ஜூன் மாதம். மதியம்.

பிரதமர் தனது அலுவலகத்தில் உள்ள ஓர் அறைக்குள் நுழைகிறார். வெளியே வரும்போது அவர் உடை மாறியிருக்கிறது. ஒரு டாக்ஸி டிரைவரைப் போல உடை. கண்களில் சன் கிளாஸ். தலையில் தொப்பி.
கறுப்பு நிற மெர்சிடெஸ் டாக்ஸியில் டிரைவர் சீட்டில் ஏறி அமர்கிறார் பிரதமர். தலைநகரின் மையப் பகுதிக்குக் கார் பறக்கிறது. சாலையில் ஒருவர் டாக்ஸிக்காக கையை நீட்டுகிறார். அவரை ஏற்றிக் கொண்டு கார் செல்கிறது. பிரதமர் டாக்ஸி டிரைவராக இருந்து கொண்டு, பின் சீட்டில் அமர்ந்திருக்கும் பயணியிடம் பேச்சுக் கொடுக்கிறார். அரசியல், தொழில், பொருளாதார வளர்ச்சி என்று ஏதேதோ பேசிக் கொண்டே போகிறார். பிரதமர் என்று தெரியாத பயணி தனது மனதில் பட்டதை எல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்கிறார்.
“இதுக்குத்தானே இந்த வேஷம்?’ என்று மனதுக்குள் மகிழ்கிறார் பிரதமர்.
இது ஏதோ திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியல்ல.
அந்தக் காலத்து மன்னர்கள் மாறுவேடமணிந்து நகர்வலம் வந்ததைப் போல இந்தக் காலத்தில் ஒரு பிரதமர் உண்மையாகவே இப்படிச் செய்திருக்கிறார், நார்வே நாட்டின் பிரதமர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.
நார்வேயில் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் இருக்கிறது இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற லேபர் பார்ட்டி. லேபர் பார்ட்டிக்கு இந்த ஆண்டு தேர்தலில் கணிசமாக வாக்குகள் குறையும் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொன்னது. இது உண்மைதானா? மக்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்று நேரடியாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார் லேபர் பார்ட்டியைச் சேர்ந்த பிரதமர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.
வயது 54 ஆனாலும் இளைஞனுக்குரிய குறும்புத்தனம் இன்னும் போகவில்லை. அதனால் அவர் டாக்ஸி டிரைவராக உருமாறினார். காரில் ரகசியமாக வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இத்தனைக்கும் அவர் கார் ஓட்டி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. காரில் கிளட்சை அழுத்துவதாக நினைத்துக் கொண்டு தானியங்கி பிரேக்கை மிதித்து, அடிக்கடி காரை பயங்கரமாகக் குலுங்கச் செய்திருக்கிறார். பயங்கரமான அதிர்வுடன் கார் அவ்வப்போது நின்று, தலைநகர் ஆஸ்லோவின் வீதிகளில் பயணித்திருக்கிறது. காரில் பயணம் செய்தவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். காரை விட்டு இறங்கியதும் தங்களுடைய கருத்தை வெளிப்படையாகச் சொன்னார்கள்.
“”நீங்கள் கார் ஓட்டியது படுமோசமாக இருந்தது. இவ்வளவு படுமோசமான டிரைவிங்கை என் வாழ்க்கையில் இதுவரை நான் அனுபவித்ததேயில்லை”
இன்னொருவர் சொன்னார்: “”நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடவுளுக்கு நன்றி”
இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.
“”மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது எனக்கு முக்கியம். மக்கள் மனதில் நினைப்பதை எந்தத் தடையுமில்லாமல் பேசும் இடம் டாக்ஸி என்பதால் டாக்ஸி டிரைவராக மாறினேன். இன்றைய அரசியலைப் பற்றி மக்களின் நேர்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொண்டேன்” என்கிறார் அவர்.
அவர் கார் ஓட்டிக் கொண்டே பயணிகளிடம் பேச்சுக் கொடுத்தது, பயணிகள் அவரிடம் பேசியது எல்லாம் வீடியோவில் பதிவாகி, இப்போது இணைய தளங்களின் மூலம் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
“”நீங்கள் தேர்தலில் தோற்றுவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகி டாக்ஸி டிரைவர் ஆகிவிடுவீர்களா?”
என்று ஓர் இளம் பத்திரிகை நிருபர் குறும்பாகக் கேட்டார்.
அதற்கு ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் சிரித்துக் கொண்டே சொன்னார்:
“”நான் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால் நாட்டுக்கும், தோல்வியடைந்தால் டாக்ஸி டிரைவராகி பயணிகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகப் பணியாற்றுவேன்”
இது தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று காட்டமாக விமர்சித்திருக்கிறது நார்வேயின் கன்சர்வேட்டிவ் கட்சி.
இப்படி ஸ்டண்ட் அடிக்கவும் துணிச்சல் வேண்டுமே?
source:::: Dinamani tamil daily.
natarajan