நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று …

Dear all,
Please go through this patiently .We will realise what mistakes we  do and unable to over come.Mankind itself could not over come these mistakes after thousands of years. If we avoid them peace and happiness are guaranteed.

Marcus Tullius Cicero

இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் முன்பு ரோமாபுரியில் வாழ்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (Marcus
Tullius Cicero) (கி.மு106 –43) ஒரு மிகச்சிறந்த பேச்சாளர், வக்கீல்,
அரசியலறிஞர், எழுத்தாளர், கவிஞர், தத்துவஞானி மற்றும் விமரிசகர். அவர் அன்றைய
மனிதர்களின் ஆறு தவறுகளை முட்டாள்தனமானவை என்று கூறியிருக்கிறார். கால
ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த
தவறுகள் அகற்றப்படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த
தவறுகளைப் பார்க்க முடிகிறது என்பது வருத்தத்திற்குரியது தான்.

சிசரோ அவருடைய கூர்மையான அறிவால் அன்று கண்டுணர்ந்து இன்றும் நம்மிடையே
இருக்கின்ற அந்த தவறுகள் இவை தான்:

1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோ தான் சொந்த நலனைப் பெற முடியும்
என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது:
இது குறுகிய காலத்திற்குப் பலன் தருவது போலத் தோன்றினாலும் நீண்ட காலத்திற்கு
சிறிதும் உதவாத ஒரு வழியாகும். இயல்பாக நியாயமான வழிகளில் நாம் முன்னேறும் போது
மற்றவர்களை முந்திக் கொண்டு செல்வது நேர்வழி மட்டுமல்ல நம் வளர்ச்சியும் இந்த
வழியில் நிச்சயமானதாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மற்றவர்களைப் பின்னுக்குத்
தள்ளியும், அழித்தும் முந்தி நிற்க முயன்றால் அதற்கே நம்முடைய காலமும்,
சக்தியும் முழுவதும் செலவாகும். நாம் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டி
வரும். மேலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளுவதோ, முன்னேற விடாது தடுப்பதோ
நீண்ட காலத்திற்கு முடிகிற விஷயம் அல்ல. எந்தத் துறையிலும், வாழ்க்கையிலும்
வெற்றி பெற விரும்புவோர் இந்தத் தவறான கருத்தை விட்டு விடுவது
புத்திசாலித்தனம்.

2) மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்களுக்காகக் கவலைப்படுவது:
ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்கள்
கண்டிப்பாக இருக்கவே செய்கின்றன. அதற்கெல்லாம் கவலைப்படுவதும், கண்ணீர்
விடுவதும் எந்த விதத்திலும் நமக்கு உதவப்போவதில்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு
எதுவும் மாறி விடப் போவதில்லை. மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் அளவு
மனம் இல்லா விட்டாலும் அவற்றை சகித்துக் கொள்ளும் அளவாவது பக்குவத்தை நாம்
வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கை முடிவில்லாத கவலையாகவே
இருந்து விடும்.

3) நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது:
நம் அறிவுக்கும் சக்திக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளமாகவே இருக்கின்றன. இன்று
இருக்கும் எத்தனையோ அறிவியல் அற்புதங்கள் ஒரு காலத்தில் மனிதனால் கற்பனையாலும்
கூட நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்திருக்கின்றன. சிசரோவின் காலத்தில்
ரேடியோ, தொலைபேசி, விமானம், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை
மனிதர்களுக்கு விந்தையிலும் விந்தையாக இருந்திருக்கும். அது போல இக்காலத்தில்
நினைத்துப் பார்க்கவும் முடியாத எத்தனையோ அற்புதங்கள் எதிர்காலத்தில் சாதாரண
சமாச்சாரங்கள் ஆகி விட முடியும். அப்படி இருக்கையில் தனி மனிதர்களான நாம்
நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது என்று நினைப்பது கற்பனையான
கர்வமாகவும், அறிவின் குறைபாடாகவே தான் இருந்து விட முடியும்.

4) உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும்
தள்ளி வைக்க முடியாதது:
உலகையே உலுக்கும் சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. சமீபத்திய ஜப்பானில் ஏற்பட்ட
நில நடுக்கம், சுனாமி போன்றவற்றினால் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, உற்றார்
உறவினர்களை இழந்து, சில நொடிகளில் தங்கள் வாழ்வின் பல கால உழைப்பின் செல்வத்தை
இழந்து நின்று அவல நிலைக்கு வந்ததைப் பார்த்தோம். மனித வாழ்க்கையின் நிலைமை
அந்த அளவு நிச்சயமற்றதாக இருக்கையில் நான் சொன்னது போல் அவன் நடக்கவில்லை, இவன்
என்னை மதிக்கவில்லை, என்னிடம் விலை உயர்ந்த கார் இல்லை, என்னை அனாவசியமாக சிலர்
விமரிசிக்கிறார்கள், சொன்ன நேரத்தில் வேலை நடக்கவில்லை என்ற சில்லறை
விஷயங்களில் மனம் கொதிக்கிற அல்லது வெம்புகிற மனோபாவம் நகைக்கப்பட வேண்டியதே
அல்லவா? நான் பெரியவன், அதை எல்லாரும் அங்கீகரிக்க வேண்டும், என்னைக் கவனிக்க
வேண்டும், என் விருப்பப்படி அனைத்தும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணங்களை
ஒதுக்கி வைக்க முடியாதது குறுகிய மனங்களின் சாபக்கேடு. எந்தப் பெரிய பிரச்னைகள்
இல்லா விட்டாலும் இந்த மனோபாவம் இருந்து விட்டால் அது போகும் சுகவாழ்வையும்
நரகமாக மாற்றுவதற்கு.

