; திடீர்ன்னு, வாடகையை அதிகமாக்கிட்டாங்க. அதான், மடுவன்கரைக்கு வந்துட்டோம்; வந்து 15 நாள் தான் ஆகுது! வண்டிக்காரன் தெருவுல வீடு. தரைத்தளத்துல நாங்க குடியிருக்கோம். முதல் தளத்துல, இன்னும் ரெண்டும் குடும்பம் இருக்கு. தீபாவளிக்கு முதல்நாள் அடிச்ச மழையில, தெருவுல மட்டும் தண்ணி நின்னுச்சு. அப்பவே, அக்கம்பக்கத்துல இருந்தவங்க, மழையை நினைச்சு பயந்தாங்க. ஏரியாவுக்கு புதுசுங்கறதால, நாங்க அதை பெருசா எடுத்துக்கலை. ஆனா, ஞாயிற்றுக்கிழமை, இடைவெளி இல்லாம அடிச்ச மழையில, வாசல் வரைக்கும், ‘கிடுகிடு’ன்னு தண்ணி வந்திடுச்சு. குடையைப் பிடிச்சுட்டு, கணுக்கால் அளவு தண்ணீர்ல நடந்து, ‘கேட்’ வரைக்கும் வந்து தெருவைப் பார்த்தேன்.
அம்மாடி… ஏதோ, குளத்துக்கு நடுவுல நிற்கிற மாதிரி ஆயிடுச்சு! திரும்ப நான் வீட்டுக்கு திரும்புறதுக்குள்ளே, ‘கரன்ட்’ போயிடுச்சு. அப்போ, மத்தியானம் 12:00 மணி. ‘கொஞ்ச நேரத்துல மழை விட்டிரும்; கரன்ட் வந்திரும்’ங்கற நம்பிக்கையில, முன் அறையில உட்கார்ந்து, ‘வாட்ஸ் ஆப்’ நோண்ட ஆரம்பிச்சிட்டேன். நடக்கப் போற விபரீதம் எனக்கு அப்போ தோணலை.எனக்கு பொதுவாவே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ‘டாய்லெட்’ போனா, தண்ணி அதிகம் கொட்டுவேன். அன்னைக்கும் அப்படித் தான் கொட்டிட்டு வந்து உட்கார்ந்தேன். ‘வாட்ஸ் ஆப்’ல ஒரு மெசேஜ். 15, 16, 17 தேதிகள்ல கனமழை இருக்கும்னு சொன்ன அந்த மெசேஜை நான் வாசிச்சுட்டு இருக்கும் போதே, ‘எனக்கு இன்னைக்கு கரன்ட் வரும்னு தோணலை’ன்னு சொல்லிக்கிட்டே, வீட்டுக்குள்ளே இருந்து வந்தாங்க மனைவி.
அப்போ, தெருவுல ஒரு வேன் வேகமாப் போக, அது ஏற்படுத்தின அலையில, என் வீட்டுக்குள்ளே லேசா தண்ணி இறங்குச்சு. அதுக்கப்புறம், கொஞ்சம், கொஞ்சமா தண்ணி ஏற, வீட்டுக்குள்ளே இருக்கிற பொருட்களை, வேகவேகமா பத்திரப்படுத்த ஆரம்பிச்சோம். டி.வி., கம்ப்யூட்டர், மெத்தை, புக்ஸ், கிரைண்டர், மிக்ஸி எல்லாத்தையும் பரண் மேல ஏத்தினோம். பீரோவை காலி பண்ணி, துணிமணிகளை மூட்டையா கட்டி, அதையும் பரண்ல துாக்கிப் போட்டோம். பிரிட்ஜ்ல ஒருநாளுக்குத் தேவையான காய்கறிகளும், ஒரு பாக்கெட் பாலும் தான் இருந்தது. வீடு நல்லாவே இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. மாடியில் இருந்த ஒரு குடும்பம், ‘எங்க வீட்டுக்கு வேணுமின்னா வந்திடுங்க’ன்னு சொன்னாங்க.
