1968-ஆம் ஆண்டு. முதலமைச்சராக அவையில் வீற்றிருக்கிறார் அறிஞர் அண்ணா. அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சர். மொழிப் பிரச்னை பற்றி வாக்குவாதம் நடக்கிறது. அவை உறுப்பினர் ம.பொ.சி. மீது எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் ஒரு குற்றச்சாட்டு கூறினார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தையும் அதை அண்ணா எவ்வாறு முடித்து வைத்தார்
என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
கருத்திருமன்: “”தமிழ்தான் என் உயிர். தமிழை ஆட்சி மொழி ஆக்கியதற்காக இந்த ஆட்சியைப் பாராட்டுகிறேன்” என்று ம.பொ.சி. சொன்னார். ஆனால் விவேகானந்தா கல்லூரியில் தன் மகனுக்கு ஆங்கிலப் படிப்பு வேண்டும் என்று கேட்டவர் அவர்.
ம.பொ.சி: எதிர்க்கட்சித் தலைவர், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். என் பிள்ளை, உயர்நிலைப் பள்ளிப் படிப்புகூட முடித்ததில்லை. குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும்.
கருத்திருமன்: எனக்கு வந்த தகவலைத்தான் சொன்னேன்.
அண்ணாதுரை: யார் மகனைப் பற்றி குறிப்பிடுகிறீர்களோ, அந்த தந்தையே தகவல் தவறு என்று கூறிவிட்ட பிறகு, தாங்கள் ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
கருத்திருமன்: அவர் சிபாரிசு செய்த பிள்ளை என்றுதான் சொல்கிறேன். சொன்னது தவறென்றால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுப்பணித்துறை அமைச்சர் (நான்): எதிர்க்கட்சித் தலைவர் முதலில் ம.பொ.சி.யின் மகன் என்று குறிப்பிட்டார். இப்போது மகனில்லை; அவர் சிபாரிசு செய்த பிள்ளை என்கிறார்.
அண்ணாதுரை: தவறான தகவலை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். என் மகன் பெயர் பரிமளம். நமது நண்பர் விநாயகம் ஒரு கூட்டத்தில் பேசும்போது, “அண்ணாதுரைக்கு பரிமளம் என்று ஒரு பெண் இருக்கிறாள்’ என்று குறிப்பிட்டு, அது பத்திரிகையிலும் வந்துவிட்டது. பிறகு ஒருநாள், விநாயகம் என் வீட்டுக்கு போன் செய்த போது, பரிமளம் பேசினான். “நீ யார்?’ என்று விநாயகம் கேட்க, “அண்ணாவின் மகன்’ என்று அவன் கூறினான். “அடடே! நீ ஆண் பிள்ளையா? பரிமளம் என்ற பெயரைப் பார்த்து பெண் என்று நினைத்துவிட்டேன்’ என்றார்.
முதலமைச்சர் அண்ணா இந்த நிகழ்ச்சியை விவரித்ததும் கருத்திருமன் எழுந்திருந்து, ம.பொ.சி. பற்றி தவறான தகவல் சொன்னதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அண்ணா எடுத்துரைத்த சம்பவம், அவையை சிரிப்பில் ஆழ்த்தியதுடன் சூடாகத் தொடங்கிய வாக்கு வாதத்தை சுவையாகவும் மாற்றியது.
– “மலரும் நினைவுகள்’ புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி .
source:::: Dinamani .Tamil Daily
natarajan