கேலி பேசி வாங்கிக் கட்டாதீர்!
சமீபத்தில், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பார்வை தெரியாத பெரியவர் ஒருவர், டி.எம்.எஸ்., குரலில், பழைய பாடல்களை, அசத்தலாய் பாடி, கையேந்தி வந்தார். அவரது குரல் வளத்தில் சொக்கிப்போன பயணிகள், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என, அவரவர் விருப்பம்போல் வழங்கினர்.
அப்போது, போதையிலிருந்த சில இளைஞர்கள், ‘ஹலோ பிளைண்ட்… இந்த பாட்டை, எந்த, ‘கிளையன்டுக்கு டெடிகேட்’ செய்ய விரும்புறீங்க…’ என, கேட்டு, அவரைக் கலாய்த்தனர்.
இதைக் கேட்ட அந்த பெரியவர், ‘ஊனத்தை கிண்டல் செய்யும், சில ஈனப்பிறவிகளுக்கு, ‘டெடிகேட்’ செய்ய விரும்புறேன்…’ என, நெத்தியடியாக கூற, கூனிக் குறுகிப்போன அந்த இளைஞர்கள், ‘கப்சிப்’ ஆகி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, ‘எஸ்கேப்’ ஆகிவிட்டனர்.
மாற்றுத் திறனாளிகளை, பரிகாசம் செய்ய, எப்படித்தான் இவர்களுக்கு மனம் வருகிறதோ?
— சுமதி பாபு, சென்னை. in Dinamalar.. Varamalar
natarajan