எல்லைக் கோடு
………………..
எல்லைக் கோடு இல்லாத இடம் எது இந்த மண்ணில் ? வீட்டுக்கு
வீடு ஒரு எல்லை சுவர் … ஊருக்கு ஊர் ஒரு எல்லை !
நாட்டுக்கு நாடு ஒரு எல்லைக் கோடு ! எல்லைக்கோட்டுக்குள்
அவரவர் அதிகாரம் …ஆதிக்கம் ! மண்ணில் மட்டுமா ?
நதியிலும் கடலிலும் உண்டு இந்த ஆதிக்கம் ! விண் வெளியில்
இது எங்கள் வான் பகுதி , அது உங்கள் வான் பகுதி என்று
பாகுபாடு வேறு ! இத்தனை கோடும் , பாகுபாடும் இந்த
மண்ணில் உள்ள மனிதனுக்கு மட்டுமே ! விண்ணில் பறக்கும்
பறவைக்கும் , கடல் மீனுக்கும் இல்லையே எந்த கோடும் எல்லையும் !
இந்த மண்ணில் எத்தனை நாடு …எத்தனை மனிதர் …மொழி
எத்தனை …மதம் , இனம் எத்தனை எத்தனை ! அத்தனை
பேரையும் மொத்தமாக தாங்குவது ஒரே ஒரு பூமித் தாய்தானே !
அந்த தாயின் மக்கள்தானே இந்த மண்ணின் மனித குலம் !
ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும் மனிதா நீ …இந்த மண்ணை
விட்டு விண்ணுலகம் நீ செல்லும்போது இனம், மொழி,
மதம், நாடு பார்த்து இட ஒதுக்கீடு கிடைக்குமா உனக்கு அங்கும் ?
உன் எல்லை அங்கு எது வரை என்று தெரியுமா உனக்கு ? போட முடியுமா
ஒரு கோடு அங்கே உன்னால் ?
விடை தெரியா கேள்வி அல்லவா இது ? பின் ஏன் இன்று நீ இருக்கும்
மண்ணில் மட்டும் இந்த ஆட்டம் …ஒருவர் மேல் ஒருவர் காட்டம் ?
உன் மனது தொட்டு நீ சொல்லு ,மனிதா … நீ கிழித்த எல்லைக் கோடு ,
உன் தொல்லை தீர்க்கும் கோடா …இல்லை தொல்லை பல
உன்னை தொடர்ந்து வர இந்த மண்ணில் நீ போட்ட ” ரோடா ” ?
Natarajan