படித்ததில் பிடித்தது !!!…. ” கொளுத்திப் போடு ” !!!….

டார்கெட்….அரைப் பக்க  கதை !!!

அந்த பிரமாண்ட மண்டபத்தில் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து மதத்தினரும் கூடியிருந்தனர். அங்கு நடக்க விருப்பது அனைத்து மதத்தினர் பங்கு பெறும் மழை வேண்டி பிரார்த்தனை. வெவ்வேறு மதத்தினருக்கு வெவ்வேறு இடம் ஒதுக்கப்பட்டடிருந்தது. அங்கு அவரவர் முறைப்படி பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த விசேஷ ஏற்பாட்டின் ஐடியாவுக்கு சொந்தக்காரர் தொழிலதிபர் ஜே.கே.விற்கு பாராட்டு மழை.
பிரமாதம் சார், வித்தியாசமான யோசனை. எல்லா மதத்தினரையும் ஒன்று சேர்த்து புரட்சி பண்ணிட்டீங்க. மத நல்லிணக்கத்திற்கு வித்திட்டிருக்கீங்க. எல்லாவற்றிற்கும் சிரித்து மழுப்பி நகர்ந்த ஜே.கே. ஒரு பிரபல தொழில் வித்தகர். அவர் புதிதாய் துவங்கி இருக்கும் குடை, ரெயின்கோர்ட், ஜெர்கின் போன்றவற்றை தயாரித்து தமிழ்நாட்டில் மார்கெட்டிங் செய்யும் தொழில் இலக்கை எட்ட முடியாமல் தத்தளிப்பதால் தான் இந்த ஏற்பாடு. அந்த விஷயம் பாவம் அவரை விழுந்து விழுந்து பாராட்டும் நபர்களுக்கு தெரியாதே.
-அரியாஸ்.

source::::Kumudam Tamil Weekly

 

