திரையிசையில் இலக்கியமணம் தந்த கண்ணதாசன்
தாடகை வதத்தில் இராமன் தடக்கையின் உரங்கண்டு மேடைக் கல் மாதவளாய் மாறியதில் அவன் காலின் திறங்கண்டு; விசுவாமித்திரன் பாடுகின்றான் வியப்பின் எல்லையில் நின்று
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலே
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் என்று!இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன் பாடல் ஒன்றில் முழுக்க முழுக்க வண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார் .. பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப் பறந்த பாடல் அது.
படம் : பாசம். இதோ, கவியரசரின் கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூவண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ? இல்லை, இல்லை கவிதை வண்ணம்? !!!!!!!!!!
இதைப் போல, வேறு வண்ணங்களிலும் பாடல்கள் அமைத்துள்ளார் கவிஞர். ஆனால் அவை கம்பன் அடியொற்றிப் பிறந்தவை அல்ல. அதனால் அவை இங்கே இடம் பெறவில்லை. இனி, கவிஞர் எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்! வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.
‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா…’
என்ற பாடல்தான் அது. அதில் இடம் பெறும்
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது! !!!! எங்கே? எந்த இடத்தில்? …. யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?…
சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்
எனப் பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் ஈறாகத்
தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படித்திருக்கவேண்டும்.
எனவே, திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே. எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது! அதிலும் கம்பன் மேல் தனிக்காதல் கண்ணதாசனுக்கு உண்டு.
கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு இல்லை அவர். கம்பனில் கருத்தூன்றிப் படித்திருக்கவேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில் படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா? பார்த்து ரசித்திருப்பாரா? இல்லை அதனைத் தன் பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான் செய்திருப்பாரா? அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன் வரிகளை வைக்கிறேன்
உங்கள் பார்வைக்கு :
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.கம்பனின் காவிய வரிகள் இதோ :
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!
சூர்ப்பணகை – மூக்கறுபட்டவள் ஆர்ப்பரித்து அழுத வண்ணம் அண்ணன் இராவணனிடம் ஓடோடி வருகிறாள். தன் அவல நிலைக்குக் காரணத்தைத் தருகிறாள். அதே சமயம், சீதையின் அழகை எல்லாம் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள் அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள். அப்போதே அவன் சீதையை அடைந்துவிட்டதாகக் கற்பனை ஊட்டுகிறாள். அவரவரை அவரவர் இடத்தில் வைக்க வேண்டும் என்றொரு சொலவடை தமிழில் உண்டு. அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான்.
‘பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான். தாமரை மலரில் இருந்த திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன். தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன் தன் நாவிலேயே வைத்திருக்கிறான். மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள். மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க் கீர்த்தி பெற்ற அண்ணனே மின்னலை விட நுண்ணிய இடை கொண்ட செம்பொன் சிலையாம் சீதையை அடையும் போது அவளை எங்கே வைத்து வாழ்வாய் நீ!’ எனச் சூர்ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.
ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்பெறுகிறது. கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு ‘எங்ஙனம் வைத்து வாழ்தி!’ என்ற வரியில் கீழறைப்பொருளை (உட்பொருள்) வைக்கிறான் : மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம் உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் ! இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்? வாழமாட்டான்! இறுதியில் வீழ்வான் என்ற பொருள் இவ்வரியில் பொதிந்துள்ளது. கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள் கண்களில் மட்டுமல்ல கம்பனில் ஆய்ந்து தோய்ந்தவர்கள் பார்வையிலும் படாத பாடல் இது!
எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ! எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ! அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார் கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக் காட்சிக்கு ஏற்பச் சொற்களை அமைத்து ராஜா பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான். என்று முத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!
source::::: input from a friend of mine ..
Natarajan