படித்து ரசித்தது … அப்புசாமி …சீதாப் பாட்டி !!!

அப்புசாமி மட்டும் தீவிர கட்சி தொண்டனாக இருந்திருந்தால், நிச்சயமாக மனைவி சீதாவின் புகைப்படத்தை எல்லா செய்தித்தாள்களிலும் குறைந்தபட்சம் அரை பக்கத்துக்காவது போட்டு, ‘ஒலி கொடுத்த தெய்வமே… ஒப்பில்லா மணியே… மொபைல் கொடுத்த ஜெகதீஸ்வரியே… நீயே என் இல்லத்தரசி; நீயே என் மொபைலரசி…’என்று வாழ்த்துப்பா பாடி, இவண், உன் ஊழியனும், கணவனுமான மொபைல்சாமி என்று புகழ்மாலை சூட்டியிருப்பார்.
பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு அவருக்கு வசதி இல்லாததால், பூசலார் நாயனார் மனசுக்குள்ளேயே இறைவனுக்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்தது மாதிரி, மனைவியை பலவாறு தோத்திரம் செய்து, அனைத்து பத்திரிகைகளிலும் மானசீகமாக போட்டோவை வெளியிட்டு, ‘மொபைல் வழங்கிய செல்லம்மா        என் சீதை! வெந்த உள்ளத்தை சொந்த செல்லு கொடுத்து, ரணம் ஆற்றிய குணமே! உன் கருணையே மறவேன் தாயே…’ என்று தன் மனசுக்கு தோன்றிய வசனத்தையெல்லாம், மனைவி மீது மானசீக மாக கொட்டி மகிழ்ந்தார்.
ஒரு சாண் வயிறு வளர்க்க, பல சாண் நீளத்துக்கு புகழ்வது தான் மரபாகி விட்டது. ஓர் ஆறங்குல நீள மொபைல் போன் வாங்கி கொடுத்ததற்குத்தான் மனைவியை புகழ்ந்து கொண்டாடுகிறார் அப்புசாமி.
‘உங்க பிறந்த நாள் பிரெசன்ட்டாக என்ன வேண்டும்; உங்கள் சாய்ஸ்…’ என்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, சீதா பாட்டி மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்டதும், ‘டகா’லென்று பிடித்துக் கொண்டார்.
‘சீதே… நீ போற வர்ற இடத்திலெல்லாம் கையில வெச்சிக்கிட்டே பேசறீயே… அது மாதிரி எனக்கும் ஒரு மொபைல்போனு வாங்கி குடு; என் ஆயுசுக்கும், ஏன் அவசியமானா ஆயுசு முடிஞ்சுட்டாக் கூட ஆவியா இருந்து உன்னை வாழ்த்திக்கிட்டிருப்பேன். இதுதான் என்னோட இறுதி ஆசை…’ என்று அவர் சொன்னது சீதாப்பாட்டியின் மனசை, ‘டச்’ செய்து விட்டது.
‘ஒய் டு யு டாக் ரப்பிஷ்; வாயை போய் வாஷ் செய்யுங்க…’ என்று செல்லமாக கடிந்து, பிறந்த நாளன்று அவருக்கு ஒரு மொபைல் போன் வாங்கித் தந்தாள்.
அது வந்ததிலிருந்து அப்புசாமி, ‘சொல்லின் செல்வர்’ மாதிரி, ‘மொபைலின் செல்வர்’ ஆகி விட்டார்.
பாட்டி காரில் போய்க் கொண்டிருக்கும் போது, வீட்டிலிருந்து அப்புசாமி கூப்பிட்டு நலம் விசாரிப்பார்.
கழகக் குரலாக இருக்கும் என்று பாட்டி அவசரமாக எடுத்து காதில் வைத்தால், அரை நிமிஷத்துக்கு முன் பேசிய கணவர் அப்புசாமி, ‘ஹி ஹி… சீதே… எப்படி இருக்கே… கார் ஓட்டிகிட்டுயிருக்கியாக்கும்; இப்போ எந்த இடத்திலே இருக்கே…’ என்று நிமிடத்துக்கு நிமிடம், அவள் இருக்குமிடத்தை விசாரிப்பார்.
‘பனகல் பார்க் பக்கமா… ‘பசுபசு’ன்னு கொத்தமல்லி இருக்கும்; ஒரு கட்டு வாங்கி போட்டுண்டு வா…’ என்று உத்தரவிடுவார்.