கொளுத்திப்  போடு !!!….ஒரு பக்க கதை !!!!
சுஷ்மா, ஜீன்ஸ் – உடல் ஒட்டின பனியனுடன், உலர்த்த நேரமில்லாத ஈர முடியுமாய் கிளம்ப, “சுஷ்! ஒரு வாய் சாப்பிட்டு போடி…!’
“நேரமாச்சும்மா வரேன்!’ என்ற செருப்பில் நுழைந்தாள். அதற்குள் அம்மா பின்னாடியே ஓடிவந்து லாப்டாப் பையில் டிபன் பாக்ஸை செருகி, “போன உடனே மறக்காம சாப்பிட்டிரு’
“சரிம்மா, பை!’ என்று ஓடி தனக்காக காத்திருந்த டி.வி. சேனல் வண்டியில ஏறி…. செல் ஒலிக்க “இதோ கிளம்பிட்டேன் சார்!’
“அக்கா.. போலாமா?’ என்று டிரைவர் பின்னால் திரும்பிப் பார்த்த பகுதி அவளுக்கு கூசிற்று. என்ன செய்ய முடியும்!
அழகில்லை – நிறமில்லை – களையில்லை – முடியில்லை – வேண்டிய ளவுக்கு வேண்டியது வேண்டியபடி இல்லை என்று வருத்தப்படுபவர்கள் இருக்கிறார்கள் எல்லாம் இருந்தாலோ – இப்படி!
விஷûவல் கம்யூனிகேஷன் முடிந்து உடனே இந்த பிரபல சேனலில் சேர்ந்து சுஷ்மா எதிர்பாராமல் திடீர் பிரபலம்! பிரபலத்திற்கேற்ப கவர்ச்சியாக வேண்டிய கட்டாயம்!
அரசியல் – சினிமா – மீடியா – தொழிலதிபர்கள் என பெரும்புள்ளியுடன் பழகும் வாய்ப்பு. கை நிறைய சம்பளம்!
புதுப்புது யோசனைகள், யுக்திகள்! சேனலின் ரேட்டிங்கை கூட்ட வேண்டிய எப்போதும் ஓட்டம்! ஓய்விற்கும், தூங்கவும் பசி போக்கவும் நேரமில்லை. வசதியில்லாதவர்கள் காசில்லாமல் பட்டினி. காசிருப்பவர்களுக்கு சாப்பிட நேரமில்லை அல்லது டயட்!
இவர்கள் பம்பரமாய் சுழன்றால்தான் ஜனங்களுக்கு பரபரப்பு தர முடியும். இருப்பதை மறக்கணும். இல்லாததை பெரிசு பண்ணணும். போட்டி சேனல்களுக்கு முன்பு – முந்தணும்! அவன் ஏதாவது செய்து நல்ல பெயர் வாங்கினால் உல்டா பண்ணி காலி பண்ணணும்!
சுஷ்மா உள்ளே நுழைந்தபோது, ரிசப்ஷனிஸ்ட் “டைரக்டர் விக்னேஷ் பார்க்கச் சொன்னார்!’ என்று அன்பாய் விரட்டினாள்.
விக்னேஷ், “யெஸ், சார். நோ சார்! இந்த வாரம் செஞ்சிரலாம் சார்!’ என்று செல்லில் அடிபணிந்தபடி அவளை அமரச் சொன்னான். பாவம், இளம் வயதிலேயே வழுக்கை! அவளும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரை அமர்த்தி அமர்ந்தான்.
எதிர்முனையில் சேர்மன். சேனலின் ஓனர். அப்போது எந்த நாட்டிலிருந்து என்று தெரியவில்லை எங்கிருந்தாலும் விரட்டி கழுத்தைப் பிடிப்பார்.
அள்ளி அள்ளி சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அனுபவிக்க நேரம் தராத குரூரம்; சேனலில் ஆரம்பித்த அவரது வாழ்வு இன்று உலகம் முழுக்க பல்தொழில்களில் பறக்கிறது! சிறக்கிறது. ஆக்கவும் அதைவிட அதிகமாய் அழிக்கவும் அவர் தெம்பு பெற்றவர்! குடும்பம் அமெரிக்க கிரீன் கார்டில்!
“விக்னேஷ்! நேத்து ஆரம்பிச்ச சேனல்காரன் புகுந்துவிளையாடறான். நீங்கள்லாம் என்ன பண்றீங்க? உலகத் தமிழர்களை உசுப்பற மாதிரி ஏதாவது…’
“யோசிக்கணும் சார்..’
“செய்றீங்க – அதுவும் அதிரடியாய் – நிலநடுக்கமாய்.. இன்னும் ரெண்டு நாளில்! அவனவன் தீபாவளி பட்டாசு வெடிப்பான். நாம அதுக்கு நாலு நாள் முன்னாடியே வெச்சிரணும்! அது சரவெடியா இருக்கணும்!’
“டன் சார்!’
“என்ன செய்யப்போறீங்கன்னு இன்னும் நாலு மணி நேரத்துல எனக்கு தெரிஞ்சாகணும்! கீப் கான்ஃபிடன்ஸியல்!’
“ஓகே சார்.’
“நம்மாளுங்களுக்கு முடிலேன்னா – சொல்லு! ஏஜென்ஸிகாரனை அனுப்பறேன் – காதும் காதும் – கண்ணும் கண்ணும் வச்சமாதிரி அவன் செய்வான்! சுஷ்மா எதிரேதானே இருக்கா… சுஷ்..’
அவள் வியர்த்து “ஹாய் சார்!’ என்று படபடக்க, “உன் பனியன் சூப்பர்! அதை வேலையிலும் காட்டு. பை!’
விக்னேஷ் குறுந்தாடியை வருடி; தலையை சிலிர்த்து, “சுஷ்… என் பண்ணலாம் சொல்லு! ஏதாச்சும் யோசிச்சியா…?’
“இல்லே சார்… பசிக்குது. அம்மா டிபன் கொடுத்தாங்க. ஷேர் பண்ணுங்க முதல்ல!’
