வைகை பெருகட்டும் …அந்த நன்னாள் வரட்டும் விரைவில் !!!!

பரிபாடல் போன்ற சங்க கால நூல்களில், வைகை நதி பெருக்கெடுத்து ஓடியது பற்றி, சொல்லப்பட்டுள்ளது. அதைப் படிக்கும் போது, தற்போதைய நிலை கண்டு மனம் வேதனைப் படுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் காலத்தில் கூட, சொட்டுத் தண்ணீர் இல்லாமல், லாரி தண்ணீரை ஒரு குட்டையில் நிரப்பி, விழா கொண்டாட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றால், இது யார் செய்த தவறு?
நம் வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கிறதென்றால், நாலு பேருக்கு தானதர்மம் செய்வது வழக்கம். மதுரையில் மீனாட்சியை மணமுடிக்க, சிவன் சுந்தரேஸ்வரராக வந்த போது, ஊருக்கே நன்மை செய்தார். குண்டோதரனின் தாகம் தீர்க்க உருவாக்கப்பட்டது தான் வைகை ஆறு. ஒரு ஊரில் ஆறு இருந்தால் மட்டும் போதுமா… அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, ஆவணி பூராடம் நட்சத்திரத்தன்று, சிவன், ஒரு கூலி ஆளாக, வைகை கரையை அடைக்க வந்தார்.
மதுரையில், அரிமர்த்தன பாண்டியன் ஆண்டபோது, மாணிக்கவாசகர் அவனது அமைச்சராக இருந்தார். நாட்டின் படை பலத்தைப் பெருக்க, குதிரைகள் வாங்கி வரும்படி பணம் கொடுத்து அனுப்பினான் மன்னன். சென்றவர் வழியில், திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே, ஒரு குருந்த மரத்தடியில், சிவன் குருவாக தியானத்தில் அமர்ந்திருந்து, மாணிக்கவாசகருக்கு திருவடி தீட்சை அளித்தார். அதன்பின், சிவனடிமையாகி விட்ட மாணிக்கவாசகர், குதிரை வாங்க கொடுத்திருந்த பணத்தை, கோவில் திருப்பணிக்கு செலவு செய்தார்.
விஷயம் மன்னனுக்கு தெரிந்து, மாணிக்க வாசகர் அழைத்து வரப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். சிவன், வைகையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்து தன் திருவிளையாடலை நிகழ்த்தினார். மன்னனுக்கு ஆச்சரியம், திடீரென இந்த வெள்ளம் எப்படி வந்தது என்று! இருப்பினும், ஊரைப் பாதுகாக்க கரைகளை உயர்த்த ஆணையிட்டு, “வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வர வேண்டும்…’ என, உத்தரவிட்டான்.
வந்தி என்ற முதிய சிவபக்தையின் வீட்டில் யாருமில்லை. அவள் புட்டு விற்று பிழைப்பவள். அவள் வீட்டுக்கு, கூலிக்காரன் வடிவில் வந்தார் சிவன். அவள் சார்பில் கரையை அடைக்க, புட்டை கூலியாகப் பெற்றுக் கொள்வதாகக் கூறினார்; அவளும் சம்மதித்தாள்.
வேலைக்குப் போன இடத்தில், வேலை செய்யாமல் படுத்து விட்டார். சோதனைக்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பிரம்பால் முதுகில் ஒரு அடி அடித்தான். அந்த அடியின் வலி, மன்னன் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. மன்னன் பயந்து விட்டான். உண்மை வெளிப்பட்டதும், மாணிக்கவாசகருக்கு மரியாதை செய்தான் மன்னன். வைகையில் வெள்ளம் கட்டுப்பட்டது.
இத்திருவிளையாடலின் மூலம் சிவன், ஆறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, வலியுறுத்தி, அதற்காக, அடியும் வாங்கியிருக்கிறார். ஆனால், நாமோ… ஊரில் இருக்கும் குப்பையை எல்லாம் வைகையில் கொட்டி, ஆற்றை அசுத்தப் படுத்துகிறோம்.
ஆவணி பூராடம் நட்சத்திரத்தன்று, மதுரையில் புட்டுத்திருவிழா நடத்தப்படுகிறது. வெறும் திருவிழாக்களை நடத்துவதால், எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
“சிவனே… அன்றொரு நாள் நீ, சுந்தரேஸ்வரனாக வந்து, வைகையை உற்பத்தி செய்தாய்; கூலியாளாக வந்து வைகையைப் பாதுகாத்தாய். நாங்கள் இடையில் செய்த பெறும் தவறால், வைகைத்தாய் பெருக மறுக்கிறாள். இனி, இவ்வாறு செய்ய மாட்டோம். உன் அருளை வாரி வழங்கி, வைகையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓட அருள் செய்…’ என்று, மனமுருகி கெஞ்சிக் கேட்க வேண்டும். நமது கூட்டுப்பிரார்த்தனைக்கு சுந்தரேஸ்வரரும், அன்னை மீனாட்சியும் நிச்சயம் செவி சாய்ப்பர்.
வைகை பெருகி, நிரந்தரமாக ஓடும் அந்த நன்னாளுக்காக காத்திருப்போம்.

source :::::dinamalar …weekly supplement

natarajan

Leave a comment