படித்து நெகிழ்ந்தது …” மே /பா காமராஜர் தலைவர் சத்திய மூர்த்தி பவன் “

எட்டயாபுரம், பா.நா.கணபதி எழுதிய, ‘நினைவுகள்’ நூலிலிருந்து:

ஒரு முதிய காங்கிரஸ் தியாகி, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும்போது, தன் பெயருடன், மே/பா. காமராஜர், தலைவர், சத்தியமூர்த்திபவன், சென்னை என, பதிவேட்டில் எழுதி கொள்ளும்படி கூறினார்.
ஒருநாள், அம்முதியவர் திடீரென்று இறந்து விட்டார். அவர் தந்த முகவரிப்படி காமராஜருக்கு தகவல் தரப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ந்து போனார் காமராஜர். ஏன் என்றால், இறந்தவர் யார் என்றே அவருக்கு தெரியாது.
‘இறந்தவர் காங்கிரஸ் தியாகி; என் முகவரியை தந்திருக்கிறார். அவருக்கு என்னிடம் அவ்வளவு நம்பிக்கை! தியாகியின் இறுதி சடங்கை நல்ல முறையில் செய்ய வேண்டும்…’ என்ற கடமையுணர்வு அவரது உள்ளத்தில் மேலிட்டது.
மருத்துவமனை சென்று, இறந்தவரின் உடலை பெற்று, நல்லடக்கம் செய்யும்படி, செயலர் வி.எஸ். வெங்கட்ராமனிடம் தெரிவித்தார். அன்று, தன் வழக்கமான நிகழ்ச்சிகளை ரத்து செய்தவர், செயலற்றவராக, ஈஸி சேரில் சாய்ந்து விட்டார்.
சடலம், மூலகொத்தளம் சென்றடைந்து, எரியூட்டும் சமயம் அங்கு சென்ற காமராஜர், ‘இந்த தியாகி யாரோ… வீடு, வாசல், மனைவி, மக்கள் எல்லாவற்றையும் துறந்து, காங்கிரசில் சேர்ந்து பல அவஸ்தைகள் பட்டும் கூட, அக்கட்சியிடம் நம்பிக்கை இழக்காத இவர், மரணம் அடையும் முன், காங்., அலுவலக விலாசமே தந்துள்ளார். இவருக்கு நாம் எல்லாருமே கொள்ளி போடுவோம்…’ என்று, நா தழுதழுக்க கூறிய வார்த்தைகள், அனைவரையும் கண்ணீர் விட செய்தன.
ஒரு எளிய தியாகிக்காக, தியாக சீலரான காமராஜர் சிந்திய கண்ணீர், தூய்மையான அன்பின் வெளிப்பாடாக விளங்கியது.

Source….www.dinamalar.com

Natarajan

 

Leave a comment