SOURCE:::Input from one of my contacts….we never knew that our chillie has got such a solid history!!!!
Natarajan
மிளகாயில் இத்தனை தகவல்களா ?
உப்பளத்தில் குளித்து வெயிலோடு உறவாடி…வத்தலானேன்
சங்க காலம் முதல் சமையலின் காரச் சுவைக்காக மிளகு பயன்பாட்டில் இருந்தது.
அதேபோல கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க உணவில் மிளகாய் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளார்கள்.
ஈயூடோவரில் 6000 வருடங்களுக்கு முன்னரே தேர்ந்தெடுத்த இனமாகப் பயிரிடப்பட்டுள்ளதாம். மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் முதல் முதலாகப் பயிரப்பட்ட செடியாகவும் இதையே சொல்கிறார்கள்.
கிரிஸ்தோபர் கொலம்பஸ் அவர்கள் அமெரிக்காவிலிருந்து கண்டுபிடித்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார். அப்பொழுது Chille pepper என அழைத்தார்கள்.
ஐரோப்பியாவிலிருந்து போர்த்தீக்கேய வியாபாரிகளால் ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள்.
மிளகாய் இனங்களில் 400 வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். அசாம் மிளகாய் மிகவும் சிறிய வகையானது. காரத்தில் மிகவும் கூடியது.
இலங்கையில் கானல் கொச்சிக்காய் என ஒரு வகை இதுவும் சிறியது அதீத காரமானது. ஊசி மிளகாய் எனத் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.
![]() |
| நன்றி – subaillam.blogspot.com |
தென்பகுதியில் ஒரு வகை சராய் (உறைப்பு ) என கூறி விற்பார்கள். ஒரு சிறிய மிளகாய் ஒரு கறிக்குப் போதுமானது.
பூட்டான் நாட்டில் மிளகாயை பழ வகைகளில் அடக்குகிறார்கள். பழத்தைப் பதனிட்டு போத்தலில் அடைத்துப் பயன்படுத்துகிறார்கள்.
கார வேறுபாடுகள்
காரம் என்பது ஒரு சுவை என்ற போதும், காரத்தை விஞ்ஞான ரீதியாகவும் அளக்கலாம்.
மிளகாய்களை காரத்தன்மை கொண்டு வகைப்படுத்த சுகோவில் அளவு (scoville units )பயன்படுத்தப்படுகிறது
இனிப்பு மிளகாய் – காரத்தன்மை 0 -1000 சுகோவில் அளவுவரை இருக்கும். குடமிளகாய், இனிப்பு பனானா, செர்ரிமிளகாய், பிமென்டோ இவ்வகையைச் சார்ந்தன என்கிறார்கள்.
மிதமான கார மிளகாய் – இதன் காரத் தன்மை 1000 – 3000 சுகோவில்வரை ஆன்ரோ, பசில்லா,கஸ்காபெல், சண்டியா இந்தவகையைச் சேர்ந்தவை.
இடைப்பட்ட கார மிளகாய் – 3000 – 6000 சுகோவில்வரை அலபினோ,மியாசாய் இந்த வகைகள்.
காரமிளகாய் – 5000 – 100,000 சுகோவில் வரை. டபாஸ்கோ, செர்ரானோ,கயேன், பிக்வின், தாய்லாந்து மிளகாய் இவ்வகையின.
அதீதகார மிளகாய் – 80,000 – 300,000 சுகோவில்வரை ஆபெர்னரோ, ஸ்காட்ச்பானெட்டு அதீத வகையைச்சேர்ந்தனவாக இருக்கின்றன என்கிறார்கள்.
வடிவ வேறுபாடுகள்
மிளகாய்களில் நீளமானவை, வட்டவடிவமானவை, குறுகியவை, அகன்ற வகை, ஒடுங்கிய வகை என பலவகைகள் இருக்கின்றன.
பச்சை கலர் மிளகாய்கள்தான் பெரும்பாலும் இருக்கின்றன.
கறுப்பு, வெள்ளை, கத்தரிப்பூ,மஞ்சள்,சிவப்பு வர்ணங்களிலும் மிளகாய்கள் இருக்கின்றன.
கத்தரிப்பூ
மிளகாய் வத்தல்கள்
பச்சை மிளகாயை நாங்கள் மோரில் இட்டு வத்தலாக்கிப் பயன்படுத்துகிறோம்;.
மார்ச் ஏப்ரல் கோடை ஆரம்பத்தில் வத்தல் மிளகாய் இடும் காலம் தொடங்கிவிடும்.