எனக்கு ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா, நாங்க குடிவந்த இந்த ரெண்டு வாரத்துல, அவங்க எதுவுமே எங்ககிட்டே பேசிக்கலை. அதனால, நாங்களும் அவங்களோட பேசலை. எங்களுக்கு இடையில இருந்த ‘ஈகோ’வை, அந்த மழை கரைச்சிடுச்சுன்னு, அப்போ தான் எனக்குப் புரிஞ்சது.
இரவு 8:00 மணி இருக்கும். மெழுகுவர்த்தியை ஏத்தி வைச்சுட்டு, கணுக்கால் அளவு தண்ணீர்ல வீட்டுக்குள்ளே நிற்கிறேன். கரன்ட் இல்லாததால, பிரிட்ஜ்ல இருந்த பால் கெட்டுப் போச்சு.
தண்ணிக்குள்ளே நின்னு சப்பாத்தி செஞ்சு, தொட்டுக்க ‘சாஸ்’ வைச்சு சாப்பிட்டோம். குழந்தையா இருந்தப்போ கூட, சப்பாத்திக்கு நான் ‘சாஸ்’ தொட்டு சாப்பிட்டது கிடையாது; எப்பவும் எனக்கு குருமா இருந்தாகணும். ஆனா, அன்னைக்கு எனக்கு குருமா தேவைப்படலை.
சாப்பிட்டு முடிச்சுட்டு, வீட்டுக்கு வெளியில வந்து, நானும் என் மனைவியும் மழையில கை கழுவுனோம். டேங்க்ல தண்ணி தீர்ந்து போச்சு. ‘கொஞ்சமா தண்ணி கொட்டுங்கன்னா கேட்கறீங்களா?’ என் மனைவி, என்னை திட்ட ஆரம்பிச்சாங்க. முதன்முறையா, அவங்க கோபத்துல இருந்த நியாயம் எனக்குப் புரிஞ்சது. படுக்கப் போறதுக்கு முன்னாடி, ‘ஆலந்துார் ஏரி உடைஞ்சிடுச்சாம்; நீங்க மேல வந்துடுங்க’ன்னு, மேல்வீட்டு குடும்பம் மறுபடியும் எங்களை கூப்பிட்டாங்க. ‘பரவாயில்லைங்க; திங்க்ஸ் நிறைய இருக்கு’ன்னு மறுத்துட்டு, நாங்க வீட்லேயே தங்கிட்டோம்.
அடைச்ச கதவுக்கு கீழே, காஞ்சனா பேய் மாதிரி, ஏரி தண்ணி வர ஆரம்பிச்சது. கட்டில்ல இருந்து காலை கீழே இறக்காம, ‘டார்ச்’ வெளிச்சத்துல, கட்டில் காலை பார்த்துட்டே உட்கார்ந்திருந்தோம். ‘கோடம்பாக்கத்துல இருக்கிற அக்கா வீட்டுக்கு போயிரலாமா’ன்னு தோணுறப்போ எல்லாம், அக்காவோட மாமியார் முகம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு. அதனாலேயே, அந்த யோசனையை கட்டிலுக்கு கீழே இருந்த தண்ணியில கரைச்சிட்டேன். கட்டில் கால்ல, ராத்திரி 12 மணிக்கு ‘லைட்’ அடிச்சு பார்த்தப்போ, கொஞ்சமா தண்ணி கூடியிருந்துச்சு.
