பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர். இதுதான் நம் மக்களின் தலைவிதி’னு சிவாஜி பேசி நான் கேட்டப்ப, எனக்கு ரொம்ப சின்ன வயசு. அப்போ, ‘இதுல என்ன இருக்கு’னு தான் தோணுச்சு. ஆனா எங்க ஊரை விட்டுட்டு, சென்னைல வந்து வேலை பாக்குறப்போ தான், அது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு புரியுது.
மானேஜர் கால்ல கைல விழுந்து, ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்து ஐஸ் வெச்சு, ஊரைப்பத்தி பதிவெல்லாம் போட்டு, அதை அப்படியே அகஸ்மாத்தா அவருக்கு அனுப்பி, படிக்க வைச்சு, தீபாவளிக்கு ‘லீவ்’ வாங்குறத பத்தி மட்டுமே தனியா ஒரு மெகா சீரியல் எடுக்கலாம்.இப்படி லீவ் எல்லாம் வாங்கிட்டு, எத்தனை ‘பேன்’ வைச்சாலும் காத்தே வராத, மூலையில இருக்குற கோயம்பேடு ‘முன்பதிவு’ மையத்துல, எப்படியோ டிக்கெட் ‘புக்’ பண்ணிட்டேன்.தீபாவளிக்கு முந்தின நாள், அரக்கப் பரக்க தி.நகர்ல சுத்தி, சொந்தக்காரன் பங்காளிக்கெல்லாம் துணி எடுத்து; அடையார் ஆனந்தபவன்ல சண்டை போட்டு ஒரு கிலோ காரம், ஒரு கிலோ இனிப்பு வாங்கிட்டு; எட்டு மணி பஸ்சுக்கு ஏழரை மணிக்கே பெருங்களத்தூர்ல வந்து நின்னாச்சு.நம்ம ஆட்களுக்குன்னு இது அமையுதா, இல்லை……
”அண்ணாச்சி! நம்ம ஊரா?”
“நீங்க எந்த ஊரு?”
“மேலச்செவலு. நீங்க?”
“நமக்கு பாளையங்கோட்டை.”
“சரி அண்ணாச்சி, ஊருக்கு இனிப்பு ஒண்ணும் வாங்கல கேட்டியளா. ஒரு நிமிசம் நம்ம பொட்டிய பாத்துக்கிட்டீங்கன்னா, ஓடிப்போயிட்டு ஓடியாந்துருவேன்”
சொந்த ஊர்ல இருக்கும்போது ஒருத்தன ஒருத்தன் கண்கொண்டு பாக்கோமோ இல்லையோ, இந்த மாதிரி சமயத்துல பாசம் பொங்கிரும் நமக்கும்.
”அதுக்கென்னா… போயிட்டு வாங்க”னு, அனுப்பி வைச்சேன். போனவன் ரொம்ப நேரமா வரவேயில்ல. அவன் பொட்டியெல்லாம் பாத்தா, சென்னைய காலி பண்ணிட்டு போற மாதிரி இருந்தது.
ஒருவேளை பஸ் வந்துட்டா என்ன பண்ணுற துங்கற யோசனைல இருக்கும்போதே, ஓடியாறென்னு சொன்னவன், கால்ல எட்டு போட்டுக்கிட்டு வுந்தான்.
“இனிப்பு எங்கவே?”
“அந்த கடைக்கு முன்னால நம்ம கடை இருந்ததுல்லா”னு கேவலமா சிரிச்சான்.
பயங்கர குடி. என்ன கருமத்த குடிச்சுத் தொலைச்சானோ தெரியலை, ஆனா அது, என் கொடல தான் பொரட்டி எடுத்துச்சு.
“இந்தாரும் உம்ம பொட்டி. இனிமே எங்கேயும் போவாதேயும். என்னால பாக்க முடியாது”
“அண்ணாச்சி சாப்பிடுவியளா?” கைப் பெருவிரலை வாய்க்கு காமிச்சு கேட்டான்.
“இல்லை அண்ணாச்சி”
“ஐயோ உங்களுக்கும் சேத்துல்லா வாங்கிட்டேன். தீவாளிக்கு கூட இருக்குறவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி?”
“அய்யோ. எனக்கு பழக்கமில்லை. உங்க அன்புக்கு…நன்றி.” இவங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க?
மணி எட்டாச்சு, எட்டரையாச்சு. வண்டி வந்தபாடில்ல.
‘சரி, தீவாளி நேரம், சென்னைக்குள்ள கூட்டமா இருக்கும் அதான் லேட்டாகுது’னு நின்னுகிட்டிருந்த எனக்கு, ரொம்ப கோவமாயிருச்சு.
மணி 10! ஆனா பஸ் வர்றதுக்கு எந்த அறியையும் காணோம், குறியையும் காணோம்.
ஒன்பது மணி பஸ்சுக்கு போறவங்க, பத்து மணி பஸ்சுக்கு வந்தவுங்கனு நிக்க எடமில்லை. நிக்க எடமில்லாதவன் எல்லாம் ‘டாஸ்மாக்’ல போய் உட்காந்துட்டானுவ.
