காலேஜ் டு களத்துமேடு !!!!

source:::::DINAMALAR…Tamil Daily…
Natarajan
விவசாயிகளே வயல்களை பிளாட்களாக்கி நகரங்களுக்கு நடக்கும் காலம் இது. இந்தக் காலகட்டத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நேராக கலப்பையும் கையுமாக களத்துமேட்டுக்குப் புறப்பட்டிருக்கிறார்கள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி.ஏ. படித்த அக்காவும் எம்.காம். படித்த தம்பியும்.
கரூர் அருகே உள்ள தட்டாம்புதூரைச் சேர்ந்த வினோதாவும் அவரது தம்பி முருகானந்தமும்தான் அவர்கள். விவசாயத்தை ஏதோ பொழுதுபோக்காக மட்டும் நடத்தாமல் ஆறு ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் சம்பாதித்தும் இவர்கள் புரட்சி செய்துள்ளனர். இந்தச் சாதனை பற்றிக் கேட்டால், முருகானந்தம் பெருமிதத்துடன் பேசத் தொடங்கினார்.
“எங்க அம்மாவும் அப்பாவும் விவசாயம் செய்துதான் எங்களை படிக்க வைத்தார்கள். “நாங்கள்தான் காடு மேடுனு வெயில்ல கஷ்டப்படறோம் நீங்களாவது நல்ல வேலைக்குப் போயி சந்தோசமா இருங்க’னு சொல்வாங்க. பக்கத்துல சின்னதாராபுரத்துல இருக்கிற காலேஜ்லதான் படிச்சோம். அதனால் காலேஜ் போறதுக்கு முன்னாடியும் வந்த பிறகும் தோட்டத்தில் வேலை செய்வோம். எங்க அக்கா எம்.பி.ஏ. முடிச்சதும் வேலைக்குப் போகலாம்னு முடிவு செய்தா, சம்பளம் 10 ஆயிரம்தான் தருவதாகச் சொன்னார்கள். ஆனா அக்கா அந்த வேலைக்குப் போகல. அதைவிட அதிகமா விவசாயத்துல சம்பாதிக்கிறேன்னு சவால் விட்டாங்க. நானும் கல்லூரிக்குச் சென்றுகொண்டே அக்காவிற்க உதவியாக இருந்தேன். நான் எம்.காம். முடித்ததும் “நீயாவது நல்ல வேலைக்குப் போய் சொகுசாக இரு’ என்றார்கள். ஆனா எனக்கும் பத்தாயிரம் ரூபாக்குத்தான் வேலை கிடைச்சது. அதனால் நானும் அக்காவுக்கு உதவியா விவசாயத்துல குதிச்சிட்டேன். ஊரிலுள்ளவர்களெல்லாம் “விவசாயத்தை நம்பி வேலையை விடாதே கஷ்டப்படுவே’ என்றார்கள். “விவசாயத்தில் ஜெயித்துக் காட்டுகிறோம் பாருங்கள்’ என்று நானும் அக்காவும் தீவிர விவசாயத்தில் இறங்கினோம். முதல் இரண்டு வருடம் லாபம் கிடைக்கவில்லை. ஊர்க்காரர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதைப்பற்றி கவலைப்படாமல் திட்டமிட்டு பயிர் செஞ்சோம். முருங்கை, தர்பூசணி, கடலை பயிரிட்டோம். முடிந்தவரை இயற்கை மருந்துகளை மட்டும் பயன்படுத்துவோம். காலை 6 மணிக்கு தோட்டத்துக்குள் சென்றால் மதியம் 12 மணிக்குத்தான் வெளியே வருவோம். கடுமையாக உழைத்ததால் 2 ஏக்கரில் 60 டன் தர்பூசணி 70 நாளில் எடுத்தோம். முருங்கையும் நல்ல லாபம் தந்தது. இப்படி போன வருடம் மட்டும் 7 லட்சம் சம்பாதித்தோம்.
கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இப்ப ஆச்சரியப்பட்டு நிக்கறாங்க. தற்போது மலைவேம்பு நடவு செய்து வருகிறோம். அது மிகுந்த லாபம் தரும். இப்போது நாங்கள் சந்திப்பவர்களிடம் “விவசாயத்தை கைவிடாதீர்கள், முறையாக செய்தால் அதைவிட லாபம் தரும் தொழில் ஏதும் இல்லை’ என்று சொல்லி பிரசாரம் செய்து வர்றோம்.
விளை நிலங்களெல்லாம் இப்போது வீட்டு மனைகளாக மாறி வருகிறது. பல விளை நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. இவையெல்லாம் மாறி விவசாயம் நாட்டில் செழித்தால்தான் நாடு முன்னேறும். “படித்தவர்கள் அதிகளவு விவசாயத்திற்கு வந்து அதிகளவு சம்பாதிப்பார்கள்’’ என்றார் நம்பிக்கையுடன்.
நம் எதிர்பார்ப்பும் இதுதான்.

– கரூர் அரவிந்த்

Leave a comment