கோயில் பிரசாதத்தை பெரியவாளுக்குக் கொடுத்தார், பங்காரு காமாட்சி ஸ்தானீகர். ஸ்ரீ வித்யா உபாசகர். இப்படிப்பட்டவருக்கு மரியாதை செய்ய பவுன் தரவிழைந்தார் பெரியவா. ஆனால் அவர் வந்த சமயத்தில் பெரியவாளிடம் பவுன் எதுவுமில்லை.
பெரியவா பழைய நினைவுக் காட்சிகளை அங்கிருந்தவர்களிடம் சொன்னார். “எனக்குப் பட்டத்துக்கு வந்ததும் முதலில் பரிவட்டம் கட்டினது தஞ்சாவூர் பங்காரு காமாட்சிதான். அவளுக்கு பூஜை பண்ணுபவருக்கு முக்கியமாக பவுன் ஒன்று தரணுமே!” என்று முடிப்பதற்குள் அங்கிருந்த பெண்மணிகள் தங்கள் நகைகளைக் கழற்ற ஆரம்பித்தனர். பெரியவாளோ, “எனக்கு நகை வேண்டாம்; ஒரு பவுன் நாணயம்தான் வேணும்!” என்று அவற்றை வாங்க மறுத்து விடுகிறார்.
நேரம் ஆக ஆக “உனக்கு ஒரு பவுன் கொடுக்க முடியாது போல இருக்கே..” என்று வருத்தப்பட ஆரம்பித்து விட்டார். வந்தவரோ, “எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் நினைப்பதே போதும். தங்கள் அனுக்கிரகம் மட்டும்தான் வேணும்” என்று சமாதானப்படுத்துகிறார். அவருக்கு உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். உத்தரவு கிடைக்கவில்லை. பவுன் கொடுக்காமல் அனுப்ப ஸ்வாமிகளுக்கு மனமில்லை.
பகல் கடந்த பின் திருச்சியிலிருந்து ஒரு தம்பதி வந்தனர். அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடக்கவிருக்கிறது. பெரியவா அனுக்கிரகத்துக்காக வந்தார்கள். பெரியவாளுக்கு முன்னால் ஒரு திருமாங்கல்யத்தையும் ஒரு பவுனையும் எடுத்து வைத்தார்கள்.
எங்களுக்கு ஒரு பிரச்னை, பெரியவா அதைத் தீர்க்கணும். தீர்க்க சுமங்கலியாக இருந்த என் அம்மாவுடையது இந்த மாங்கல்யம். சஷ்டியப்த பூர்த்தியில் இதைத்தான் என் மனைவிக்குக் கட்ட வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் சிலர் “அது தவறு. புதிதாகத்தான் செய்து போடவேண்டும்” என்கிறார்கள். அதனால் ஒரு பவுன் வாங்கினேன். பெரியவா எதைத் தொட்டு ஆசிர்வாதித்துக் கொடுக்கிறேளோ அதையே பயன்படுத்தப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார். பெரியவா, “உங்க அம்மா திருமாங்கல்யத்தையே கட்டிவிடு, க்ஷேமமாக இருப்பீர்கள்” என்று ஆசி கூறினார். இதையே எதிர்பார்த்தவருக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.
பிரசாதத்துடன் திருமாங்கல்யத்தைத் தம்பதியிடம் கொடுத்த பெரியவா, “இந்தப் பவுனை நான் வைத்துக்கொள்ளட்டுமா?” என்று கேட்டார். அதனைப் பெரிய பாக்கியமாகக் கருதி
ஆனந்தமாக அவர் காலடியில் அர்ப்பணித்து நின்றார்கள் திருச்சி தம்பதியினர். பெரியவாளும் அகமகிழ்ந்து அந்தப் பவுனைத் தர வேண்டியவருக்குக் கொடுத்துவிட்டு அவரையும் வந்தவர்கள் காரிலேயே அனுப்பி வைத்தார்.
அவர் மனம் வைத்துவிட்டால் அந்தக் காரியம் நிறைவேறாமல் விடமாட்டார். சந்தர்ப்பங்கள் தானாகவே வந்து சேரும்.
இப்படி அனுக்கிரகம் பண்ணுவதற்கு வந்தவர், வராதவர்; தெரிந்தவர், தெரியாதவர், வைதவர், வாழ்த்தினவர், கேட்டவர், கேட்காதவர், ஏழை-பணக்காரர் என்று எந்தப் பாகுபாட்டையும் அவரிடம் காண முடியாது. அருளையோ, பொருளையோ அள்ளி அளிப்பது ஒன்றுதான் அவருடைய கோட்பாடு.
“சதாசிவ அனுக்கிரஹதா..” என்று வருணிக்கப்படும் அம்பாள் ஸ்வரூபமே அவரல்லாவா?
– எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து….
Read more: http://periva.proboards.com/thread/630/gold-coin#ixzz2Tcd1Jbzn
source::::periva.proboards.com
Natarajan