செல் {ல} பிள்ளையார் !!!

என்ன பண்றதுன்னே தெரியலை… பிரச்னைக்கு மேல பிரச்னை ஒவ்வொண்ணா வந்துகிட்டே இருக்கு…!’
“இதுக்கு ஏன் கவலைப்படறே… பிள்ளையாருக்கு ஒரு போன் பண்ணிப் பேசு…! அவர் தீர்த்துவைச்சுடுவார்.’
பொண்ணுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டேன். இப்போ பார்த்து எதை எடுத்தாலும் தட்டிக்கிட்டே போகுது!
கணபதிக்கு ஒரு கால் பண்ண வேண்டியது தானே!
வியாபாரம் நொடிச்சே போயிடும்போல இருக்கு. கணேஷ்தான் கண்ணைத் திறக்கணும். அவருக்குத்தான் போன் பண்ணி கஷ்டத்தைச் சொல்லப்போறேன்.
இப்படியெல்லாம் யாராவது பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?
பாவம் ரொம்ப கஷ்டம் போல இருக்கு. அதான் ஏதோ உளறுறாங்க… கடவுளுக்காவது போன் போட்டுப் பேசறதாவது! என்றுதானே நினைப்பீர்கள்?
ஆனால் மகாராஷ்டிராவில் இந்தூரில் உள்ள சிந்தாமன் கணேஷ் மந்திர் பற்றி கேள்விப்பட்டிருந்தால் நீங்கள் இப்படி நினைக்க மாட்டீர்கள்.
காரணம், அங்கிருக்கும் பாண்டாக்கள் (அர்ச்சகர்கள்) வைத்திருக்கும் மொபைலுக்கு தினம் தினம் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகின்றன. ஆனால் அவை அவர்களுக்கானது அல்ல. அங்கே அருள்பாலிக்கும் பிள்ளையாருக்கு.
இது என்ன புதுக் கதையா இருக்கிறது என்கிறீர்களா?
இது கதையல்ல நிஜம். வெளியூர், வெளிநாடு என்று எங்கெங்கெல்லாமோ இருந்து பக்தர்கள் இந்த கணபதிக்கு போன் செய்கிறார்கள். உடனடியாக செல்போனை விநாயகரின் காதருகே வைக்கிறார்கள் பாண்டாக்கள். நம் ஊரில் பக்தர்கள் நந்தியின் காதுகளில் பேசுவதுபோல, போன்வழியே தங்களின் கோரிக்கைகளை கணபதியின் காதில் சொல்கிறார்கள். அத்தனையையும் ஆகுவாகனன் கேட்டுக் கொண்டு பிரச்னைகளைத் தீர்த்துவைப்பான் என்று நம்புகிறார்கள்.
விஷயத்தைச் சொன்னதும் ஏதோ சமீபகாலத்தில் கட்டப்பட்ட கோயிலின் நூதன உத்தி என்று நினைத்துவிடாதீர்கள்.
சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது. இப்பகுதியின் செல்வாக்கு மிகுந்த விநாயகராக இருந்த இவர் “செல்’ கணபதியாக மாறியது ஒரு சுவையான சம்பவம். வேண்டுவோர் வேண்டுவன தரும் இந்த விநாயகரிடம் பக்தர்கள் கோரிக்கைகளை நேரில் வந்து சொல்வது வழக்கமாம். கடந்த அரை நூற்றாண்டுக்கு முன் இங்கிருந்த பலர், வெளியூர், வெளிநாடுகள் சென்றதில் கோயிலுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் தங்கள் வேண்டுதலை கடிதமாக எழுதுவதும், அர்ச்சகர்கள் அதனை பிள்ளையார் முன் நின்று படிப்பதும் பழக்கமானத.
அஞ்சல் மட்டுமே தொலைத் தொடர்புக்கென இருந்த நிலை மாறி, இன்று செல்போன் பிரதான இடத்தைப் பிடித்துக் கொண்டதில் பக்தர்களும் தங்கள் கோரிக்கைகளை மொபைல் வழியே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
கடிதம் எழுதி அதனை அர்ச்சகர் கணநாதன் முன் படிப்பதை விட, செல்போன் மூலம் பேசுவதில் தாங்களே பிள்ளையாரிடம் நேரில் சொல்வதுபோன்ற மன நிறைவு கிடைப்பதால் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போய் இன்று ஒவ்வொரு நாளும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறதாம் இந்த கணபதிக்கு. கோரிக்கையுடன் போன் செய்யும் பக்தர்களை காத்திருக்க வைத்தல் கூடாது என்பதால்தான் உடனுக்குடன் அவற்றை எடுத்த கணபதியின் காதினருகே வைக்கின்றனர்.