இதேமாதிரி மழை பெஞ்சதுன்னா, காலையில முழங்கால் அளவு தண்ணீர்ல தான் நிற்கணும்னு, அப்பவே என் மனசு சொல்லுச்சு. அதேமாதிரி தான், காலையில தண்ணிக்குள்ளே
இறங்குனேன்.வீடு முழுக்க ஒரே துர்நாற்றம். இந்த வீட்டுல இனிமேலும் இருக்கக் கூடாதுன்னு நாங்க முடிவு பண்ணினப்போ, அதிகாலை மணி 5:00 ராத்திரி முழுக்க முழிச்சு இருந்ததால, கடுமையான பசி! மனைவியை ஒரு கையில பிடிச்சுக்கிட்டு, ஒரு கையில ‘டார்ச்’ வைச்சுக்கிட்டு, ஹாலுக்கு வந்தேன். ஆசை ஆசையா நான் வாங்கிப் போட்ட சோபாவுல, சதசதன்னு ஈரம்! வாசலுக்கு வர்றதுக்காக ஹால் கதவைத் திறந்தேன். செருப்பெல்லாம் தண்ணியில மிதந்துட்டு இருந்தது. தெரு முழுக்க, தரைத்தளத்துல இருந்த எல்லார் வீட்டுலேயும் ‘டார்ச்’ வெளிச்சம்.
இனிமே எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி, அக்காவுக்கு போன் அடிச்சேன். ‘என்ன தம்பி…இந்நேரத்துல; மழை அங்கே எப்படி இருக்கு’ன்னு கேட்டா! ‘வீட்டுக்குள்ளே தண்ணி வந்திருச்சுக்கா’ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே, ‘சார்ஜ்’ போய் என் போன் கட்டாயிடுச்சு. அடுத்த ரெண்டாவது நிமிஷம், என் மனைவி போனுக்கு அக்கா கூப்பிட்டா.
பேசுனது அவங்க மாமியார்! ‘என்னப்பா நீ, பொம்பளை புள்ளையை வைச்சுட்டு… அங்கே இருக்கலாமா; உடனே, நம்ம வீட்டுக்கு வந்துடு’ ரொம்ப உரிமையா கூப்பிட்டாங்க. மனசுக்கு ரொம்ப இதமா இருந்தது.ஒரே ஒரு டிராவல் பேக்ல, ரெண்டு பேருக்கும் டிரெஸ் எடுத்துக்கிட்டு, அதை தலையில வைச்சபடி, மனைவியை ஒரு கையில புடிச்சுக்கிட்டு, இடுப்பளவு தண்ணீர்ல, என் தெருவை கடந்து நான் வர்றப்போ… சத்தியமா சொல்றேன், என் கூடவே இருந்த என்னோட வெட்டி கவுரவம், அப்போ எட்டிக் கூட பார்க்கலை.
‘அண்ணா, இப்படி வாண்ணா… அந்தாண்ட பெரிய பள்ளம் இருக்கு’ குப்பத்து பையன் ஒருத்தன், அந்த தண்ணீர்ல என் கையை பிடிச்சு இழுத்தான். ‘ரொம்ப தேங்கஸ்ப்பா’ அடி மனசுல இருந்து, நன்றி சொல்லிட்டு வந்தேன்.இப்போ, நான் கோடம்பாக்க அடுக்கு மாடியகத்துல, ஆறாவது தளத்துல, பால்கனியில பத்திரமா நிற்கிறேன். இன்னைக்கு வெளியில மழை இல்லை. ஆனா, என் மனசுக்குள்ளே, சரமாரியா கேள்வி மழை. எப்படி என் சகோதரியின் மாமியார் மாறினார்; நாம்தான் அவரை தவறாக புரிந்து வைத்திருந்தோமா; நம் மாடி வீட்டுக்காரர் தானாக உதவி செய்ய முன் வந்தது எப்படி; கிளம்பும் தருணத்தில், ‘நீங்களும் வந்து விடுகிறீர்களா?’ என, அவரிடம் நம்மை கேட்கத் துாண்டியது எது; சின்னதாய் காலில் சேறு பட்டாலும், தோல் பிய்ந்து போகும் அளவிற்கு தேய்த்து கழுவும் நாம், இடுப்பளவு மழைநீரில் அருவருப்பில்லாமல் நடந்து வந்தது எப்படி; இது தான் வாழ்க்கையா; அல்லது இவ்வளவு தான் வாழ்க்கையா?
ஜெயகாந்தனின் அந்த வார்த்தைகள் தான், என் அத்தனை கேள்விகளுக்குமான பதில்; ஆம்…வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்!
Source….www.dinamalar.com
Natarajan