‘சுவையான குட்டிக்கதைகள்’ நூலிலிருந்து:
சீனாவில் ஒரு மன்னன், கேளிக்கைப் பிரியன்; புதுப்புது பொழுதுபோக்குகளை கண்டுபிடிப்பான். ஒருநாள், ‘என் ராஜ்ஜியத்தில் யார் பெரிய பொய் சொல்கிறாரோ, அவருக்கு தங்க ஆப்பிள் பரிசு கொடுப்பேன்…’ என்று அறிவித்தான்.
அதைக்கேட்டு, நாடெங்கிலுமிருந்து நூற்றுக் கணக்கான பேர், அவனிடம் வந்து பொய் கூறினர். ‘இது ஒன்றும் பெரிய பொய் அல்ல…’ என்று அவர்களை ஒதுக்கினான் மன்னன்.
ஒருநாள், அவனிடம் ஒருவன் வந்து, ‘போன ஆண்டு, என்னிடம், ஒரு பானை தங்கம் கடன் வாங்கிப் போனீர்களே… அதை இன்னும் நீங்கள் திருப்பித் தரவில்லை. அதை வாங்கிப் போகவே வந்திருக்கிறேன்…’ என்றான்.
மன்னன் திடுக்கிட்டு, ‘என்னது… உன்னிடம் ஒரு பானை தங்கம் வாங்கினேனா… கிடையாது. இது, முழு பொய்…’ என்றார்.
‘ஆ… முழு பொய் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்; தங்க ஆப்பிளைக் கொடுங்கள்…’ என்றான் வந்தவன். அவன், தன்னை மடக்குகிறான் என்பதைக் கண்டு கொண்ட மன்னன், ‘இல்லை… நீ பொய் சொல்லவில்லை; நீ சொல்வது நிஜம் தான்…’ என்றான்.
‘அப்படியானால், என்னிடம் வாங்கிய ஒரு பானை தங்கத்தை திருப்பிக் கொடுங்கள்…’ என்றான் வந்தவன்!
……………………
தொலைநோக்கி என கூறப்படும், ‘டெலஸ்கோப்’பை கண்டுபிடித்த கலிலியோ, அதன்மூலம் வான் வெளியை ஆராய்ந்து, பூமிக்கு, ஒரு சந்திரன் இருப்பது போல, வியாழனுக்கு, ஏழு சந்திரன்கள் இருப்பதைக் கண்டார். அதை உலகிற்கு எடுத்துக் கூறிய போது, அதை யாரும் நம்பவில்லை. அத்துடன், தொலைநோக்கி வழியாக கண்ட பின்னரும் கூட, ‘தொலைநோக்கி பூமியில் உள்ள பொருட்களை காட்டுமேயன்றி, பூமிக்கு வெளியே உள்ள பொருட்களை காட்டாது…’ என்றனர்.
அப்படி மறுத்தவர்களில் ஒருவர், அடுத்த சில நாட்களில் இறந்து விட்டார். அப்போது கலிலியோ, ‘அவர் தேவலோகம் போகும் வழியிலாவது, நான் கூறியது உண்மை என்று, நேரில் பார்த்து உணர்ந்திருப்பார்…’ என்றார்.
…………………
Source…..www.dinamalar.com
natarajan