வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமசங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே!

1964ல் சோழவரத்தில் இருந்த ஒரு பள்ளி ஆசிரியர், வேலைப்பளு காரணமாக பெரியவாளை தர்சனம் பண்ண போகமுடியவில்லையே என்று ரொம்ப ஏங்கிக் கொண்டிருந்தார். அன்று காரடையார் நோன்பு. பங்குனி மாசம் ராத்ரி பிறந்ததால், நோன்பையும் ராத்ரி பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து அவர் மனைவி தூங்கப் போனாள். அவளுக்கு அற்புதமான ஒரு கனவு!
எந்த ஒரு அவதாரத்தால் காஷாயத்துக்குப் பெருமையோ, அந்த மஹா பெரியவா அந்த அம்மா முன்னால் நிற்கிறார். அவருடைய பாதங்களில் நமஸ்கரிக்கிறாள். பெரியவாளின் தெய்வீக குரல் ஒலிக்கிறது…..
“வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமசங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே! நா……ஒன்னோட ஆத்துல பூஜை பண்ணுவேன்”…
சந்தோஷத்தில் திடுக்கென்று எழுந்தால், கனவு என்று உணர்ந்தாலும், மனஸ் ரொம்ப நிறைந்து இருந்தது. அடிக்கடி அந்தக் கனவை எண்ணி எண்ணி தம்பதிகள் மகிழ்வார்கள். “ஆனாலும், எனக்கு ரொம்ப பேராசைதான்… மஹா பெரியவா நம்மாத்துல பூஜை பண்றார்…ன்னு எப்பிடி ஆசைப்பட்டிருக்கேன்!..” மனைவி சொன்னாள்.
1965ல் நவம்பர் மாசம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை. மத்யான்னம் அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பூணூல், சிகை வைத்துக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு பெரியவர் இறங்கினார்.
“மீனாக்ஷி சுந்தரமையர்…..” பெயரைச்சொல்லி விஜாரித்தார்.
“நாந்தான்…..மீனாட்சிசுந்தரம். வாங்கோ! நீங்க யாருன்னு தெரியலியே!.”
“நா….ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரேன்..பெரியவா திருப்பதிலேர்ந்து மெட்ராஸ் வந்துண்டு இருக்கார்…ஒரொரு 15 மைலுக்கு ஒரு எடத்துல தங்கி பூஜை பண்ணிண்டு, மாஸக் கடைசீல மெட்ராஸ் போகணும்ன்னு உத்தேஸம்!….”
[அவர் அடுத்து சொன்ன செய்தியைக் கேட்டு தம்பதிகள் இருவரும் மயக்கம் போடாத குறைதான் !]
“….நவம்பர் 15 இங்க சோழவரத்துல தங்கப் போறா….அதான்….ஒங்களோட க்ருஹத்தை ரெண்டு நாளைக்கு கொஞ்சம் குடுத்தா…..பெரியவா இங்கேயே தங்கி பூஜை, அனுஷ்டானங்கள் பண்ணிப்பார்…..எப்டி, ஒங்களுக்கு சௌகர்யப்படுமா?.”
“சௌகர்ய…படு…மாவா? எங்களோட பரம பாக்யம்…ன்னா !! எத்தனை நாள் வேணாலும் பெரியவா தங்கிக்கலாம். என்ன ஏற்பாடு பண்ணணுமோ சொல்லுங்கோ!..” உணர்ச்சி வேகத்தில் அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நாங்க மடத்துலேர்ந்தே எல்லா ஏற்பாடும் பண்ணிடுவோம். எடம் மட்டும் குடுத்தா போறும்..”
அன்று சாயங்காலமே ஊர் முக்யஸ்தர்களை கூப்பிட்டு பெரியவா தன் பரிவாரங்களோடு தங்க, தக்க ஏற்பாடுகளை வகுத்தார்கள். ஒரு தெருவையே மடத்துக்கென்று காலி பண்ணிக் குடுத்தார்கள். யானை, ஒட்டகம் கட்ட, ஆபீஸ், பாரிஷதர்கள் ஓய்வெடுக்க, சமையல் செய்ய, சாப்பாடு போட என்று ஒவ்வொருவரும் ஆசை ஆசையாய் ஏற்பாடு பண்ணினார்கள். சுற்று வட்டார க்ராம மக்கள், தான்யம், காய்கறி கொடுத்தனர். செட்டிநாடு ராஜா அரிசி மூட்டைகளை அனுப்பினார்.
நவம்பர் 14 அன்று பூர்ண கும்பத்தோடு பெரியவாளை ஊர் எல்லையிலிருந்தே தக்க மரியாதையோடு அழைத்து வந்தனர். மூன்று நாட்கள் தங்குவது என்று முடிவானது கடைசியில் ஐந்து நாட்கள் தங்கி அத்தனை பேர் மனங்களையும் குளிரப் பண்ணினார்.
——————————————————————
இப்படி ஊர் ஊராக, க்ராமம் க்ராமமாக பாதங்கள் தேய நடந்து, மூன்று கால பூஜை [அதுவும் க்ரமம் தப்பாத பூஜை], அனுஷ்டானம், சமையல் சாப்பாடு, நேரங்காலம் தெரியாமல் கோடிக்கணக்கான பக்தர்கள் குறைகளை கேட்பது, தீர்வு சொல்வது, பரிவாரங்களோடு, மடிசஞ்சி வைத்துக்கொள்ள கூண்டு வண்டி, வெய்யிலோ, மழையோ, அத்வானக்காடோ, ஆகாசம் பார்க்கும் குடிசையோ, கல்லோ, முள்ளோ எல்லாவற்றையும் “ஒன்றே” எனக்கொண்டு, பெரியவா எதற்காக, யாருக்காக தன்னை இப்படி வருத்திக் கொண்டார்? “எல்லாம் நமக்காகத்தான்” என்பதை நாம் துளி உணர்ந்தால் கூட, அதுவே நாம் பெரியவாளுக்கு செய்யும் நமஸ்காரம், பூஜை.
source::::periva.proboards.com
Natarajan