நானாவது ‘நான் – ஏசி’ பஸ். ‘ஏசி’ பஸ்ல போறவன் எல்லாம் செத்தான். காலைல மப்புலதான் போய் எறங்கணும்.
அரசு பஸ் தான் லேட்டுனு பாத்தா, ஆம்னி பஸ்சுக்கும் இதே நிலைமைதான்.சில ஆம்னி பஸ்ல எல்லாம் டிக்கெட் குடுக்கும்போது, டிரைவர் ‘போன் நம்பரோ’, கண்டக்டர் ‘நம்பரோ’ சேத்தே குடுக்கறாவ. அது மட்டுமில்லாம நம்ம ‘பாயிண்டுக்கு’ வண்டி வாறதுக்கு முன்னால ஒரு ‘மெசேஜ்’ கூட வரும்.ஆனா, அரசு பஸ் எங்க நிக்குதுன்னு யாருக்குமே தெரியாது. நம்ம மேலச்செவல்காரரு, எனக்குனு வாங்கினதையும் குடிச்சிட்டு, பயங்கர கொசுக்கடிலயும் சிரிச்சுட்டே நின்னாப்புல.மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, நாஞ்சில் நாடுன்னு நம்ம பக்க தமிழெல்லாம் எதிரொலிக்கிறப்பத் தான், “எல்லா தீவாளி வண்டியும் பை-பாஸ்லயே நிறுத்திட்டானாம்யா. கோயம்பேட்டுல இருக்குறவனுக்கே வண்டி வல்லயாம்”னு, ஒருத்தன் சொன்னான்.
நாசமா போச்சு. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாப் கட்டணக் கழிப்பிடத்துல தான் தீவாளிக் குளியலைப் போடணும்னு தலையில எழுதி இருந்தா என்ன பண்ண முடியும்?
அடப்போங்க… குளியல் என்ன, கூடி நின்ன கூட்டத்தால, ஒண்ணுக்குக் கூட இருக்க முடியாத நெலம! ‘டாஸ்மாக்குல’ பத்து மணிக்கு முன்னாடி போய், ரெண்டு பீர் குடிச்சவன் எல்லாம் என்ன பண்ணனும்னு தெரியாம தவிச்சுட்டானுவ. கண்ணுல மரண பீதி.கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் கூட இல்ல. பொம்பளையாள் இருக்குற எடத்துல முக்கால்வாசி பயலுவ குடிச்சிருந்தானுவோ, எதுனா எக்குத் தப்பு நடந்தா பாக்கக் கூட யாருமில்ல. ஒரு வேளை தப்பைத் தட்டிக் கேக்க நம்ம இங்க இருக்கோம்னு அவிங்களுக்கு தெரிஞ்சிருக்கோ என்னமோ!
ஒருவழியா, 12 மணி வாக்குல பஸ் வந்து, நின்னப்போ மேலச்சேவல் நல்ல தூக்கம். ‘சரி ஊர்க்காரனாச்சே’னு ஏத்தி விட்டா, ‘கண்டக்டர்’கிட்ட அப்பத்தான் டிக்கெட் வாங்க துட்டை நீட்டுறான்! கண்டக்டரு, என்னல்லாம் வைய்ய முடியுமோ வைஞ்சிட்டு, டிரைவருக்கு பின்னாடி இருந்த ஒரு எடத்துல உட்கார வெச்சுட்டார்.
‘நல்ல வேளை, இவன் எனக்குப் பக்கத்துல இருக்குற சீட்டுக்கு வரலை’னு சந்தோஷமா போய் பார்த்தா, எனக்குப் பக்கத்துல அவனையும்விட மொரட்டுக் குடிகாரன் ஒருத்தன்! தலையெழுத்து.’12 மணிக்கு வந்தாலும், நாலு மணிக்குள்ள ஊரு போய்ச் சேர்ந்துருவேன்’ங்கற வெறியில நம்ம டிரைவர் ஓட்டினாரு பாருங்க…பஸ்ல குடிச்சிருந்த அத்தனை பேரும், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சாப்பிட்டது வரைக்கும் வாந்தி எடுத்துட்டாங்க.அதுலயும் நம்ம முன்சீட்காரர், டிரைவர் முதுகுலயே வாந்தி எடுத்து, அதனால வண்டி ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு கெளம்பிச்சு.இதெல்லாம் தாண்டி, காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ, சொந்தக்காரன், பங்காளினு எல்லா பயலும் படத்துக்கு போயிட்டானுவோ. ச்ேச… இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து, என்னத்தக் கண்டோம்?காலைல எண்ணெய் தேச்சுக் குளிக்க, பட்டாசு வெடிக்க எல்லாம் பாக்கியமே இல்லாம, பட்டணத்து வாழ்க்கைக்கு திரும்புறதுக்கு, தீவாளி முடிஞ்ச அடுத்த நாளே பஸ்சுக்கு வந்து நின்னேன்.
“பாஸ்! சென்னைல எங்க?”
“அம்பத்தூர்.”
“ஒரு அஞ்சு நிமிசம் நம்ம பைய பாத்துகிடுதியளா? இந்தா வந்திருதேன்…”
“நான் ஊருக்கே போகலைடா!!”
source::: Dinamalar…Tamil Daily
natarajan