தேநீர் கடையில் மனித நேயம் ….

செங்கல்பட்டு  அரசு தலைமை  மருத்துவமனைக்கு  எதிராக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் தேநீர் கடையில் எப்போதும் “ஜே ஜே’  என்று  கூட்டம். இந்தக் கடையின் தேநீர், பலகாரங்கள் சுவையாக இருப்பது மட்டுமல்ல இந்தக் கூட்டத்திற்குக்  காரணம். பினீஷும், அவரது அண்ணன் ஷிபுவும் சேர்ந்து இலவசமாக  வழங்கி வரும் சுத்திகரிக்கப்பட்ட  தண்ணீர்தான்   கடையில் நிற்கும் கூட்டத்திற்கும், பலரது பாராட்டுகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. வருஷத்தில் 365  நாட்களும் இந்த சுத்திகரித்த   தண்ணீர் இலவசமாக இங்கு கிடைக்கும்.

தண்ணீர் எடுத்துக் கொள்ள வருபவர்கள்  “தண்ணீர் வேண்டும்’  என்று யாரிடமும் கேட்கத் தேவையில்லை.  கேனில் இருக்கும்  தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். கேனில் தண்ணீர் தீர்ந்து விட்டால், தண்ணீர் இருக்கும் கேனைத்  திறந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.  தண்ணீர் பிடிக்க வருபவர்களுக்கு அத்தனை சுதந்திரம் வழங்கப்படுகிறது.  இதற்காக,  தண்ணீர் எடுப்பவர்கள் வடை, பஜ்ஜி அல்லது டீயை வாங்க வேண்டும் என்றோ நிர்பந்தமும் இல்லை. அதிசயம், ஆச்சரியமாக இருக்கும் இந்த தண்ணீர் பந்தலின் பின்னணியின் ரகசியம்தான் என்ன என்று  தெரிந்து கொள்ள பினீஷை  சமீபித்தோம்:

“”உண்மைதான்…. இங்கே யார் வேண்டுமானாலும் வந்து  சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை எவ்வளவு வேண்டுமானாலும்  இலவசமாக  எடுத்துக் கொள்ளலாம். கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு நாளைக்கு  இருபது லிட்டர்  தண்ணீர்  கேன்   நூறு முதல் நூற்றிப்பத்து வரை செலவாகிறது. இந்தத்  தண்ணீர் கேன்களை இரண்டு ஏஜென்சிகளிடமிருந்து வாங்குகிறோம். ஒரு கேன் பத்தொன்பது ரூபாய். இப்ப குடிக்கிற தண்ணீர்   மூலமாகத்தான்   வியாதிகள் அதிகம் பரவுது. தவிர, குடி தண்ணீர் இலவசமா  எங்கேயும் கிடைப்பதும் இல்லை.  கொடுப்பதும் இல்லை. இங்கு வர்றவங்க எதிரே இருக்கிற மருத்துவமனைக்கு வரும் ஏழைபாழைகள்தான்.  அவங்களால   விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியாது. அவங்களுக்குப்   பயன்படுகிற மாதிரி  நாங்க எங்களை மாற்றிக்  கொண்டோம்.  ஒரு வருஷமா  இலவச  தண்ணீர்  வழங்கி வருகிறோம்.

எங்களுக்கு  கேரளாதான் பூர்வீகம்.  இங்கே பிழைக்க வந்து  இருபத்தேழு வருசமாச்சு.  அப்பா ஆவடி டேங்க்  பேக்டரியில்  ஃபோர்மேனாக   ஓய்வு பெற்றவர்.   நாங்க நான்கு சகோதரர்கள்.  ஒரு சகோதரர்  செங்கல்பட்டு பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் கடை போட்டிருக்கிறார். ஒருவர் கேரளத்தில் வியாபாரம் செய்கிறார். நானும்  அண்ணன் ஷிபுவும்  இந்தக் கடையை நடத்தி வருகிறோம்.  பதினைந்து நாள்  நான் கடையைப் பார்த்துக் கொள்வேன்.  அப்போது அண்ணன்  ஷிபு  குடும்பத்தைப் பார்க்க கேரளா போய்விடுவார்.  பதினைந்து நாட்கள் கழிந்து அவர் திரும்ப செங்கல்பட்டு வரும்போது  நான் கேரளா புறப்பட்டுவிடுவேன்.