இரண்டு இட்லி உள்ளே போய் மெஷினில் காபி பிடித்து ரூசித்ததும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.
“சார்… ஏதாவது சாமியாரை களவாடுவோமா…?’
“யார் இருக்கா. பாக்கி…?’
“இல்லாட்டி என்ன போலி சாமியாரை உருவாக்குவோம். பொண்ணுங்களை அனுப்பி படம் பிடிச்சு.. அவங்களுக்கு பணம் கொடுத்து இலவச பப்ளிசிட்டி!’
“அதெல்லாம் தான் ஜனங்களுக்கு பழகிப்போச்சே! இதிலே பரபரப்புக்கு என்ன இருக்கு? புதுசா யோசி…!’
“பேசாம சினிமா – ஹீரோ – ஹீரோயினிடம் விலை பேசி… செட் அப் படம் எடுத்து… ரெண்டு நாளைக்கு மாத்தி மாத்தி அவங்களைப் பத்தி காரசார அறிக்கை விட வச்சா ஜனங்க ரசிப்பாங்க. பேசுவாங்க. அப்புறம் வேறு நியூஸ் வந்ததும் இதை மறந்துடப் போறாங்க!’
விக்னேஷ் பொறுமையிழந்து சேனங்களை இங்குமங்கும் திருப்பிக் கொண்டிருந்தான். திருவிழா! பஜாரில் வெடிகுண்டு! கப்பல் எரிந்து நாசம்! விமானம் கடத்தல்..! சிரியாவில் ஆயிரம் பேர் சுட்டுக்கொலை! எகிப்தில் போராட்டக்காரர்கள் மேல் திராவக வீச்சு! ஈராக்கில் கார் வெடி குண்டு! ஜப்பானில் நிலநடுக்கம்! அமெரிக்க எரிமலை! வெற்றிகரமாய் ராக்கெட் ஏவப்பட்டது!
உள்ளூர் சேனலை திருப்பினால் ரஜினி! விஜய்! அஜித்! அமீர்கான்! ஏழுலட்சம் கோடி ஊழல்! எங்களுக்கும் தனி மாநிலம் வேணும்! அஸ்ஸாமில் வெள்ளம்! தீபாவளி ரிலீஸ் படங்கள்!
காலை ஆறு முதல் மறுநாள் காலை ஆறுரை தீபாவளியை முன்னிட்டு சினிமா…! சினிமா நிகழ்ச்சிகளை வழங்குவோம்! ஒவ்வொரு சேனலிலும் ஆஸ்தான பட்டிமன்றங்கள்! சினிமா நட்சத்திரங்களின் அலப்பரைகள்!
என்ன செய்யலாம்?
ஃபோன் வந்தது.
எதிர்பார்த்தது போலவே சேர்மன்! பயபக்தியோடும் நடுக்கத்தோடும் எடுக்க, “விக்னேஷ்! இடைத்தரகன் ஒருத்தன் மாட்டினான். இன்னும் ஒரு மணி நேரத்துல உன்னை வந்து பார்ப்பான். அவன் கேட்கிற பணத்தை செட்டில் பண்ணி.. நாளை மாலையிலிருந்தே ஃப்ளாஷ் நியூஸ் ஓட விட்டிரு!’
“என்னன்னு சார்..?’
“அதான்ப்பா.. நம்மகிட்டே வாலாட்டினானே… மானநஷ்டவழக்குப் போட்டு ஜெயிச்சானே அந்த மந்திரியோட மகனாம் – வெளிநாட்டுல கொட்டமாம்! அவன் கையில ஆதாரம் இருக்காம். நாளை மாலை காசட் வரும். அது உண்மையான்னு மட்டும் செக் பண்ணிகிட்டு செட்டில் பண்ணிரு!’
“ஓகே சார், எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.’
அந்த வெளிநாட்டுக்காரனுடன் மீட்டிங்! கேசட் பரிமாற்றம்! கேசட்டை பரிசோதிக்க அனுப்பி – அது ஒரிஜினல் என உறுதியானதும் –
“அமர்க்களம்! ஒரு பிரபலத்தின் வாரிசு வெளிநாட்டில் அட்டகாசம்! உல்லாசம்… இன்று இரவு பத்து மணிக்கு…’ என பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவர்களது அனைத்த சேனல்களிலும் ரசிகர்களை உசுப்பேற்றி.. ஒளிபரப்பாயிற்று..
– பரபரப்புக்காக, பணத்திற்காக பேராசைக்காக, பழிவாங்குவதற்காக, பாடம் புகட்டுவதற்காக, பேரத்திற்காக, பிளாக்மெயிலுக்காக, ஓட்டுக்காக, ஓட்டுவதற்காக, வெட்டுவதற்காக, மிரட்டி -உருட்டி பொய்யை மெய்யாகக் காட்டி காட்டி சம்பந்தப்பட்டவர்களை காலி பண்ணி – சின்னச் சின்ன சாதி மத சண்டைகளை கலவரமாக உருவாக்கி, பிசினஸ், அரசியல் சாம்ராஜ்யங்களைத் தகர்த்து, பலரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருந்த அந்த சேனலில் –
அப்போது மிக பிரம்மாண்டமாக வெளியான அந்த உல்லாசக் காட்சியில் குறிப்பிட்ட மந்திரியின் மகனுடன் சேர்ந்து கொட்டமடித்திருந்தது – வெளிநாட்டில் படித்துவந்த அந்த சேனல் சேர்மனின் மகள் என்பது படம் பிடித்தவர்களுக்கோ ஒளிபரப்பினவர்களுக்கோ அப்போது தெரியாது!

 என்.சி. மோகன்தாஸ் 

source:::::Kumudam Tamil Weekly

நடராஜன்

 

Leave a comment