மறக்க முடியாத மாமனிதர்…..நீதியரசர் முத்துசுவாமி அய்யர்

SOURCE::::: ” DINA MALAR “….Tamil Daily….AN ARTICLE BY JUSTICE . V. RAMASUBRAMANIAN

Natarajan

ஆங்கிலேய பார்லிமென்ட்டில், 1861ல் இயற்றப்பட்ட, “இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டம்’ அளித்த அதிகாரத்தின் அடிப்படையில், விக்டோரியா மகாராணியால், 1862ல் வழங்கப்பட்ட உரிமைப் பட்டயம், (லெட்டர்ஸ் பேடன்ட்) மூலம் இந்திய நாட்டில் முதலில், மூன்று இடங்களில் உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. ஜூலை 1, 1862ல் கோல்கட்டாவிலும், ஆகஸ்ட் 14, 1862ல் மும்பையிலும், ஆகஸ்ட் 15, 1862ல் மதராஸ் மாகாணத்திலும், உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. எனவே, இந்நாட்டில் தோன்றிய முதல் மூன்று நீதிமன்றங்களில், சென்னை உயர் நீதிமன்றமே இளைய நீதிமன்றமாகும். ஆனாலும், இந்த நீதிமன்றம், துவங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 15, இந்திய நாட்டின் சுதந்திர தினமாகப் பின்னாளில் அமைந்தது, வியப்புக்குரியது.

இந்த நீதிமன்றம் துவங்கப்பட்டு, 16 ஆண்டுகளுக்குப் பின், 1878ல் தான் முதல் முதலாக, ஒரு இந்தியர், நீதிபதியாகப் பணியமர்த்தப்பட்டார். தெரு விளக்கில் படித்து, மேதையானார் என்று பலராலும் அந்நாளில் வியந்து போற்றப்பட்ட சர் டி.முத்துசாமி அய்யர் தான் அப்பெரியவர். 17 ஆண்டுகள், உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி, 1895ல் இறந்து போன அன்னாருக்கு, ஆங்கிலேய நீதிபதிகளே உயர் நீதிமன்ற வளாகத்திற்குள், ஒரு பளிங்குச் சிலையை நிறுவினர்.

செய்தி என்ன? இன்றும், உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில், உயிரோட்டத்தோடு அமர்ந்திருக்கும் அந்த சிலை, நமக்கு சொல்லும் செய்திதான் என்ன என்பதை எண்ணிப் பார்ப்பதே, இந்நாளில் மிகப் பொருத்தமாக இருக்கும். சர் டி.முத்துசாமி அய்யர், நீதிமன்றத்தில் நடந்து கொண்ட விதம், நீதி தேவதையின் பால் கொண்ட பக்தியால் காலணி அணிந்து கொள்ளாமலேயே, 17 ஆண்டுகள் அவர் பணியாற்றிய பாங்கு, அவர் வழங்கிய தீர்ப்புகள் ஆகியவற்றை நினைவு கூர்வதை விட, அவர் வாழ்வில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களைப் பதிவு செய்வது, பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

முதல் சம்பவம், ரங்கூனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த, “தன வணிகன்’ என்ற பத்திரிகையில், ஜூன் 15, 1933 அன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் காணப்பட்டு, 1968ல் உலகம் சுற்றிய முதல் தமிழன் என்று பலரால் பாராட்டப்பட்ட அ.கருப்பண்ணன் செட்டியார் என்ற ஏ.கே.செட்டியாரால் வெளியிடப்பட்ட, “தமிழ்நாடு – நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரைகள்’ என்ற நூலில், மறு பதிவு செய்யப்பட்டது. ஏ.கே.செட்டியார் முதன் முதலாக உலகமெங்கும் பயணம் செய்து, மகாத்மா காந்தியைப் பற்றி முதல் ஆவணப் படம் (டாக்குமென்டரி) தயாரித்தவர். அந்த நூலில் சர் டி.முத்துசாமி அய்யரைப் பற்றி வெளிவந்திருக்கும் சம்பவத்தை, அதே மொழியிலேயே வார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால், அதை அப்படியே தருகிறேன்.

