வாரம் ஒரு கவிதை

மாசு நீக்கிய தூசு நீ !


தூசு நீ வந்தாய் …மாசு இல்லாத காற்று 
தந்தாய் ! … மாசு இல்லாத நீல  வானமும் 
தந்தாய் நீ ! 
நீர் நிலை யாவும் தெளிந்த நீரோடை 
ஆனதும் உன்னால் !
நகரின் நடுவே வண்ண வண்ணப் 
பூக்கள் பூத்துக் குலுங்குதே உன்னால் !
புள்ளினங்கள் இசைக்குதே ஆனந்த கீதம் !
இந்த பூமி எங்களுக்கும் சொந்தம் என்று 
விலங்கினம் சொல்லாமல் சொல்லுதே 
மனிதனுக்கு !
மாசு நீங்கிய பூமி நீ தந்த வரம் !
நீ வந்த வேலை முடிந்து விட்டதே 
இன்னும் ஏன் ஒட்டிக் கொண்டு 
இருக்கிறாய் இந்த பூமியில் ?
ஒருவேளை மனிதன் மனதின் 
மாசும் அகல வேண்டும் என்று 
காத்து இருக்கிறாயா நீ ? 

கந்தசாமி நடராஜன்

வாரம் ஒரு கவிதை

புது வசந்தம் 


கத்தி இல்லை ரத்தம் இல்லை 
யுத்தம் ஒன்று பார்த்து விட்டோம் 
இன்று ! இதுதான் மூன்றாம் 
உலகப் போரா !

அவன்  பெரியவன் இவன்  சிறியவன் 
என்னும் பேதம் இல்லை உனக்கு !

கண்ணுக்கு தெரியவில்லை நீ யார் 
என்று உலகுக்கு !

உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டாய் 
இயற்கையை மீட்டு எடுத்து விட்டாய் 

மாசு இல்லா நீல வானம் …தெளிந்த 
நீர் ஓடை … மனிதன் சுவாசிக்க 
மாசில்லா நல்ல காற்று ! நினைத்துப் 
பார்த்தால் இது ஒரு அதிசயமே !

பறவைகளின் இனிய கீதம் …அந்த காலம் 
அந்த காலம் என்று சொல்வோமே அந்த 
வசந்த காலம் மீண்டும் புது வசந்தமாய் 
மலர ஒரு தூசு நீதானே காரணம் !

தூசு தட்டி எழுப்பிவிட்டாய் புது உலகை !
மாசு படிந்த மனித  மனமும் ஓசையின்றி 
வேற்றுமையில் ஒற்றுமை கீதம் இசைக்கும் 
இந்த நேரம் தூசு நீ வந்த வேலை முடிந்தது 
என்று ஓசை இல்லாமல் கிளம்பி விடு !

சராசரி மனிதன் எனக்கும் புது உலக அழகைப் 
பார்க்க ஆசை !சிறகடித்துப் பறக்கும் 
பறவையின் இன்னிசை கீதம் கேட்க ஆசை !

கந்தசாமி நடராஜன்