‘இங்கே மழை தூறுது, துணியெல்லாம் எடுத்து மடிச்சு வெச்சுட்டேன்; ஆமாம்… பட்டுப்புடவய இன்னிக்கே அயர்ன் செய்ய கொடுத்துடட்டுமா… மணி, ௩:௦௦ ஆகுது… அவன் பாட்டுக்கு வண்டிய தள்ளிகின்னு போயிட்டான்னா…ஹிஹிஹி… எதுக்கு கேட்கிறேன்னா…’
‘ப்ளீஸ்…’ என்று அலறும் சீதாபாட்டி, ‘முதல்ல போனை, ‘கட்’ செய்யுங்க; மொபைலில் பேசறீங்க ஜாக்கிரதை; உங்க இடியாடிக் அரட்டைக்கெல்லாம் நான் தான் பில் கட்டணும்…’ என்பாள்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு காரியம் நடந்து விட்டது. டிரைவ் செய்து கொண்டே மொபைலில் பேசியதற்காக சீதாப்பாட்டியை, ஒரு சார்ஜண்ட் மடக்கிவிட்டான். ஆன் த ஸ்பாட் ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டே தீருவேன் என்று சார்ஜ்ஷீட்டை கூட எடுத்து விட்டான்.
சீதாப்பாட்டி தான் ஒரு ஆனரரி மாஜிஸ்திரேட்டாக இருந்ததை, விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டி கூறியதால், ஒரு சலாமடித்து அபராதம் விதிக்காமல் விட்டு விட்டான் சார்ஜண்ட்.
‘இனிமேல் நெவர் யூஸ் யுவர் மொபைல்; ஐ ஸே…’ என்று கடுமையாக எச்சரித்து வைத்தாள் பாட்டி. ஆனால் அவள் ஆணை, அப்புசாமியின் ஆவலுக்கு அணையிட முடியவில்லை.
பாத்ரூமில் இருந்து, நண்பர் ரசகுண்டு வேலை செய்யும் ஓட்டலுக்கு போனைப் போட்டு, ‘சப்ளையர் ரசகுண்டு இருக்காரா?’ என்று கேட்பார். ‘அவரு டூட்டியிலே இருக்கார்…’ என்று முதலாளி கடுகடுத்தால், ‘அர்ஜெண்டா கூப்பிடுங்க சார்; அவுங்க அம்மாவ ஜெனரல் மருத்துவமனையிலே சேத்திருக்கு…’ என்பார்.
ரசகுண்டு லைனில் வருவதற்கு ஐந்து நிமிடமாவது ஆகும்.
‘என்னடா ரசம்… ரொம்ப வேலையா? உங்க முதலாளி என்ன ரொம்பதான் அலட்டிக்கிறான்… இன்னிக்கு பீச்சுக்கு வர்றியா? பீமனையும் தள்ளிகிட்டு வா; முடிஞ்சா எதுனா மிக்ஸர், பக்கோடா அமுக்கிக்கின்னு வா… ஏண்டா துடிக்கிறே? உங்க முதலாளி என்ன தலைய வாங்கிடுவானா…’ இந்தத் தினுசில் சாவகாசமாகப் பேசுவார்.
மாதத்துக்கு அறுநூறு ரூபாய் கட்டியது போக, சீதாப்பாட்டி இப்போது அப்புசாமி வீணாகக் கூப்பிடும் கால்களுக்கும் சேர்த்து, ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்ட வேண்டியிருந்தது.
மொபைலை ஒரு வினாடியும் பிரியாது, செல்லுகிற இடமெல்லாம் எடுத்துக் கொண்டே போவார் அப்புசாமி. நடந்து கொண்டே பேசுவார்; குளித்துக் கொண்டே, ஏன் தூங்கிக் கொண்டே கூடப் பேசுவார். ‘என் குறட்ட சத்தம் கேட்டியா… ஹஹஹ! சிம்ம கர்ஜனை மாதிரி இல்லே? சீதாக் கிழவி இது ஒண்ணுத்துக்கு தான் என்கிட்ட பயப்படறா…’ என்று ரசகுண்டிடம் பேசி பெருமைபடுவார்.
