கவலை கல்லு போல..பகவான் தெப்பம் மாதிரி…மகாபெரிவா சொன்னது !!!!

ஒரு முறை பெரிவாளிடம் ஒரு அம்மா சொன்னார். நான் நெறைய ஸ்ல ோகம் பாராயணம் பண்றேன்.மத்யானம் சாப்பிடவே ஒரு மணியாறது. ஆனா பிரச்சினைகள் தீரலே…பகவான் கண் பார்க்கலேன்னு வருத்தப்பட்டார்.

“ஸ்லோகம் சொல்றச்சே சுவாமி முன்னாடி உட்கார்ந்துண்டு, சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்”னு கேட்டேன்.

“அதெப்படி முடியும்? குளிச்சிண்டே,வேற வெலை பார்த்துண்டே தான் சொல்றேன்.எல்லாம் மனப்பாடம்.தப்பு வராது”ன்னா.

காய் நறுக்கணும்னா அரிவாள்மணை,கத்தியைக் கிட்டே வைச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும்.

குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது.

ஆனா ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமிகிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” தான் அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா
சொல்லுங்கோ… நிச்சயம் கேட்பான்.

வேறு வேலையில் கவனம் இல்லாமிலிருந்தால் விபத்து நடக்கும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம ஸ்லோக மந்திரத்தை முணு முணுத்தா போறும்னு நெனைக்கலாமா?

புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கிற சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும்.இந்தப் புடவையிலே அம்பாள் எப்படி
இருப்பாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலேகருணை செய்கிறவாளாச்சே!

கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே!

கவலைகள் கல்லு மாதிரி,பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம்.
அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்.

source::::input from one of my friends…
Natarajan

Leave a comment