5) மனதைப் பண்படுத்தவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும் தவறுவது மற்றும் நல்ல
நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது:
வாழ்க்கையில் சௌகரியங்களையும் செல்வத்தையும் அதிகரித்துக் கொள்ள மனிதன் தன்
வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். ஏனென்றால் அதை அளக்க முடிகிறது.
மற்றவர்கள் அதை வைத்துத் தான் மதிக்கிறார்கள் என்ற சிந்தனையையும் பொதுவாக
எல்லோரிடமும் பார்க்க முடிகிறது. ஆனால் மனம் அந்த அளவு வெளிப்படையாகத்
தெரிவதில்லை என்பதால் அதைப் பண்படுத்திக் கொள்ளவோ பக்குவப்படுத்திக் கொள்ளவோ
பெரும்பாலான மனிதர்கள் பெரிதாக முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் உண்மையில் தனி
மனித நிம்மதியும், மகிழ்ச்சியும் அவன் மனதின் பக்குவத்தை மட்டுமே பொருத்தது.
சேர்த்த செல்வமும், அடைந்த புகழும் அடுத்தவர்கள் கண்களுக்கு பிரமிப்பை
ஏற்படுத்தலாமே ஒழிய மனதை அவை எல்லாம் நிரப்பி விடுவதில்லை. கல்வியும்
பெரும்பாலான மக்களுக்குக் கல்லூரிகளோடு முடிந்து விடுகிறது. நல்ல தரமான நூல்களை
அதற்குப் பிறகும் படித்து அறிவையும், பண்பாட்டையும் வளர்த்துக் கொள்ளும்
பழக்கம் குறைவான மக்களிடத்திலேயே இன்றும் உள்ளது. சிசரோ அன்று ரோமானியர்களிடம்
கண்ட இந்தக் குறை ரோமாபுரியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது
என்பதை வரலாறு சொல்கிறது. எனவே வீழ்ச்சியை விரும்பாத மனிதன் எல்லா விதங்களிலும்
மனதைப் பண்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

6) நம்மைப் போலவே நினைக்கவும் வாழவும் அடுத்தவர்களைக் கட்டாயப்படுத்துவது:
’நான் நினைப்பது தான் சரி, என்னுடைய வழிமுறைகள் தான் சிறந்தவை’ என்று நினைப்பது
மிகப்பெரிய தவறு. அப்படி நினைப்பதோடு நின்று விடாமல் அடுத்தவர்களையும் அப்படியே
நினைக்கவும், நடந்து கொள்ளவும் எதிர்பார்ப்பதும் கட்டாயப்படுத்துவதும்
மிகப்பெரிய குற்றம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நிறைய மனிதர்களிடம் இந்தக்
குற்றமுள்ள போக்கை நாம் காணமுடிகிறது. நம் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும்
சுதந்திரம் நமக்கு உள்ளது. ஆனால் அடுத்தவர்கள் எண்ணங்களும், கொள்கைகளும்,
வாழ்க்கை முறைகளும் நம்முடையதைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது
கிட்டத் தட்ட அவர்களை அடிமைப்படுத்த நினைக்கும் முனைப்பே. நம் வழி உண்மையாகவே
சிறந்ததாகவே உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அதை அடுத்தவரிடம் பலவந்தமாகத்
திணிக்க முடியாது. அப்படித் திணிப்பது வெற்றியையும் தராது. நம்முடைய நகலாக
உலகம் இருக்க முடியாது, இருக்கவும் தேவையில்லை என்று உணர்வது மிக முக்கியம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் தாக்குப்பிடித்து வந்துள்ள இந்தத் தவறுகள்
நம்மிடம் இருக்கிறதா என்று நேர்மையுடன் சோதித்துப் பார்ப்பது நல்லது. இருந்தால்
அவற்றை நம்மிடம் இருந்து நீக்கிப் பயனடைந்து மற்றவர்களும் அப்படி நீக்கிக்
கொள்ள விரும்பும்படி நல்ல முன் உதாரணமாக வாழ்ந்தால் அது வாழ்க்கையின்
மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

நன்றி – …….நடராசன் …

FEB 16 2012.

— 

2 thoughts on “நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று …

  1. VASUGI NAMBI's avatar VASUGI NAMBI February 17, 2012 / 9:52 am

    It’s true. All the 6 are thought provoking and not to be repeated mistakes.

  2. ayub madurai's avatar ayub madurai February 18, 2012 / 4:24 am

    thavarukal seiyatha manitharkal illai, aanaal thavarai unarnthu thannai thiruthikolbavane manithan, aanal yaarum muyarchi seivathu illai.

Leave a reply to ayub madurai Cancel reply