“வேர் என நீ இருந்தாய் …வீழ்ந்து விடாது இருந்தேன் நான் ” …

நடக்க முடியாத கணவனை சக்கரம் பொருத்திய பலகையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் பழனியம்மாள். (கோப்புப்படம்)

நடக்க முடியாத கணவனை சக்கரம் பொருத்திய பலகையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் பழனியம்மாள். (கோப்புப்படம்)

நான்கு மணி நேரத்தில் காதல், நான்கு நாட்கள் டேட்டிங், நாற்பது நாட்களுக்குள் திருமணம், 4 மாதங்களுக்குள் விவாகரத்து என ‘நவீன’ காதல், பல பரிமாணங்கள் அடைந்திருப்பதை பல சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. ஆனால், காதல் திருமணம் செய்த கணவன் போலியோவால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில், 40 ஆண்டுகளாக சக்கரம் பொருத்திய பலகையில் அமர வைத்து, ஊர்சுற்றி பிச்சையெடுத்து அவரைக் காப்பாற்றிய ஈரோட்டைச் சேர்ந்த அதிசயப் பிறவி பழனியம்மாள் தற்போது பரிதவித்துப் போய் இருக்கிறார்.

இதுநாள்வரை தனக்கு துணையாக இருந்த ஆசைக்கணவனின் திடீர் மறைவுதான் பரிதவிப்புக்குக் காரணம். ஒரு பெண்ணின் வைராக்கியம் என்னவெல்லாம் சாதிக்கும் என்பதற்கு மவுசி என்று அழைக்கப்படும் பழனியம்மாளின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

கண்டதும் காதல்…

ஈரோட்டை அடுத்த எல்லப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் போலியோவால் பாதிக்கப்பட்டு, சிறு வயது முதல் நடக்க முடியாத நிலையில் இருந்தார். இவர் மீது, அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு இரக்கத்தினால் உருவானது காதல். ஆனால், இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, எதிர்ப்பை மீறி காதல் மணம் புரிந்தனர் இந்த தம்பதி. கால்கள் ஊனமுற்றதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத கணவன், அவரைத் தனியே விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்த காரணங்களால், கணவன் அமரும் வகையில், சக்கரம் பொருத்திய பலகையை தயார் செய்து, அதில் அவரை அமர வைத்து, பிச்சைப்பாத்திரம் ஏந்தினார் பழனியம்மாள்.

தத்தெடுப்பு

தங்களுக்கு குழந்தை யில்லை என்ற குறை யைப் போக்க, இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து, அவர்களை யும் வளர்த்து ஆளாக்கியது பழனியம்மா ளின் மனோதிடம். குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது வரை, குறையேது மில்லாமல் நடத்தி வைத்தனர் இந்த பாசக்கார தம்பதி.

தாங்கள் வளர்த்த குழந்தைகள், குடும்பத்தோடு வெவ்வேறு பகுதிகளில் குடியேறினாலும், அவர்களோடு ஒண்டிப்பிழைக்க இவர்களின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. இதனால், சக்கர வண்டியில் கணவனை இழுத்தபடியே, பழனியம்மாளின் பயணம் தொடர்ந்து வந்தது. இந்த பாசத் தம்பதியைப் பார்க்கும் ஒவ்வொருவரும் வியப்பும், ஏக்கமும் அடைவது வாடிக்கை. யார் கண்பட்டதோ, கடந்த வாரம் ஆறுமுகம் உடல்நலக்குறைவால் இறந்து போனார். அவர் பாசமாக வளர்த்த குழந்தைகள், தகவல் கேட்டு பதறியடித்தபடி வந்து, தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை நடத்தினர்.

‘ஆலம் விழுதுகள் போல், உறவு கள் ஆயிரம் இருந்துமென்ன… வேரென நீ இருந்தாய்… நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’ என்ற பாடல் வரிகளைப் போல், இதுநாள்வரைத் தனக்கு சுகமான சுமையாய் இருந்த கணவன், தன்னை விட்டுப்பிரிந்த சோகத்தில் தவித்துப் போய் இருக்கிறார் பழனியம்மாள்.

முதியோர் உதவித் தொகை வேண்டி…

இருந்தும், யாரின் துணையுமின்றி தன் சொந்தக்காலில் நின்றிட வேண்டுமென்பதற்காக, முதியோர் உதவித்தொகை வேண்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருக்கிறார் அவர். பாசம், பதிபக்தி, வைராக்கியம், மனோதிடம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனிதநேயம் என என்னென்ன நல்ல குணங்கள் இருக்க வேண்டுமோ, அவையனைத்தையும் தன் வாழ்நாளில் கடைபிடித்த பழனியம்மாளுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல. அனைவரின் கடமையும்கூட.

source:::::  Story by Govindarajan in The Hindu….Tamil
natarajan

Leave a comment