நான் எலெக்ட்ரானிக்சில்  டிப்ளோமா படித்தவன்.  டீ  கடை  நடத்துவது குறித்து எந்த  வருத்தமும் இல்லை.  “என்ன வேலை செய்தாலும்  உழைத்து  வாழணும்.. தில்லுமுல்லு கூடாது என்று அப்பா  எங்களை வளர்த்திருக்கிறார்.  அப்பா தேவையான சொத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார்.  காலை நான்கு மணிக்கு கடையைத் திறப்பேன்.  இரவு பத்து மணிக்கு வியாபாரத்தை நிறுத்திவிடுவேன்.  கடையில் நான்கு பேர்  சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.   எல்லாரும் உள்ளூர்க் காரர்கள்.

இந்தத்  தண்ணீர்  சேவைக்கு முக்கிய காரணம், எனது  கடையிருக்கும் கட்டடத்தின் உரிமையாளர் சேகர்தான். தங்கமான மனதுக்காரர்.  எங்களை காலி செய்யுமாறு பலரும் அவரிடம் பேசினார்கள்.  அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் அவர் எங்களைக் காலி   செய்யச் சொல்லவில்லை.  அதுமட்டுமல்ல, பல ஆண்டுகளாக  வாடகையையும் அவர்  உயர்த்தவில்லை.  அவர் எங்களுக்கு இப்படி உதவும் போது, நாமும்  பிறருக்கு உதவலாமே  என்ற எண்ணத்தில் எங்களுக்கு தோன்றியதுதான்  இந்த இலவச  தண்ணீர் வசதி.

வீட்டுக்கு  வரும் விருந்தாளிகளுக்கு வந்தவுடன்  பிரியாணியோ..  சாப்பாடோ தருவதில்லை.  குடிக்க  கொஞ்சம்  தண்ணீர் கொடுப்போம்.  தாகம் வரும் போதுதான் குடி தண்ணீரின் அருமை தெரியும்  என்பதில்லை.  காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் போதும் தண்ணீரின்  அருமை  புரியும்.  அதுவும் கையில் காசு இல்லாதவர்கள்  தண்ணீர் வாங்க  படும் அவதியிருக்கிறதே..  அதை விவரிக்க முடியாது.  ஒரு நாளைக்கு இரண்டாயிரம்  ரூபாய்   தண்ணீருக்காகச் செலவாகிறது உண்மைதான். மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானவர்கள் எங்கள் கடைக்குத்தான் வருவார்கள். அவர்களால்தான் நாங்கள் பிழைக்கிறோம்.  அதற்கு கைமாறாக  இந்த  சிறிய  பங்களிப்பை நானும் அண்ணனும்  செய்யத் தொடங்கியிருக்கிறோம்.  எங்களது நோக்கத்தைத் தெரிந்து கொண்டதினால், அரசியல் கட்சிக்காரர்கள் கடை  அடைப்பு நடத்தினாலும்  எங்கள் கடையைத் திறந்து கொள்ள  அனுமதிப்பார்கள்.

மருத்துவமனைக்கு வரும் சாதாரணமானவர்களுக்கு   “குடிக்க  தண்ணீர் கிடைக்க வேண்டும் ..தண்ணீர் கிடைக்கா விட்டால்  அவர்கள் அவதிப்படுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக  எங்களுக்கு அனுமதி தரப்படுகிறது’ என்கிறார்   பினீஷ்.

 

 

 

 

 

 

Source….. பிஸ்மி பரிணாமன்   in http://www.dinamani.com dated 13/10/2018

Natarajan