குரங்குகிட்ட கொடுத்த வாழைப்பழத்தைப் பிடுங்குவதை விட, அப்புசாமியிடம் தந்த மொபைலைப் பறிப்பது படு கடினமான வேலை என்பதை உணர்ந்தாள் சீதாப்பாட்டி.
நைசாக அவரிடமிருந்து மொபைலை வாங்கி, உள்ளே யிருக்கிற சிம் கார்டை கழற்றிக் செயலிழக்கச் செய்து விடலாமென்று பார்த்தாள். ஆனால், மொபைலை இரவும், பகலும் இருபத்து நாலு மணி நேரமும், நல்ல பாம்பு மாணிக்கத்தைப் பாதுகாக்கிற கதையாக, ஆட்டோ பயணி மீட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போல மொபைல் போன் நினைவாகவே இருந்தார்.
”பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பொன்மொழி உண்டு; அது சரியாகியிருக்கு,” என்றாள் சீதாப்பாட்டி.
”என்னை பிச்சைக்கார நாயி என்கிறே… அப்படித்தானே?” என்று சீறினார் அப்புச்சாமி.
”ஏறக்குறைய,” என்றாள் சீதாப்பாட்டி.
அந்த வார்த்தை, அப்புசாமியின் ரோஷப் பகுதிகளில், ஏவுகணையாக பாய்ந்தது.
”இனிமேல் என் மொபைலுக்காக நீ, ஒரு பைசா கூட தரத் தேவையில்லடி; மொபைலுக்காக நான் வண்டி இழுத்தோ, சென்ட்ரல் ஸ்டேஷனிலே போய் லைசன்ஸ் இல்லாத போர்ட்டராக உழைத்தோ, கட்சி ஊர்வலங்களிலே கலவரத் தொண்டனாகக் கலந்து கொண்டோ சம்பாதிக்கிறேண்டி,” என்றார்.
”வெல்கம்; ஆம்பிளையா இருந்தா முதல்ல அதைச் செய்யுங்க.”
அப்புசாமியிடம் ரோஷத் தீயை மூட்டிவிட்டு, ஷாப்பிங்குக்குப் புறப்பட்டு விட்டாள் சீதாபாட்டி.
சென்ட்ரல் ஸ்டேஷன்; சதாப்தி ரயிலை பிடிக்க போகும் பெங்களூரு கும்பல் விடியற்காலையில் விரைந்து கொண்டிருந்தது.
வித்தவுட் யூனிபார்மில் இருந்த அப்புசாமி, ”சார் சார்… லக்கேஜு சார்… மூட்டை முடிச்சு அம்மணி, குடுக்கறதக் கொடுங்க; போணி பண்ணுங்க தாயி,” என்று பயணிகளிடமும் ஓடி ஓடி, வேட்பாளர் ஓட்டுக்குக் கெஞ்சுவது போல் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
”யோவ் பெரீயவரே…” என்று, இரும்புக்கரம் ஒன்று அப்புசாமியின் தோளைப் கப்பென்று பற்றியது. சிவப்பு உடையும், லைசன்ஸ் பட்டையும் அணிந்த அதிகார பூர்வமான கொழுத்த போர்ட்டர்!
”எடுமே கையை.”
”ஏய்யா பெரிசு… நாங்க இங்கே உட்காந்திருக்கிறவங்க ௌல்லாம் புய்யனுங் களா… மரியாதியா ஏரியாவக் காலி செய்துட்டு ஓடிரு.”
”ஓடாட்டி…”
”மவனே… கிராஸ் செய்யாதே, கிழிஞ்சு பூடுவே! ஒரு எலும்பு கூட வேலைக்கு ஒதவாது.”
”மேலே கைய வெச்சிப்பாரு.”
”போடாங்க சொன்ட்டி! கையை வைக்கற தென்ன… தூக்கி தண்டவாளத்திலேயே கடாசிடுவோம்.”
”தைரியமிருந்தா செய்யி! முதல் அடி என்னுதா இருக்கட்டும்,” என்று கூறிய அப்புசாமி, போர்ட்டரை ஓங்கி ஒரு குத்து விட்டார்.
தன் பலத்தையும், சட்ட மீறுதலையும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல், உரிமம் பெற்ற போர்ட்டரிடம் அவர் காட்டிய வீரம், சில நிமிட நேரமே நீடித்தது.
போர்ட்டர் ஒரு, ‘ப்ரீ கிக்’கொடுத்தான் அப்புசாமிக்கு.