“ஒரு ரயில்வே சம்பவம்’: டில்லியிலிருந்து வெளிவரும், “ராய்ஸ் வீக்லி’ என்ற பத்திரிகையில், ஓர் அன்பர் பின் வருமாறு எழுதுகிறார்… பல ஆண்டுகளுக்கு முன், கோடைக்கால விடுமுறையை உத்தேசித்து, சர் டி.முத்துசாமி அய்யரும், வேறு மூன்று ஐகோர்ட் நீதிபதிகளும், உதகமண்டலத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். ரயில் முன்னிரவு புறப்பட்டு, மறுநாள் காலை உதகமண்டலம் செல்கிறது. சர் டி.முத்துசாமி அய்யர், முதல் வகுப்பு கம்பார்ட்மென்ட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். பாதி ராத்திரியில், ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றது. ஓர் ஆங்கிலோ – இந்திய ஸ்டேஷன் மாஸ்டர், இவரை அதட்டி எழுப்பி, “இந்த கம்பார்ட்மென்டை காலி செய்யுங்கள். ஓர் ஐரோப்பிய கனவான், தம் மனைவி சகிதம், இந்த கம்பார்ட்மென்ட்டிலே பிரயாணம் செய்ய வேண்டும்’ என்றார்.

இந்தியருக்கு அல்ல: சர் டி.முத்துசாமி அய்யர், இதென்னவென்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையில், “சீக்கிரம், வண்டி இங்கே அதிக நேரம் தாமதிக்காது. ஐரோப்பிய கனவான் காத்துக் கொண்டிருக்கிறார்’ என்று, ஸ்டேஷன் மாஸ்டர் மீண்டும் துரிதப்படுத்தி விட்டு, ஐரோப்பியரைப் பார்த்து, “நீங்கள் வண்டியில் ஏறுங்கள்; நான் சாமான்களை ஏற்றுகிறேன்’ என்று கூறினார். “முதலில் அவர் வெளியே வரட்டும்’ என்றார் ஐரோப்பியர். சர் டி.முத்துசாமி அய்யர், அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டார். முதல் வகுப்புக் கம்பார்ட்மென்டில் வேறு எங்கும் இடமில்லாமையால், இரண்டாவது வகுப்புக் கம்பார்ட்மென்ட் ஒன்றில் போய் அமர்ந்தார். அதற்கு முன்னர், “முதல் வகுப்புப் பிரயாணிகளை, நடுத்தூக்கத்தில் தொந்தரவு செய்யக் கூடாதென்று ஒரு விதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா’ என்று, சர் டி.முத்துசாமி அய்யர், ஸ்டேஷன் மாஸ்டரை நோக்கிக் கேட்டார். அதற்குள் ஐரோப்பியர், “இந்த விதியெல்லாம் ஐரோப்பியருக்கேயன்றி, இந்தியருக்கல்ல’ என்றார். மறுநாள் காலை, போத்தனூர் ஜங்ஷன் வந்து சேர்ந்தது ரயில். மூன்று ஐரோப்பிய ஐகோர்ட் ஜட்ஜுகளும், பிளாட்பாரத்திற்கு வந்து, தன் சகோதர ஜட்ஜ் எங்கே என்று பார்த்தனர். சர் டி.முத்துசாமி அய்யர் இருந்த கம்பார்ட்மென்ட்டில் ஓர் ஐரோப்பியர் இருந்ததைப் பார்த்தனர். அவர், இவர்களைப் பார்த்து, சலாம் செய்து கொண்டே வெளியே வந்தார். அவர் ஒரு ஜில்லா ஜட்ஜ். “சர் டி.முத்துசாமி அய்யர், இந்தக் கம்பார்ட்மென்டில் இருந்தாரே, எங்கே?’ என்றார் ஐகோர்ட் ஜட்ஜ்களில் ஒருவர். “சர் டி.முத்துசாமியா?’ என்று ஜில்லா ஜட்ஜ் திடுக்கிட்டுப் போனார். பாதி ராத்திரியில் நடைபெற்ற சமாசாரங்களையெல்லாம் விஸ்தாரமாகக் கூறினார். ஐகோர்ட் ஜட்ஜுகள், அவரை கடிந்து கொண்டனர். பின்னர், இவர்கள் அடுத்த கம்பார்ட்மென்ட்டில் சென்று பார்க்கையில், அங்கே மற்றொரு பிரயாணியின் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, சீராட்டிக் கொண்டிருந்தார் சர் டி.முத்துசாமி அய்யர். ஐகோர்ட் ஜட்ஜுகளைப் பார்த்ததும், குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே பிளாட்பாரத்துக்கு வந்தார். ஐகோர்ட் ஜட்ஜுகளில் ஒருவர், முத்துசாமி அய்யரை பார்த்து, “நேற்றிரவு தங்களை அவமானப்படுத்திய இவர், ஒரு ஜில்லா ஜட்ஜ். இவர், தங்கள் மன்னிப்பைக் கோரி நிற்கிறார்’ என்றார். “இது ஓர் அற்ப விஷயம். இதை மறந்துவிட வேண்டும்’ என்று கூறி, ஜில்லா ஜட்ஜைப் பார்த்து, “ரயில்வே விதிகளுக்கு நேற்றிரவு நீங்கள் வியாக்கியானம் செய்தீரே… அதே மாதிரி நீதி ஸ்தலத்தில் அமரும்போது, வியாக்கியானம் செய்யாதீர்…’ என்று கூறினார் சர் டி.முத்துசாமி அய்யர்!’