முன்னோர்கள் நாலு ஐந்து கிலோ மிளகாயை வாங்கி அவித்து உலர வைத்து பெரிய டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்வார்கள். குடும்பமும் பெரிதல்லவா மழைக் காலத்திற்கும் கைகொடுக்கும்.
இப்பொழுது குடும்பங்கள் சிறியதாக இருப்பதால் கால்கிலோ அரைக்கிலோ மிளகாயே தாராளமாகப் போதும்.
கத்தரிக்காய், வெண்டைக்காய் பொரித்த குழம்பு, தக்காளி குழம்பு, மோர்குழம்பு, வெங்காயக் குழம்புகளிலும் பப்படக் குழம்பு, மோர்களிகளிலும் வத்தல் மிளகாயைப் பொரித்துக் கலந்து கொள்ள சுவை கூட்டும்.
வத்தல் மிளகாய்ச் சட்னி, வத்தல் மிளகாய் காரக் குழம்பும் செய்து கொள்ளலாம்.
வத்தல் மிளகாயை சாதம், புட்டுக்குப் பொரித்து உண்பார்கள் யாழ் மக்கள். வத்தல் மிளகாயும் தயிர்ச் சோறும் நல்ல கொம்பினேஸன்.
விரத காலத்தில் அப்பளம், மோர் மிளகாய், வடகம் இல்லாத சமையல் இருக்காது.
சுவையும் அதுவே தண்டனையாகவும் அதுவே
காரத்திற்காகப் பயன்படுத்தும் மிளகாய் தண்டனைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உண்மையை வரவழைக்க மிளகாய் சாக்கினுள் ஆளைக் கட்டி வைப்பார்கள் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பழைய காலத்தில் சிறுவர்களுக்கு மிளகாயை கண்ணில் பூசுவேன் என வெருட்டுவார்கள்.
கள்ளனை விரட்டவும் மிளகாய்பொடி பயன்படுகிறது. துணிவுள்ளவர்கள் உங்கள் கண்களைக் காப்பாற்றி கள்ளனை விரட்டுங்கள்.
இந்திய இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆயுதமாக மிளகாயைப் பயன்படுத்துகிறார்களாம். கண்ணீர் புகைக் குண்டு போன்ற கிரனேட்டுகளைத் தயாரிக்க உலகின் மிகக் காரமான மிளகாயைப் பயன்படுத்துகிறார்களாம். 1,000,000 சுகோவில் ( Scoville units) அளவிற்கு அதிகமான மிளகாய் இதுவாம்.
சடங்கு சம்பிரதாயங்களில் மிளகாய்
இத்துடன் சிறு குழந்தைகளுக்கு கண்ணூறு கழிக்கவும் மிளகாயையும் உப்பையும் சுற்றி எடுத்து அடுப்பில் போட்டு வெடிக்க வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.
கடைகளின் வாயில்களில் மிளகாயையும் எலுமிச்சம் பழத்தையும் தொங்க விட்டிருப்பதையும் காணலாம்.
வத்தல் மிளகாய் செய்வோமா?
உப்பு மிளகாய், வத்தல்மிளகாய், மோர் மிளகாய், உப்பு புளி மிளகாய் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
இவ் வத்தல் மிளகாயில் நலமுண்டா எனக்கேட்காதீர்கள். அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்துக்கு கெடுதியைத் தரும். நாக்கின் சுவைக்கு எப்போதாவது சாப்பிடலாம்.
அல்சர் நோயுள்ளவர்கள் இந்தப் பக்கம் போகவே வேண்டாம். உப்பு அதிகம் என்பதால் பிரசர் இருப்பவர்கள் நிட்சயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ரோல் உள்ளவர்களுக்கும் எண்ணையில் பொரிப்பதால் ஏற்றதல்ல.
1. மோர்மிளகாய்.
உப்பு, மோருடன் காய்களைப்போட்டு ஊற வைத்து இரண்டு நாட்கள் வீட்டினுள்ளே மூடி வைத்து எடுத்து வெயிலில் காய வைத்து எடுப்பார்கள்.
2. உப்பு மிளகாய்.
நீரில் உப்பிட்டு மிளகாய் போட்டு ஒரு கொதி விட்டு எடுத்து வடித்து வெயிலில் காயவிடுதல்.
3. உப்பு புளி மிளகாய்.
புளி நீரில் உப்பிட்டு மிளகாயைப் போட்டு ஒரு கொதிவிட்டு எடுத்து வெயில் உலர வைத்து எடுத்தல்.
மூன்று முறைகளுமே வெவ்வேறு சுவைகளைத் தரும்.






