SOURCE::::: REDERS VOICE IN DINAMALAR.. A TAMIL DAILY….
Natarajan
பொறுப்பே இல்லையே யாருக்கும்! கே.எஸ்.குமார், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: தமிழ்நாடு எக்ஸ்பிரசில், தீ விபத்து ஏற்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம், நெஞ்சை உலுக்கியது. வட மாநிலம் முழுவதும், இருளில் மூழ்கியது; “பவர் கிரிட்’டில் கோளாறு ஏற்பட்டது. ஆனால், “அமெரிக்காவை விட, நாம் மோசம் இல்லை’ என்கிறார் மந்திரி. சாலை விபத்தில், 25 யாத்திரிகர்கள் பலி. இது தான், விபத்துக்கான, “சீசன்’ போலும்; மற்றபடி தமிழகத்தில் சிறுமி ஸ்ருதி உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மற்றொரு சிறுமி பள்ளி பேருந்திலேயே, அடிபட்டு உயிரிழந்த கொடுமை, அசாமில் நடுத்தெருவிலேயே இளம்பெண் மானபங்கப்படுத்தப்படுகிறார்; படம் பிடித்து ஒளிபரப்பும் அவலம்! கோல்கட்டாவில் இளம் பெண்ணை மானபங்கப்படுத்தும் போது தடுத்த, தந்தைக்கு அடி, உதை. அந்தப் பெண், “அநாகரிகமாக உடை உடுத்தியது அந்த இளைஞர்களை தூண்டியது’ என்று, மம்தா கட்சி எம்.எல்.ஏ., திருவாய் மலர்ந்தார். மங்களூரில், பிறந்தநாள் பார்ட்டி நடந்த வீட்டின் உள்ளே புகுந்து, “இந்து புரட்சியாளர்கள்’ அங்கிருந்தவர்களை அடித்து துரத்துகின்றனர்; அதுவும், “லைவ்’ ரிலே!என்ன தான் நடக்கிறது இந்தியாவில்? நிர்வாகம் என்று ஒன்று செயல்படுகிறதா? பற்றாக்குறைக்கு, பாகிஸ்தான் டூ இந்தியா சுரங்கம் தோண்டி இருக்கின்றனர்! எல்லைக் காவல் லட்சணம், இது தானா? மேற்கண்ட அவலங்களுக்கெல்லாம், பொறுப்பில்லா தன்மை அனைத்து தரப்பிலும் மேலோங்கி இருப்பது தான் காரணம். அரசு வேலைக்கு ஆலாய் பறப்பவர்கள் நினைப்பதெல்லாம், எந்த பொறுப்பும் இன்றி, ஜாலியாக சம்பளம் வாங்கலாம் என்பதே; இது மிகவும் கசப்பான உண்மையே! என்ன தவறு செய்தாலும், நடவடிக்கை வராது என்ற தைரியம் தான். யாராவது, “முட்டாள்’தனமாக நடவடிக்கை எடுத்தால், ஜாதி, மத அரசியல் தொடர்புகள் முந்தி வந்து காப்பாற்றி விடும் என்ற நினைப்பும் தான் காரணம். இன்னும் எத்தனை அப்பாவி பொதுமக்கள், அருமை ஜவான்கள் உயிரிழப்புக்கு, பொறுப்பில்லாத்தனம் காரணமாக இருக்கப் போகிறதோ! அரசியல்வாதிகள், காவல் துறையினர் மட்டுமல்ல, பொதுமக்களும், உணர்ச்சிகள் மரத்துப் போய் உள்ளனர் என்பதே நிஜம்!
விடுமுறையில் மட்டும்…: ஜூலி வில்சன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அன்னா ஹசாரே ஓர் ஆண்டாக, “ஊழல் எதிர்ப்பு’ என்று போராடிய நாடகத்தின் உண்மை நோக்கம், அரசியல் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. மக்களால் மட்டும் தான் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியும்; அரசாலும் முடியாது, அரசியல்வாதியாலும் முடியாது. மின் தடையை அரங்கேற்றியதும், இவர்களுக்காகத் தான் என்று பேசுவது, பக்கா அரசியல் லாபத்துக்காக. இவர்களின் போராட்டத்தை திசை திருப்ப, எட்டு மாநில மக்களையா கஷ்டப்படுத்துவர்? பேசாமல், வரும் லோக்சபா தேர்தலில் நின்று, மக்களின் ஆதரவை பெற்று பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை பதவி ஏற்று, ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கட்டும். அதை விடுத்து, அன்னாவின் உறவினரான அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்கால பதவி ஆசைக்காக, மக்கள் பணிக்குச் செல்லாமலும், மாணவர்களை கல்லூரிக்குச் செல்லாமல் தடுத்து, போராட்டத்திற்கு வருமாறு அழைத்து, அப்படி செய்தால் தான், ஊழல் இல்லா இந்தியா உருவாகும் என்கிறார். இப்படி செய்தால், படிப்பறிவில்லாத, பசி, பட்டினி, ஏழைகள் உடைய நாடாகத் தான், இந்தியா மாறும் என்பதை, அவர் உணர வேண்டும். அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும், தங்களின் நாடகத்தை, விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தவும். அப்படி செய்தால், கூட்டம் கூடி, உங்களை பெருமை படுத்துவர்.