வேண்டுதல்கள் மட்டுமின்றி, பிரார்த்தனை ஈடேறியதற்காக பிள்ளையாருக்கு நன்றியையும் போனிலேயே தெரிவிக்கிறார்கள் பலர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்றால் தலபுராணம் இல்லாமல் இருக்குமா? இருக்கிறது, கிருஷ்ணருடன் தொடர்புடைய புராணம்.
கிருஷ்ணர், சிந்தாமணி (ஸ்யமந்தக மணி?) என்ற அபூர்வ மணியைத் தேடியலைந்த சமயத்தில் இருக்கும் இடத்தினை அடையாளம் காட்டியவராம் இந்த கணபதி.
கேட்டதைத் தரும் கற்பக மரம்போல இந்த சிந்தாமணியும் கேட்டதை உடனே தருமாம். கணபதி வழிகாட்டலில் அதனைக் கண்டுபிடித்த கிருஷ்ணர், முடிவில் அந்த ஒப்பற்ற மணியை பிள்ளையாருக்கே தந்துவிட்டாராம். அதனால் வந்த பெயர் தான் சிந்தாமணி விநாயகர். சிந்தாமன் கணேஷ், சிந்தாஹரன் (சிந்தா என்றால் துயரம் என்றும் சிந்தாஹரன் என்றால் துயரங்களைப் போக்குபவர் எனவும் அர்த்தமாம்) என்றெல்லாம் அழைக்கிறார்கள் மத்தியப் பிரதேசத்து பக்தர்கள்.
சுற்றுப்பகுதியில் உள்ள எவர் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் முதல் அழைப்பு இந்த மூத்த தெய்வத்திற்குத்தான். வாகனங்கள் வாங்கினாலும் இவர் முன் எடுத்துவந்து பூஜித்த பிறகே ஓட்டத் தொடங்குகிறார்கள்.
கிருஷ்ணருடன் தொடர்புடைய புராணம் இருப்பதால் மகாவிஷ்ணுவும் இங்கே இடம் பிடிக்கிறார்.
பதினோராம் நூற்றாண்டுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கோயில், மகாராஷ்டிராவை பராமர்கள் ஆட்சிசெய்த காலத்தில் அமைக்கப்பட்ட கோயில் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கருவறையில்தானே தோன்றிய சுயம்பு வடிவினராக காட்சி அளிக்கிறார் சிந்தாமன் கணேசர். அவரது மனைவியரான சித்தியும், ரித்தியும் அருகே விக்ரக வடிவில் அமைந்து அருளாசி வழங்குகின்றனர்.
முழுக்க முழுக்க கற்களால் அமைக்கப்பட்ட ஆலயம். அலங்காரத் தூண்கள், எழிலான மண்டபம் என கோயில் நாளுக்கு நாள் வளர்ந்திருந்தாலும், பிள்ளையார் தானே தோன்றிய இடமான கருவறை, மாற்றம் ஏதுமின்றி அப்படியே, தெய்வீக மணம் நிறைந்திருக்கிறது.
ரித்தி, சித்தி சமேத விநாயகரையும், தனிச் சன்னதியில் காட்சிதரும் மகாவிஷ்ணுவையும், பக்தர்கள் சமமாகவே கருதி வணங்குகிறார்கள். ஆனால் பிரச்னைகளைச் சொல்வது பிள்ளையாரிடம் மட்டும்தான்.
பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் உற்சவத்தின்போது இந்த கணேசருக்கு வரும் போன்கால்களின் எண்ணிக்கை, தொலைத்தொடர்பு சேவையையே திணறச் செய்யுமாம்.
மத்தியபிரதேச பக்தர்களின் செல்லப் பிள்ளையாரான இந்த “செல்’ல பிள்ளையை வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் ஒருதடவை சென்று தரிசியுங்கள்.
அல்லது, Shree chithaman ganesh mandir, railway station road, retnakhedi, madyapradesh – 456 006, india என்ற முகவரிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். உங்கள் பிரச்னையை பிள்ளையார் காது கொடுத்துக் கேட்பார். நிச்சயம் தீர்த்துவைப்பார்.

எங்கே இருக்கிறது? 
மத்தியபிரதேச மாநிலத்தில் உஜ்ஜயினிக்கும் ஃபேட்டாபாத்துக்கும் இடையே ஜுனி இந்தூர் எனும் இடத்தில் இருக்கிறது.

எப்படிச் செல்வது? மத்தியபிரதேசத்தின் பல இடங்களில் இருந்தும் டாக்ஸி வசதி இருக்கிறது. இந்தூர் மற்றும் போபாலில் இருந்து பேருந்து வசதி உண்டு.

ஜெயாப்ரியன்

source::::::Kumudam Bhakthi  Weekly

natarajan

natarajan

Leave a comment