” படித்ததில் மனதை தொட்டது …”

உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:

மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான், எந்தக் காலத்திலும் மறக்க முடியாது; மணிமேகலையின் முகவுரையில், ‘இவற்றுள் மிகப் பழமையானதும், பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும், மற்றப் பிரதிகளில் குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் போன பாகங்களையெல்லாம் ஒழுங்குப்படச் செய்ததும், கோப்புச் சிதைந்து அழகு கெட்டு, மாசு பொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை, அவள் அணிந்து கொள்ளும் வண்ணம் செவ்வனே செய்து கொடுத்ததும், மிதிலைப்பட்டி பிரதியே…’ என்று எழுதினேன்.
அது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது; புதுக்கோட்டையைச் சார்ந்த திருமெய்யம் என்னும் இடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளில் சிலவற்றை எனக்கு கொடுத்து உதவியவர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்னும் ஓர் அன்பர்.
அழகிய சிற்றம்பலக் கவிராயர் ஒரு செல்வந்தர். அவரோடு பழகிய காலத்தில், அவருடைய முன்னோர்களைப் பற்றி, பல வரலாறுகளை எனக்குச் சொல்லியிருக்கிறார். தம் முடைய சொந்த அனுபவங்கள் பலவற்றையும் சொன்னது உண்டு. அவற்றுள் ஒன்று வருமாறு:
ஒரு நாள், எங்கோ நெடுந்தூர முள்ள ஒரு ஊருக்கு கல்யாணத்திற்கு அவர் போயிருந்தார். மீண்டும் ஊருக்குத் திரும்ப எண்ணி, ஒரு வண்டிக்காரனிடம் வண்டி பேசி, அமர்த்திக் கொண்டார். இரவு முழுவதும், பயணம் செய்ய வேண்டி இருந்தது; வண்டிக்காரன் மூன்று ரூபாய் வாடகை கேட்டான். அன்றியும், ஊருக்குப் போகையிற் பொழுது விடிந்து விடும் என்பதால், காலையில் சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டான்.
ராத்திரியில் வண்டி புறப்பட்டது; கவிராயர் அதில் படுத்துக் கொண்டார். நல்ல நிலா வெளிச்சம் இருந்தது; வண்டிக்காரன் ஆனந்தமாக, தெம்மாங்கு பாடல் பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
பின், வண்டிக்காரன் மெல்ல அவருடைய குடும்ப நிலையைப் பற்றி விசாரித்தான்; கவிராயர் சொல்ல ஆரம்பித்தார்…
‘நான் இருப்பது மிதிலைப்பட்டி; எங்கள் முன்னோர்கள் எல்லாம் பெரிய வித்துவான்கள். எவ்வளவோ நூல்களைச் செய்திருக்கின்றனர்; பல இடங்களில் பரிசுகள் பெற்றிருக்கின்றனர். அவர்களில் ஒருவராகிய அழகிய சிற்றம்பலக் கவிராயருக்கு, இந்த மிதிலைப்பட்டி கிராமமானது, அக்காலத்தில் இந்தப் பக்கத்தில் ஜமீன்தாரராக இருந்த வெங்களப்ப நாயக்கர் என்பவரால் கொடுக்கப்பட்டது. அது சம்பந்தமான சாசனம் எங்கள் வீட்டில் இருக்கிறது.
எங்களுக்கு இப்போது ஜீவாதாரமாக இருப்பதும், எங்கள் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்கும்படி செய்வதும், அந்த வெங்களப்ப நாயக்கர் கொடுத்த கிராமமே! அவருடைய அன்னத்தை தான், இப்போது நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்.
‘வெங்களப்பர் செய்த தானங்களாலும், தர்மங்களாலும் அவருடைய புகழ் இன்றும் நிலைத்திருக்கிறது. அவரால் ஆதரிக்கப்பெற்ற நாங்களும், நல்ல நிலையில் இருக்கிறோம். ஆனால், அவருடைய பரம்பரையோ இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. வெங்களப்ப நாயக்கருடைய பரம்பரையினர் யாரேனும் இப்போது இருக்கின்றனரோ, இல்லையோ தெரியவில்லை…’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், அயர்ச்சியால் தூங்கி விட்டார்.
விடியற்காலையில் வண்டி மிதிலைப்பட்டி வந்து சேர்ந்தது; வீட்டை அடைந்த கவிராயர், தம்முடைய வேலைக்காரனை அழைத்து, வண்டிக்காரனுக்கு பழையது போடும்படி சொன்னார்.
அப்போது வண்டிக்காரன், ‘எனக்கு சாப்பாடு வேண்டாம்; நான் போய் வருகிறேன், உத்தரவு கொடுங்கள்…’ என்று சொன்னான்.
‘நீ ஊர் போய் சேருவதற்கு, அதிக நாழிகை ஆகுமே… சாப்பிட்டு விட்டுப் போ…’ என்று வற்புறுத்தினார்.
‘இல்லை; போகும் வழியில் தெரிந்தவர் வீட்டில் சாப்பிட்டுக் கொள்வேன்…’ என்றான் வண்டிக்காரன்.
‘சரி; வாடகை ரூபாயை வாங்கிக் கொண்டு போ…’
‘அது கிடக்கட்டும் ஐயா; நான் போய் வருகிறேன்…’என்றான்.
‘ஏனப்பா பணத்தை வேண்டாம்ன்னு சொல்றே… எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே…’ என்று கேட்டார்.
‘நேற்று ராத்திரி உங்கள் முன்னோர் கதையைச் சொன்னீர்களே… அவர்களை ஆதரித்த வெங்களப்ப நாயக்கர் குடும்பத்தில் பிறந்தவன் நான்; ஏதோ தலைவிதி, இப்படி என்னை வண்டியோட்டச் செய்து விட்டது. கொடுத்துவிட்ட பின், அவர்களிடம் பெறுவது கவுரவமாகாது; மன்னிக்க வேண்டும்…’ என்று கூறி, வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு போய் விட்டான். சிற்றம்பலக் கவிராயர், இதைச் சொல்லுகையில், அவர் கண்களில் நீர் தளும்பி விட்டது.

Source:::: Dinamalar.com….varamalar
Natarajan

Leave a comment