இலவச இணைப்பாக மூக்கில் ஒரு குத்து; ‘ஹா’வென்று மல்லாந்தார் அப்புசாமி. சக போர்ட்டர்களும் அப்புசாமிக்கு தங்களாலான உதைகளைத் தந்தனர்.
கும்பல் கூடிவிட்டது; அப்புசாமி நினைவு இழக்கும் முன் மொபைலில் வீட்டு எண்ணை அழுத்தி, ”சீ… சீ… சீதே… இங்கே சென்ட்ரல் ஸ்டேஷன், சதாப்தி நான் நான்… சமாதி…போர்ட்டர் அடிச்சி… ரத்தம் வெள்ளம்… நீ வா…”எனத் தட்டுத்
தடுமாறி சொல்லி    முடித்தார்.
அப்புசாமியின் மூக்கு மேல், பெரிய பிளாஸ்திரி போட்டிருந்தது; டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.
தனியார் நர்சிங் ஹோமில் சவுகரியமான படுக்கையில், இதமான ஏர்கண்டிஷனுடன் படுத்திருப்பதை உணர்ந்தார் அப்புசாமி. அருகே, ஆவி பறக்கும் சூப்புடன் காத்திருந்தாள் சீதாப்பாட்டி. அந்த ஆவி தன்னுடையதா, சூப்புடையதா என்று சந்தேகமாகப் பார்த்து, மூக்கைத் தடவிக் கொண்டார் அப்புசாமி. மூக்கு இருந்த இடத்தில் ஒரு ஸ்பீடு பிரேக்கர்!
” சீதே… சீதே… என் மூக்கு…” அலறினார்.
”ஒய் த ஹெல்… நீங்க ஸ்டேஷனுக்கெல்லாம் போயி…” என்று அனுதாபப்பட்டாள் சீதாபாட்டி.
”சீதே… ரோஷமில்லாமல் நூறாண்டு வாழறதவிட, ரோஷத்தோடு சில மணி நேரம் வாழ்ந்தாலும் போதும்ன்னு தோணினது. ஆண்டவன் கொடுத்த கை, கால் உழைக்கறதுக்கு இருக்கு; அதான், மூட்டை தூக்கத் துணிஞ்சிட்டேன்!
”மூக்கு தேவலையானதும் லைசன்ஸ் பட்டை வாங்கிட்டு முழு நேரப் போர்ட்டராக வேலை செய்யப் போறேன். என்னுடைய மொபைலுக்காக நான் உழைக்கத் தீர்மானிச்சுட்டேன்; நீ என் கண்ணைத் திறந்துட்டே. அந்த பாவி போர்ட்டர் மூக்கை உடைச்சுட்டான். ஆனால், நான் என் மொபைலுக்காக உழைக்கப் போறத எந்த மக்கள் சக்தி வந்தாலும் சரி, மகேசன் சக்தி வந்தாலும் சரி இனி தடுக்க முடியாது; என் உயிரைக் கொடுத்தாவது மொபைலைக் காப்பேன்,”என்று சூளுரைத்தார்.
”உங்க மொபைல் பக்தியைப் பாராட்டறேன்; ஆனா, உங்க மொபைல்…” என்று திணறினாள் சீதாப்பாட்டி.
”ஐயோ சீதே… என் மொபைல் எங்கே?” என்று கேட்டவர், அவசரமாகத் தன் இடுப்பின் பக்கவாட்டுப் பகுதி, சுற்றுப்பகுதி என எல்லா இடங்களையும் சோதித்தார்.
வேறு ஏதேதோ தட்டுப்பட்டது; மொபைல் மட்டும் கிடைக்கவில்லை. ”என் மொபைல்… என் மொபைல்…” என்று பதட்டமானார் அப்புசாமி.
”பதட்டப்படாதீங்க டியர்; மனசைத் திடப்படுத்திக்கங்க. உங்க மொபைல்…”
”சீதே… என்னாச்சி என் மொபைலுக்கு… எங்கே என் மொபைல்?”
”எனக்கு மொபைல விட நீங்கதான் முக்கியம்,” கைக்குட்டையை உதடுகளில் ஒத்தி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினாள் சீதாப்பாட்டி.
”சீதே… இன்னாடி இழவு சொல்றே?”
