” நீ கலியுக நந்தி ” !!!….சொன்னது மஹாபெரியவர் !!!!

பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் நடந்த சம்பவம்

கர்நாடக இசை மேதை பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது.

பாலக்காட்டில் தனது வீட்டில் அமர்ந்து மிருதங்கங்களை வாசித்துப் பார்த்தார் மணி ஐயர். அவற்றில் சிலவற்றுக்குத் தோல் மாற்ற வேண்டியிருந்தது. எனவே கடைவீதிக்குச் சென்றார்.
கடைக்காரர் அவரிடம் “தற்சமயம் தோல் ஸ்டாக்கில் இல்லை. அடிமாடுகள் வந்துள்ளன. தோலை உரித்துப் பதப்படுத்தி ஒரு வாரத்தில் தருகிறேன்” என்றார்.

மிருதங்க இசைக்குத் தோல் தேவைதான். இருந்தாலும் இந்த முறை மணி ஐயரின் மனம் ஏனோ வேதனைப்பட்டது. ”ஒரு ஜீவனை ஹிம்சைப் படுத்தி இந்தத் தொழிலைத் தொடரத்தான் வேண்டுமா?” என்கிற சஞ்சலமான மனதுடன் வீடு திரும்பினார்.

அன்று இரவு அவருக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. உண்ணாமலே படுத்து விட்டார். மூன்று மாத காலத்திற்கு கச்சேரிகளை அவர் ஒப்புக் கொண்டிருந்தார். எனவே அவற்றை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு மேற்கொண்டு புதுக் கச்சேரிகளை ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பது என்று தீர்மானித்தார்.

ஓரிரு நாட்களுக்குப் பின் கச்சேரி ஒன்றுக்காக சென்னை வந்த மணி ஐயர் மஹாபெரியவரைத் தரிசிக்கக் காஞ்சி ஸ்ரீமடத்திற்குச் சென்றார். அப்போது மஹாபெரியவர் அங்கு இல்லை. காஞ்சியில் இருந்து 50 கி.மீ.தொலைவில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருப்பதா& #2965; சொன்னார்கள். ”மஹா பெரியவாளை எப்படியும் பார்த்து விடுவது” என்று தீர்மானித்த மணி ஐயர், அந்தக் கிராமத்தை அடைந்த போது மாலை மணி ஐந்து.

சந்திப்பும் நிகழ்ந்தது.

மஹா பெரியவர், “மணி, நீ இன்று இரவு தங்கு…. நாளை காலை போகலாம். உன் தனி ஆவர்த்தனம் கேட்டு ரொம்ப நாளாச்சு!” என்று கூறிப் பூஜைக்குச் சென்றார்.

பூஜை முடிந்து எல்லோருக்கும் ப்ரசாதம் வழங்கினார்கள். இரவு எட்டு மணிக்கு மடத்து சிஷ்யர் ஒருவர் மணி ஐயரிடம் வந்து, “ பெரியவா வந்து பார்க்கச் சொன்னார்!” என்றார்.

மணி ஐயர் மஹா பெரியவருடைய குடிசைக்குச் சென்றார். ஒரு ஹரிக்கேன் விளக்கு மட்டும் இருந்தது. சிஷ்யர் அதைத் தூண்டி விட்டார். மஹா பெரியவா, ”என்ன மணி, உடம்பு அசௌகரியமோ? ஏன் வாட்டமா இருக்கே? கவலையா?” என்று அன்புடன் வினவினார்.

மணி ஐயர் கண்கள் கலங்க தன் வேதனையை விவரித்தார். அந்தப் பேச்சின் முடிவாக, ”இதுவரை நடந்தது போதும் பெரியவா. இனி ஜீவஹிம்சை செய்து அதன் மூலம் கச்சேரி செய்யப் போவதில்லை. அதனால் வரும் வருமானம் ஒரு சல்லிக்காசு கூட எனக்கு வேண்டாம்” என்றார் குரலில் உறுதியாக.

மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந& #3021;த மஹா பெரியவா, ”மணி, நீ சிவன் கோவில்ல நந்திகேஸ்வரரை தரிசனம் செஞ்சிருக்கியோ?” என்று கேட்டார்.

மணி ஐயர் “ஆமாம்” என்று தலையசைத்தார்.

”அவரது வேலை மத்தளம் (மிருதங்கம்) வாசிப்பது. நீயோ கலியுக நந்தி. இனிமேல் நீ மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான் மகா பாவம். உனக்கு ஒரு பாவமும் வராது. மனசைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே. போய் வேலையைப் பார். இன்னிக்கு ரொம்ப நாழி ஆயிடுத்து. படுத்துத் தூங்கு. நாளைக்குப் பிரசாதம் வாங்கிண்டு கிளம்பு. உன்னுடைய தனி ஆவர்த்தனத்தைக் கேக்கணும்னு ஆசையா இருக்கு. நாளைக்கு ஒரு அரை மணி நேரம் வாசிச்சுட்டுக் கிளம்பலாம்!” என்று கூறி அனுப்பினார்.

மறு நாள் பூஜைக்குப் பிறகு கச்சேரி செய்து விட்டு மஹா பெரியவரிடம் பிரசாதமும் பெற்றுக் கொண்டு மனநிறைவுடன் வீடு திரும்பினார் மணி ஐயர்.

இந்த அரிய தகவலைக் கூறியவர் மணி ஐயரின் மருமகன் பதஞ்சலி!

source::::www.periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3773#ixzz2MXMhByFx

Leave a comment