வீட்டில், எல்லாரும் அயர்ந்து உறங்குகிறோம். நள்ளிரவு வேளை, குழந்தை அழுகிறது. மற்றவர்கள் எழுகின்றனரோ இல்லையோ, பெற்றவள் எழுந்து, பதட்டமாய் தொட்டிலைப் பார்ப்பாள். “குழந்தையை பூச்சி ஏதும் கடித்து விட்டதா…பசியில் அழுகிறதா…’ என்று, காரணத்தைக் கண்டுபிடித்து, பாலூட்டுவாள். குழந்தை தூங்கிய பின் தான், இவள் படுப்பாள். இது, தாய்மையின் உயர்வு.
அன்னை பராசக்தியும் இப்படித்தான். தேவர்கள் உறங்கும் காலத்தை, தட்சிணாயணம் என்பர். அதாவது, ஆடி முதல் மார்கழி வரை. இதில், புரட்டாசி மாதம் அவர்களுக்கு நள்ளிரவு, எல்லா தெய்வங்களும் அயர்ந்து உறங்கும் காலம். பிள்ளைகளான உலக மக்கள், தங்கள் முன்னோரின் தயவில் வாழும் காலம் இது. அப்போது, மக்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. வலி என்று, வந்து விட்டால், முதலில் வாயில் வரும் வார்த்தை, “அம்மா’ தான். தன் பிள்ளைகள், பிரச்னையில் வாடித் தவித்து, “அம்மா, நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று, அழுகிற குரல் கேட்டு, அந்த நள்ளிரவு வேளையில், அன்னை பராசக்தி மட்டும் எழுந்து விடுகிறாள்.
துர்க்கையாய் வந்து, நம் கஷ்டங்களைத் தீர்க்கிறாள். பணப்பிரச்னை என்றால் லட்சுமியாய், பேசி தீர்க்க வேண்டியவை என்றால், கலைமகளாய் வருகிறாள். அதனால் தான் அம்பாளை வணங்க, புரட்டாசி ராத்திரியைத் தேர்ந்தெடுத் தோம்; ஒரு ராத்திரியா… ஒன்பது ராத்திரி! “அம்மா… பிரச்னையான கால கட்டத்தில் இருக்கிறோம். எல்லாரும் தூங்கி விட்டனர். நீ தாய், தூங்காமல் எங்களை பாதுகாப்பவள். எங்கள் வீட்டில் கொலுவிரு’ என்று, வணங்கி, கொலு வைக்கிறோம். அந்த கொலு மண்டபத்தில், நடுநாயகமாய் வந்து வீற்றிடுவாள் அன்னை பராசக்தி. அதனால் தான், கொலு மேடையில், பராசக்தி சிலையை நடுவில் வைக்கிறோம்.
ஏன், ஒன்பது ராத்திரி, அவள் நம்மோடு இருக்க வேண்டும்… அதற்கும், ஒரு காரணம் இருக்கிறது. நம் <உடலில் ஒன்பது வாசல்கள் உள்ளன. ஒரு வாசல் உள்ள, ஜடப் பொருளான, கல்லும் மண்ணும் கலந்த ஒரு வீட்டுக் குள்ளேயே, கதவு சரியில்லை, நிலை சரியில்லை, மின்விளக்கு சரிவர எரியவில்லை என, ஆயிரம் பிரச்னைகள் புகுந்து விடுகிறது. அப்படியிருக்க, கண், காது, மூக்கு, வாய், குதம், பிறப்புறுப்பு என, ஒன்பது வாசல் உள்ள, நம் உடலுக்குள், எத்தனை பிரச்னைகள் புகும்!
அந்த ஒன்பது <உறுப்புகளையும், கட்டுப்படுத்தும் ஆயுதமே மனம். அந்த மனக்கோவிலில் அவளை குடியமர்த்தி, ஒன்பது நாள் பூஜிப்பதன் மூலம், பிரச்னைகளில் இருந்து, அவள் நம்மை பாதுகாக்கிறாள்.
நவராத்திரியின் முதல் மூன்று நாளை, கலைமகளாய் வணங்கி நல்ல கல்வியையும், அடுத்த மூன்று நாளை, திருமகளாய் வணங்கி செல்வத்தையும், இன்னும் மூன்று நாளை, துர்க்கையாய் வணங்கி ஆற்றலையும், கேட்டுப் பெற வேண்டும். நம்மைப் பெற்றெடுத்த ஒவ்வொரு தாயும் பராசக்தி தான். அந்த தாய்மார்கள், நம் இளவயதில், நமக்கு, எவ்வளவோ சேவை செய்துள்ளனர். அவர்களுக்கு, பதில் சேவை செய்வதன் மூலம், நவராத்திரி விழாவை அர்த்த முள்ளதாக்குவோம்.
source::::: dinamalar …. tamil daily
natarajan