”உங்க மொபைலக் கொடுத்துத்தான் உங்கள மீட்டு வந்தேன். நீங்க மோதினது சாதாரண ஆள் கிடையாது; போர்ட்டர்ஸ் யூனியன் தலைவரோட! பெரிய இடத்துலே மோதிட்டீங்க, விவகாரம் போலீஸ் வரைக்கும் போயிடும் போலிருந்தது. அதுதான், அவன் இத பெரிசுபடுத்தாம இருக்க என்ன செய்றதுன்னு பாத்தேன்… நூறு இருநூறுக்கு காம்ப்ரமைஸ் ஆகிறவனா தெரியல; மொபைல் உங்க ஜிப்பா பையிலே இருந்துச்சா… சட்டுன்னு ஒரு ஐடியா பிளாஷ் ஆச்சு… ‘இந்தாப்பா போர்ட்டர்… இதப் பெரிசு படுத்தாதே… சாரோட மொபைல வெச்சுக்கோ’ன்னு சொல்லி குடுத்துட்டேன். உங்கள அவங்க கிட்டயிருந்து மீட்டு வர எனக்கு வேற வழி தெரியல; சென்ட்ரல் ஸ்டேஷன் பூராவும், ‘ஜே ஜே’ன்னு போர்ட்டர் கும்பல்… உங்களை அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன்னு… நீங்க மயக்கம் போட்டு விழுந்திருந்ததால், யு ஆர் நாட் அவேர் அப் த சீன்!”
”சீதே… மொபைலை அவனுக்குத் தாரை வாத்துட்டேயேடி… இது அக்கிரமம்டி,” என்று அலறினார் அப்புசாமி.
”சாரி மை டியர்; யூ ஆர் மோர் ப்ரிஷியஸ் தென் யுவர் மொபைல்,” என்றாள் சீதாபாட்டி அமைதியாக.
அப்புசாமி உடம்பு குணமாகி வீடு வந்து சேர்ந்து சில நாட்களாயிற்று.
”ஹூம்… நடுவிலே வந்தது நடுவிலே போய்ட்டது. வரும்போது என்ன கொண்டு வந்தோம்… போகும்போது என்ன கொண்டு போகப் போகிறோம்; இது என்னதுதான்னு உலகத்திலே எதையும் எண்ண முடியாது. நேத்தைக்கு வேறொருத்தனது; இன்னிக்கு இன்னொருத்தனது; நாளைக்கு அது வேறொருத்தனது ஆகும்.”
துக்கம் கேட்க வந்த நண்பன் ரசகுண்டுவிடம், வேதாந்தியாகி, அங்கலாய்த் தார் அப்புசாமி.
ரசகுண்டு சொன்னான்… ”தாத்தா… நேத்துகூட உங்க மொபைலுக்கு போன் செய்தேன்; அது எங்கியோ இருக்கு. ஆனால், ரீச்சபிள் இல்லன்னு பதில் வர்றது. அணைச்சு வெச்சிருக்காங்களோ என்னவோ,” என்றவன், ”இப்ப போன் செய்றேன் பாருங்க,” என்று லேண்ட – லைன் தொலைபேசி பட்டனை தட்டினான்.
‘கிணு கிணுங்… கிணு கிணுங்!’ என்ற சன்னமான ஓசை, சீதாபாட்டியின் காட்ரெஜ் பீரோவுக்குள்ளிருந்து கேட்டது.
”அடியே கிழவி, போர்ட்டர்கிட்டே என் மொபைலை கொடுத்துட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்யா… பாவி… பாவி,”என்றார்.
சீதாபாட்டி சிரித்துக் கொண்டே, ”உங்க மொபைலை நீங்க எனக்கு பிௌட்ஜ் செய்திருக்கிறதா நினைச்சுக்குங்க. உங்க மூக்கு வைத்தியத்துக்கு செலவான மூவாயிரம் ரூபாய, மாசம் டென் ருபீசோ, ட்வென்ட்டி ருபீசோ உங்க மன்த்லி பேட்டாவிலிருந்து கொடுத்துக் கழிச்சி முடிச்சதும், உங்க மொபைல உங்களுக்கு தந்துடறேன்,” என்று சொல்லி, அவர் பதிலைத் தெரிந்து கொள்ள விரும்பாமல், கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டாள்.

Source:::::பாக்கியம் ராமசாமி  in Dinamalar.com 

Natarajan

Leave a comment