இச்சம்பவம் முத்துசாமி அய்யரின் பெருந்தன்மையை நினைவுபடுத்தும் என்றால், இன்னொரு சம்பவம், அவரது பண்பு நலனை காட்டும். அச்சம்பவம் தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாத அய்யரால், “நல்லுரைக் கோவை’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையும் தமிழ்த் தாத்தாவின் மொழியிலேயே நான் வடிக்கிறேன்: “கல்விப் பயிற்சியில் தமிழக இளைஞர்களுக்கு உதாரண புருஷர்களாக விளங்கிய பெரியோர்களில் நீதிபதி முத்துசாமி அய்யரும் ஒருவர். வறிய குடும்பத்தில் பிறந்து, மிக்க துன்பத்தில் ஆழ்ந்து, கல்வி கற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதியாக வந்திருக்கிறார். இவரோடு சிலமுறை பழகும் பேறு எனக்குக் கிடைத்ததுண்டு. இவருடைய குணங்களுள் மிகச் சிறந்தது பழமையை மறவாத இயல்பு.

இதை விளக்கும் ஒரு நிகழ்ச்சி வருமாறு: கும்பகோணம் காலேஜில் பிரின்சிபலாக இருந்த ராவ்பகதூர் த.கோபால ராவ் வீட்டில், 1880ம் வருடம், ஒரு கல்யாணம் நடைபெற்றது. அதற்கு, தமிழகத்தில் உள்ள பல உத்தியோகஸ்தர்கள், பெரிய மிராசுதார்கள் வந்திருந்தனர். அந்த விசேஷத்துக்கு முத்துசாமி அய்யரும் வந்தார். கோபால ராவ் வீட்டின் பக்கத்து வீட்டுத் திண்ணையில், ஒரு கிழவி வெளியூரிலிருந்து வந்து தங்கினாள். அவள், முத்துசாமி அய்யரைப் பார்க்கும் பொருட்டு வந்தவள். அந்த வழியே போவோர்களை அவள், “ஜட்ஜ் முத்துசாமி அய்யர் வந்திருக்கிறாராமே? இங்கே இருக்கிறாரா?’ என்று கேட்டாள். அவர்கள், அவளை லட்சியம் செய்யவில்லை. சிலர், “அவரைப் பற்றி நீ ஏன் கேட்கிறாய்?’ என்று கடுமையாகவும், சொல்லிவிட்டுப் போனார்கள்.

