வாரம் ஒரு கவிதை

மாசு நீக்கிய தூசு நீ !


தூசு நீ வந்தாய் …மாசு இல்லாத காற்று 
தந்தாய் ! … மாசு இல்லாத நீல  வானமும் 
தந்தாய் நீ ! 
நீர் நிலை யாவும் தெளிந்த நீரோடை 
ஆனதும் உன்னால் !
நகரின் நடுவே வண்ண வண்ணப் 
பூக்கள் பூத்துக் குலுங்குதே உன்னால் !
புள்ளினங்கள் இசைக்குதே ஆனந்த கீதம் !
இந்த பூமி எங்களுக்கும் சொந்தம் என்று 
விலங்கினம் சொல்லாமல் சொல்லுதே 
மனிதனுக்கு !
மாசு நீங்கிய பூமி நீ தந்த வரம் !
நீ வந்த வேலை முடிந்து விட்டதே 
இன்னும் ஏன் ஒட்டிக் கொண்டு 
இருக்கிறாய் இந்த பூமியில் ?
ஒருவேளை மனிதன் மனதின் 
மாசும் அகல வேண்டும் என்று 
காத்து இருக்கிறாயா நீ ? 

கந்தசாமி நடராஜன்