எனை நனைத்த மழை …
————————-
வானம் பார்த்து விதை விதைத்த
என் மண்ணின் விவசாயி அவன் கண்
முன்னால் கருகும் பயிர் கண்டு தன்
உயிர் போகும் வரை வடிக்கும்
கண்ணீர் உன் கண்ணில் படவில்லையா?
நல்லார் ஒருவர் இருந்தாலும் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை நீ …இன்று
மௌனம் காப்பது ஏன் ?
எம் நாட்டில் ஒரு நல்லவரும் இல்லையா ?
இல்லை ..உன் மனத்திலும் ஈரம்
இல்லாமல் நீயும் வறண்டு விட்டாயா ?
எப்போதும் என்னை நனைக்கும் மழையே
இந்த மண் நான் உன்னை கேட்கிறேன்
இன்னும் எத்தனை நாள் , என் தலை மகன்
என் உழவன் வடிக்கும் கண்ணீர் மழையில் மட்டும்
நனைய வேண்டும் நான் ?
இந்த மண் என்னை உன் மழை நீர்
நனைப்பது எப்போது ? எனை நனைக்கும்
மழையில் தானும் நனைந்து அந்த விவசாயி வடிக்கும்
ஆனந்தக் கண்ணீர் மழையில் மண் நான் பொங்கி சிரிப்பது
எப்போது ? நான் சிரிக்கும் சிரிப்பில்தானே விரிந்து
மலர வேண்டும் என் வயிற்றுப் பிள்ளைப் பயிர்கள் !
என் பிள்ளைகள் மலர்ந்து சிரிக்க எனை நனைக்க
ஓடி வா மழையே நீ ! இந்த மண் நான் குளிர்ந்தால்
வாடிய பயிர் துளிர்க்கும் … முகம் வாடிய என் உழவன்
வாழ்வும் செழிக்கும் …தேடி வந்து எனை நனைத்து
உன் சேய் என்னை அனைத்து முத்தமிடு மழைத் தாயே !
எனை நனைக்கும் மழை நீ என்னை அரவணைக்கும்
தாயாகவும் மாற வேண்டும் என சேய் நான் சொல்ல வேண்டுமா ?
My Tamil kavithai as published in http://www.dinamani.com on 6th Feb 2017
Natarajan