பார்க்க முடியுமா? இப்படி இரண்டு நாள், அந்தக் கிழவி, வருவோர், போவோர்களை விசாரித்துக் கொண்டே, கவலையுடன் இருந்தாள். தனக்குத் தெரிந்த வீடுகளுக்குச் சென்று, ஆகாரம் செய்து விட்டு, மீண்டும் அந்தத் திண்ணையிலேயே வந்து தங்கினாள். மூன்றாம் நாள் முத்துசாமி அய்யருடைய பரிசாரகர் அவ்வழியே சென்றார். கிழவி அவரையும் வழக்கம்போல் விசாரித்தாள். “பாட்டி… என்ன சொல்லுகிறாய்?’ என்று அவர் அன்புடன் விசாரித்தார். “ஜட்ஜ் முத்துசாமி அய்யர் இங்கே வந்திருக்கிறாராமே. அவரை நான் பார்க்க முடியுமா?’ என்று கேட்டாள் கிழவி. “நீ எந்த ஊர் பாட்டி?’ “நான் திருவாரூர். அவரைச் சிறு பிராயத்திலிருந்தே எனக்குத் தெரியும். அவரைப் பார்க்க வேண்டுமென்றே வந்திருக்கிறேன். இந்தக் கல்யாணத்துக்கு அவர் வரக் கூடுமென்று விசாரித்து, நான் தெரிந்து கொண்டேன். அதனால், ஒரு துணையுடன் மெல்ல மெல்ல நடந்து இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன்.’ “அவரை எப்படி உனக்குத் தெரியும்?’ “திருவாரூரில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எனக்குத் தெரியும். என் கையால் அவருக்கு சாதம் போட்டிருக்கிறேன். என்னையும் அவருக்கு ஞாபகம் இருக்கும். என் பேரைச் சொன்னால், தெரிந்து கொள்வார்’ என்று சொல்லிவிட்டு, தன் பெயரையும் கிழவி சொன்னாள். “அப்படியா… இங்கேயே இரு… நான் போய் விசாரித்துக் கொண்டு, உன்னை அழைத்துப் போகிறேன்.’ “நீ மகாராஜனாக இருக்க வேணும்… எப்படியாவது, அவரை நான் பார்த்துவிட்டுப் போனால் போதும்’ என்று கிழவி கூறினாள். முத்துசாமி அய்யர் இருந்த இடத்திற்கு நேரே பரிசாரகர் சென்றார். முத்துசாமி அய்யர் பல கனவான்களுக்கிடையே இருந்து பேசிக்கொண்டிருந்தார். பரிசாரகர் இவரை அணுகி, இவரது காதில் மட்டும் படும்படி, கிழவியின் பெயரைக் கூறி, அவள், பார்க்க வேண்டுமென்று ஆவலோடு வந்து காத்திருப்பதையும், தெரிவித்தார். “அப்படியா?’ என்று கேட்டுக் கொண்டே, திடீரென்று முத்துசாமி அய்யர் எழுந்தார். பரிசாரகர் வழிகாட்ட, விரைவாக இவர், கிழவியிருந்த திண்ணைக்கு வந்தார். அங்கிருந்த யாவரும், இவரைப் பின் தொடர்ந்தனர். முத்துசாமி அய்யர், கிழவியின் அருகே சென்று, “அம்மா… சவுக்கியமா…?’ என்று சொல்லிக்கொண்டே மேல் ஆடையை இடையிற் கட்டிக்கொண்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். “முத்துசாமியா?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் கிழவி. “ஆமாம்’ என்றார் அய்யர். இவ்வளவு நாள் காத்துக் கஷ்டப்பட்ட கிழவி, இவரே நேரில் வருவாரென்று எதிர்பார்க்கவில்லை. “சவுக்கியமா, அம்மா…?’ என்று அன்பு வழிந்த குரலில் முத்துசாமி அய்யர் கேட்டார். “சவுக்கியந்தான்ப்பா… உன்னைப் பார்க்க வேண்டுமென்ற குறை பல நாளாக இருந்தது. உன்னுடைய கீர்த்தியை நான் கேட்டுக் கேட்டு, மனம் பூரித்துப் போனேன்… நீ அங்கங்கே உத்தியோகமாக இருப்பதை அடிக்கடி விசாரித்துத் தெரிந்து கொண்டே இருப்பேன்… இப்போது யாருக்கும் ஆகாத பெரிய உத்தியோகம் உனக்கு ஆகியிருக்கிறதாமே?’ “ஆமாம், எல்லாம் உன்னுடைய அன்ன விசேஷமே… எனக்கு நீ பசியாற அன்னம் போட்டதும், தலை வாரிப் பின்னியதும், ஆதரவு காட்டியதும், என்னுடைய மனசில் குடிகொண்டிருக்கின்றன.’

“மகாராஜனாக, நீ தீர்க்காயுசோடு இருக்க வேண்டும். நீ பட்டணத்தில் இருக்கிறாயே. உன்னைப் பார்ப்பது எப்படியென்று எண்ணியிருந்தேன். பகவான் வழி விட்டார். எனக்கு அரைக்கண் இருக்கும்போதே உன்னைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது பூர்த்தியாயிற்று.’ “நீ எப்படி இங்கே வந்தாய்…?’ “நடந்து வந்தேன். உன்னை பார்ப்பதற்காகவே ஒரு துணையை அழைத்துக் கொண்டு வந்தேன்.’ “எனக்குத் தெரிந்திருந்தால், நானே உன்னைப் பட்டணத்துக்கு அழைத்து வரச் செய்திருப்பேன்.’ “என்னைப் பற்றி யார் உனக்குச் சொல்லுவர்? நான்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீயும் மறக்காமல் இருந்தாயே; அதுவே போதும்.’ ஒரு தாயும், குழந்தையும் அன்போடு பேசுவதைப் போல, அவ்விருவரும் பேசிக் கொண்டிருப்பதையும், உலகத்தையே மறந்து அவர்கள் அன்பில் ஆழ்ந்திருப்பதையும் கண்ட அக்கூட்டத்தினர், அசைவற்று நின்று, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தனர். “சரி… இப்போதாவது என்னுடன் பட்டணம் வந்துவிடு… சவுக்கியமாக இருக்கலாம்…’ என்றார் முத்துசாமி அய்யர். “பட்டணத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? கடைசிக் காலத்தில் திருவாரூரிலே இருந்து, தியாகராஜாவை தரிசனம் பண்ணிக்கொண்டு, இந்த கட்டையை ஒரு நாள் கீழே போட வேண்டியது தானே.’ “உனக்கு ஏதாவது வேண்டுமா?’ “ஒன்றும் வேண்டாம். உன்னைக் கண்குளிரப் பார்த்தேனே; அதுவே போதும்.’ அக்கிழவி, முத்துசாமி அய்யருடைய இளமைப் பருவத்தில், அவருக்கு அன்னமிட்டு வந்தவள் என்று, யாவருக்கும் பின்பு தெரிய வந்தது. அவள் தனக்கு ஒன்றும் வேண்டாமென்று சொல்லியும், முத்துசாமி அய்யர் சில புடவைகளையும், போர்வை முதலியவற்றையும் வாங்கிக் கொடுத்து, பணமும் அளித்து, துணைக்கு ஒருவரை அனுப்பி, திருவாரூருக்கு வண்டியிலே கொண்டு போய் விட்டு வரச் செய்தார். “பண்புடையார்ப்பட்டுண்டு உலகம்’ என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்ததால் அன்றோ, ஆங்கிலேயர்களாலேயே சிலை வைத்து வணங்கப் பட்டவர் ஆனார் முத்துசாமி அய்யர். இதுவன்றோ இந்நீதிமன்றத்தின் மாண்பு.

3 thoughts on “மறக்க முடியாத மாமனிதர்…..நீதியரசர் முத்துசுவாமி அய்யர்

  1. Suma's avatar Suma September 9, 2012 / 5:09 am

    Very moving article on a great man! Thanks for bringing his life to light…we have forgotten what true humility is and such great men always remind us with their lives!

  2. vaidya's avatar vaidya September 11, 2012 / 11:13 am

    On reading this great story of a Great son of India, nobody has any worhtiness to comment
    It is very hearterning to hear such things really happened .this has to go the future generation through various media..

Leave a reply to vaidya Cancel reply